மன நிம்மதியைத் தரும் மறத்தலும் மன்னித்தலும்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

சிலருடன் பேசி நீண்ட நாட்கள் ஆகி இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சை நிறுத்தி இருப்போம். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது எப்படி பேசுவது என்று யோசிப்போம். மீண்டும் பேசக்கூட தோன்றாமல் அப்படியே நின்று விடுவோம். அப்படி ஒரு சூழ்நிலையை சமாளித்த விதத்தை இந்தப் பதிவில் பார்ப்போம். 

என்னுடன் பள்ளியில் படித்த தோழிக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு அவளைப் பார்ப்பதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வேறொரு பள்ளி தோழி  வந்திருந்தாள். அவளும் எங்களுடன் படித்தவளே. அவளுக்கும் அந்தத் தோழியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. அவளைப் பார்த்து எப்படி பேசுவது என்று குழப்பத்தில் இருந்தாள்.

என்ன நடந்தாலும் பரவாயில்லை என இருவரும் உடல்நிலை சரியில்லாத தோழியைப் பார்க்கச் சென்றபோது , அந்தத் தோழி எங்களை எழுந்து வந்து வரவேற்றாள். குறிப்பாக என்னுடன் வந்த தோழியை அவள் எதிர்பார்க்கவில்லை. பட்டென்று அவள் இவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ஏய்! ஒரு முறை நாங்கள் எல்லோரும் உங்கள் வீட்டில் சாப்பிட்ட பொழுது எங்களுக்கெல்லாம் வெறும் சாதமும், சாம்பாரும் பரிமாறி விட்டு, உங்கள் வீட்டில் வேலை செய்த அந்தப் பையனுக்கு மாத்திரம் அந்த சிறுவயதிலேயே உனக்குத் தெரிந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்து பரிமாறினாயே! அதை என்னால் என்றுமே மறக்க முடியாது. அதுதான் உன் உயர்ந்த குணம். வேலைக்காரர்களை ஏனோ தானோ என்று மதிக்காமல் அவரவர்களின் கடுமையான உழைப்பை போற்றி , அவருக்கு தக்க உணவளித்த உன் பண்புதான் எனக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு வரும் என்று கூறி, பகைமையை மறந்து, பாராட்டி மகிழ்ந்தாள். அந்த நிமிடத்திலேயே இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் மறத்தலும் மன்னித்தலும் என்ற பாடத்தினை அப்பொழுது அந்த இரு தோழிகளின் மூலம் புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவர்கள் இருவரும் பகைமையை மறந்து உற்ற தோழிகள் ஆனார்கள். 

இதையும் படியுங்கள்:
சோற்றுக் கற்றாழையின் அழகு + அரோக்கிய நன்மைகள்!
Motivation image

இப்படி நம் உடன் இருந்து பழகுபவர்களிடமிருந்தே பல்வேறு விதமான உயர்ந்த பண்புகளை கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு பாடம். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்று படித்திருக்கிறோமே. அதற்கு ஏற்ப நாமளும் நடந்து கொண்டால் நடப்பது எல்லாம் நலமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com