
நம் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் முதல் வாய்ப்பைக்கூட கடைசி வாய்ப்பாக எண்ணி செயல்படும் போது நம்மிடம் அலட்சியம் இருக்காது. முதல் வாய்ப்பு போனால் என்ன? இன்னும் என்னிடம் பல வாய்ப்புகள் இருக்கிறது என்ற அலட்சியம் வந்துவிட்டால், வெற்றிப் பெறுவது கடினமாகிவிடும். இதை புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு வீட்டில் அம்மாவும், பையனும் உட்கார்ந்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கரெண்ட் கட் ஆகி விடுகிறது. அந்த அம்மா பையனை அழைத்து மெழுகுவர்த்தியை ஏற்ற சொல்கிறார். அந்த பையனும் தீக்குச்சியை பற்ற வைக்கிறான். அது காற்றில் அணைந்து விடுகிறது. மறுபடியும் தீக்குச்சியை எடுத்து பற்ற வைக்கிறான். மறுபடியும் அது காற்றில் அணைந்து விடுகிறது.
இப்படி அவன் தொடர்ந்து செய்துக்கொண்டேயிருக்க கடைசியாக தீப்பெட்டியில் ஒரேயொரு தீக்குச்சிதான் இருக்கிறது. இதைப் பார்த்த அவனுடைய அம்மா, ‘இந்த தீக்குச்சியிலாவது மெழுகுவர்த்தியை ஏற்றிவிடுவாயா?’ என்று கேட்கிறார். உடனே அந்த பையன் ஜன்னலையெல்லாம் சாத்திவிட்டு இப்போது தீக்குச்சியைப் பற்ற வைத்து அவன் மெழுகுவர்த்தியை ஏற்றிவிடுகிறான். இதைப் பார்த்துவிட்டு அந்த பையன், ‘அம்மா! நான் மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டேன்’ என்று மகிழ்ச்சியாக கூறுகிறான்.
அப்போது திடீரென்று அந்த மெழுகுவர்த்தி அணைந்து விடுகிறது. இதைப் பார்த்துவிட்டு அம்மா கூறுகிறார், ‘நம்மில் பலருக்கு கடைசி தீக்குச்சியை பயன்படுத்தும் போது இருக்கும் கவனம் முதல் தீக்குச்சியை பயன்படுத்தும்போது இருப்பதில்லை. இந்த கவனம் உனக்கு முன்பே இருந்திருந்தால், இத்தனை தீக்குச்சுகளும் வீணாகியிருக்காது. நாமும் இருட்டில் உட்கார்ந்துக் கொண்டிருக்கும் நிலையும் வந்திருக்காது’ என்று கூறினார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போலத்தான். வாழ்க்கையில் எந்த விஷயமாக இருந்தாலும், முதல் வாய்ப்பை கடைசி வாய்ப்பாக எண்ணி போராட வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக முதல் வாய்ப்பிலேயே ஜெயித்துவிடலாம். ஆனால், ‘அதுவே இந்த வாய்ப்பு போனால் என்ன நம்மிடம்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கிறதே?’ என்று எண்ணினால் கடைசியில் இந்த அணைந்த மெழுகுவர்த்தி போலத்தான் நம் வாழ்க்கையும் மாறிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் புரிந்துக்கொண்டு நடந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். முயற்சித்துப் பாருங்கள்.