மிருகங்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அன்றாட வெற்றி ரகசியங்கள்!

wild animals
Motivational articles
Published on

மது அறநூல்கள் எங்கிருந்தாலும் யாரிடமிருந்தும் நல்லனவற்றைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்து கின்றன. அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களை மிருகங் களிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் கூடக் கற்கலாம். இப்படி இருபது குணங்களை நமது அறநூல் பட்டியலிடுகிறது.

சிங்கத்திடமிருந்து ஒரு குணத்தையும், கொக்கிடமிருந்து ஒரு குணத்தையும், சேவலிடமிருந்து நான்கு குணங்களையும் காக்கையிடமிருந்து ஐந்து குணங்களையும், நாயிடமிருந்து ஆறு குணங்களையும் கழுதையிடமிருந்து மூன்று குணங்களையும் நாம் கற்கலாம்.

சிங்கத்திடமிருந்து கற்க வேண்டிய ஒரு குணம்

ஒரு வேலை சிறியதாக இருந்தாலும் சரி அல்லது பெரியதாக இருந்தாலும் சரி, அதை முடிக்க உங்கள் முழு பலத்தையும் உபயோகப்படுத்த வேண்டும். இதுதான் சிங்கத்திடமிருந்து ஒருவர் கற்க வேண்டிய ஒரு குணமாகும்.

கொக்கிடமிருந்து கற்க வேண்டிய ஒரு குணம்

புத்திசாலியான ஒருவன் நேரமும் காலமும் இடமும் நமக்கு ஒத்து இருக்கும் போதுதான் நமது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். இப்படி நமக்கு வெற்றி தரும் தருணத்தைக் காத்திருந்து பெற்று வெற்றி அடைவதைக் கொக்கிடமிருந்து கற்கவேண்டும்.

ஔவையார் மூதுரையில் கூறும் அறிவுரை இது:

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

சேவலிடமிருந்து கற்க வேண்டிய நான்கு குணங்கள்

காலையில் சீக்கிரமே எழுந்திருப்பது, எதிரியுடன் சண்டை போடத் தயாராக இருப்பது, தனக்குக் கிடைத்த ஆதாயங்களை புதிதாக வருபவருடன் பகிர்ந்து கொள்வது, சந்தோஷத்தை வலியப் பெற்று அனுபவிப்பது ஆகிய இந்த நான்கு குணங்களையும் சேவலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காலம் பொன்னானது: வீணடிப்பதை நிறுத்தி வாழத் தொடங்குங்கள்!
wild animals

காக்கையிடமிருந்து கற்க வேண்டிய ஐந்து குணங்கள்

உடலுறவில் ரகசியத்தைப் பாதுகாப்பது, தைரியமாக இருப்பது, பரபரப்பு அல்லது மனநடுக்கம் கொள்ளாமல் இருப்பது, எதிர்காலத்திற்குச் சேமித்து வைத்துக் கொள்வது, எந்த ஒன்றையும் உடனடியாக அல்லது அவசரம் அவசரமாக நம்பாமல் இருப்பது ஆகிய இந்து ஐந்து குணங்களையும் காக்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

நாயிடமிருந்து கற்க வேண்டிய ஆறு குணங்கள்

நிறைய உண்பது. குறைவாகவே கிடைத்தாலும் அதில் திருப்தி அடைவது, உடனடியாக தூக்கம் அடைவது, நல்ல தோழனாக இருப்பது, நம்பிக்கைக்குரிய பணியாளனாகவும் இருப்பது, அதிக தைரியத்துடன் இருப்பது ஆகிய இந்த ஆறு குணங்களையும் நாயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கழுதையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று குணங்கள்

எவ்வளவு களைத்திருந்தாலும் சுமையைச் சுமந்து செல்வது, மழையோ வெய்யிலோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலையைச் செய்து முடிப்பது, திருப்தியுடன் செல்வது ஆகிய இந்த மூன்று குணங்களையும் கழுதையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆக, இப்படி இருபது குணங்களை சிங்கம், கொக்கு, சேவல், காக்கை, நாய், கழுதை ஆகியவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டு அன்றாட வாழ்க்கையில் கடைப் பிடித்தால் ஒரு நாளும் நமக்குத் தோல்வியே கிடையாது. என்றுமே வெற்றிதான்! எதிலுமே வெற்றிதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com