Everything is better
Abdul kalam

செய்யும் தொழில் சிறப்பானால் எல்லாம் சிறப்பே!

Published on

சிலர் எப்போதும் வெளியில் சென்றாலும் வீட்டில் இருந்தாலும் ஆடை அணிகலன்கள் அணிவதில் அதிகம் அக்கறை காட்டுவார்கள். எப்பொழுதுமே அழகாக பரிமளிப்பார்கள். ஆதலால் வீட்டிற்கு யார் வந்தாலும் சங்கடமில்லாமல் எதிர்கொண்டு அழைக்க, உரையாட ஏதுவாக இருக்கும். சட்டென்று வெளியில் செல்வதாக இருந்தாலும், யாரையாவது பெரியவர்களை சந்திக்க நேர்வதாக இருந்தாலும் சங்கடம் இன்றி செயல்படுவர். சட்டென்று போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கூட  உடன்படுவார்கள். 

மற்றும் சிலர் செய்யும் தொழிலை மட்டுமே தெய்வமாக நினைத்துப் போற்றுவார்கள். அவர்கள் ஆடை, அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். மனது ஒருமித்து செய்யும் வேலையிலே ஒன்றி விடுவதால் வேறு எதிலும் ஈடுபாடு இல்லாமல் அதிலேயே கவனக்குவியலை வைத்திருப்பார்கள். அப்படி உயர் தொழில் புரிபவர்களை, மிகப்பெரும் தலைவர்கள் சந்திக்க நேரிட்டால் அவர்களின் ஆடை அணிகலங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதை விடுத்து தொழில் நேர்த்தியை மட்டுமே அதில் அவர் செயல்படும் அறிவுப்பூர்வமான சிந்தனைகளை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். என்றாலும் நாம் இந்த உடையில் மிகப்பெரும் தலைவரை சந்திக்கப் போகிறோமே என்ற தயக்கம் சிலருக்கு ஏற்படுவது உண்டு.

அதுபோல் ஒருமுறை இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் அது. மும்பை நேர விஞ்ஞான மையத்தில் அப்துல் கலாம் உரையாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியிருந்தனர். நேரு விஞ்ஞான மையத்தில் இருந்த கலாமை அழைத்த இஸ்ரோ தலைவர் தவான், பிரதமர் உங்களைச் சந்திக்க விரும்புகின்றார். நாம் இருவரும் அவரைச் சென்று பார்ப்போம் என்று அழைக்க, "நான் சாதாரண சட்டை அணிந்துள்ளேனே? " என்று கலாம் தயங்கினார். "உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று கூறி பிரதமரை சந்திக்க கலாமை அழைத்துச் சென்றார் தவான். 

இதையும் படியுங்கள்:
முதலில் கற்றுக் கொள்வோம் பின்பு பெற்றுக் கொள்வோம்!
Everything is better

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். என்கிறார் திருவள்ளுவர்.  பிறப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவரவர் செய்யும் தொழிலின் வேறுபாட்டால் சிறப்பு அடைவர்.

அதேபோல் கலாம் அவர்கள் செய்த தொழில் சிறப்பும் மேன்மையும் அடைந்திருந்ததால், அவர் சாதாரண உடையில் இருந்தாலும் அதற்கு எந்தவிதமான குறைபாடும் நேரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் செய்த தொழிலின் சிறப்பால் அந்த ஆடையே பேரழகு நிறைந்ததாக இருந்தது. 

உயர்வான உள்ளமும், தொழிலும், நடத்தையும் இருக்கும் பொழுது அவர்கள் அணிந்திருக்கும் ஆடை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதனால் எந்த இழுக்கும் நேராது. அவர்கள் அணிந்திருக்கும் ஆடையே பேரழகு ஆடை என்பதற்கு காந்தி, கலாம் போன்றவர்கள் உதாரணமானவர்கள்.

logo
Kalki Online
kalkionline.com