தோல்விகளில் இருந்துதான் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். வெற்றியைக் காட்டிலும் தோல்விதான் நமக்கு வாழ்வில் நிறைய கற்றுத்தருகிறது. தோல்வி என்பது நாம் செய்த வேலையில் எங்கே என்ன தவறு நடந்தது என்பதை அறிந்து கொண்டு மாற்றவும், நம்மை மேம்படுத்தவும் உதவுகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும், எப்படி முயற்சிக்க வேண்டும் என்பதையும் நமக்கு கற்பிக்கிறது. உண்மையான வெற்றி என்பது சிக்கலான சூழ்நிலையை சிறப்பாக கையாளுதல்.
விஷயங்கள் தவறாக நடக்கும் பொழுது சரியான பாதையை மீண்டும் தேர்ந்தெடுத்து வெற்றி பற தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதையும், வெற்றி பெற்ற மனிதர்களின் செயல்களைக் கண்டு உத்வேகம் கொண்டு செயலாற்றவும் கற்றுக் கொள்கிறோம். பொதுவாகவே வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் சிந்தனை, செயல்கள் மற்றும் இலக்குகளை அடிக்கடி ஆய்வு செய்ய நேரம் ஒதுகின்றனர். அவர்களின் இந்த சுய விமர்சன சிந்தனை அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவும் மேம்படவும் வழி செய்கிறது. அதைப் பின்பற்றினாலே நம்மாலும் தோல்வியிலிருந்து மீண்டு வந்து வாழ்வில் வெற்றி காணமுடியும்.
தோல்வி என்ற வாழ்க்கை பாடம் நம்மைப் பற்றி நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை நமக்கு கற்றுத் தருகிறது. எது முக்கியம், எதற்கு முன்னுரிமைகள் தர வேண்டும், எப்படித் தடைகளை உடைத்தெறிந்து வளரலாம் என்பதை சொல்லித் தருகிறது. தன்னம்பிக்கை குறைவதால் குறிக்கோளை மாற்றிக் கொண்டே இருப்பதும், நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்ற உணர்வும் மேலோங்குவதும் தோல்வி குறித்த அச்சத்தால் உண்டாவதாகும். இதற்கு தோல்விதான் வெற்றிக்கான படிக்கட்டு என்பதை உணர ஆரம்பித்தாலே பயம் விலகிவிடும்.
தோல்வி ஒரு சிறந்த ஆசான். அது கடினமான காலங்களில் நம்மை நிலைத்திருக்க கற்றுத் தருகிறது. தோல்வி நம் விடாமுயற்சியின் திறனை மெருகூட்டுகிறது. நம் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள தவறினால் மட்டுமே உண்மையான தோல்வியாக கருதப்படும். இல்லையெனில் தோல்வி என்பது ஒரு சிறந்த பாடமாக வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு வழியாகவே பார்க்கப்படுகிறது. குழந்தைகள் நடக்க கற்றுக் கொள்ளும் பொழுது பலமுறை தரையில் விழுந்து எழுவார்கள். அதற்காக பயந்து அவர்கள் நடக்க முயற்சிப்பதை நிறுத்துவதில்லை. அதுபோல்தான் தோல்வியைக் கண்டு துவளாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
தோல்விதான் நம்முடைய நண்பர்களையும் உறவினர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. தோல்வி அடையும் சமயத்தில் நமக்கு தோள் கொடுத்து நம்முடன் இருப்பவர்களே நம்முடைய உண்மையான நலம் விரும்பிகள். தோல்விதான் நமக்கு மன உறுதியையும் மனவலிமையையும் தருகிறது. தோல்வி என்பது கற்றுக் கொள்வது. வெற்றி என்பது பெற்றுக் கொள்வது. முதலில் கற்றுக் கொள்வோம் பின்பு பெற்றுக் கொள்வோம். தோல்வியை பலவீனமாகக் கருதாமல் பலமாய் கருதி சிறந்த அனுபவமாக எடுத்துக் கொள்வோம்.
எதிர்கால வெற்றியை இலக்காக கொண்டு உழைத்திட தோல்விகள் தோற்றுப் போகும். தோல்வி அடைவது என்பது உண்மையில் வலிக்கத்தான் செய்யும். இருப்பினும் நாம் தொடர்ந்து அந்த வலியுடனேயே இருக்க விரும்புவோமா அல்லது அதிலிருந்து வெளியேற முயற்சிப்போமா? தோல்வியிலிருந்து வெளிவர முதலில் நாம் எண்ண வேண்டியது தோல்வி என்பது நிரந்தரம் அல்ல என்பதுதான். நம்பிக்கையுடன் தொடர்ந்து பயிற்சி செய்ய, விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சிக்க வெற்றி என்பதுதானே நம்மைத் தேடிவரும்.