
"வாழ்க்கையே ஒரு பரிசோதனைதான். அதில் அதிக பரிசோதனைகள் நல்லதே" இப்படிச் சொன்னவர் சாதாரண ஆளில்லை அமெரிக்காவின் மிகச்சிறந்த கட்டுரையாளரும் விரிவுரையாளரும் தத்துவவாதியுமான ரால்ஃப் வால்டோ எமர்சன் என்பவர்தான். அதெப்படி பயமுறுத்தும் பரிசோதனைகள் வெற்றியைத் தரும்? பார்ப்போம்.
ஒருவருக்கு திடீரென்று மயக்கம் வருகிறது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மருத்துவர் எழுதித்தரும் பரிசோதனைக்கு அவர் உட்படுகிறார். அப்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அவரும் தன் உடல் நலம் காப்பதற்காக அந்த சிகிச்சையை மேற்கொள்கிறார். இந்த இடத்தில் அந்த பரிசோதனை என்பது உடல் நலத்தின் வெற்றிக்கு ஒரு வழியாகிறது. இது உடல் நலத்துக்கான பரிசோதனை.
இதுவே ஒருவர் வாழ்க்கையில் பல பரிசோதனைகளை செயல்படுத்தி அதிலிருந்து அனுபவங்களை கற்றுக்கொண்டு அதன் மூலம் பெறுவதுதான் வெற்றி எனப்படுவது. ஆகவே இந்த வெற்றிக்கு வழியாக இருப்பது இது போன்ற பரிசோதனைகள்தான் எனலாம்.
ஒரு சிறு குழந்தை வீடு கட்டுவதற்காக தந்தை பில்டிங் செட் வாங்கி தருகிறார். அந்த குழந்தையும் தனக்கு தெரிந்தது போல் எல்லாம் அதை வைத்து ஏதோ ஒரு வீட்டை கட்டும். அந்த வீடு சரியல்ல என்பது தந்தைக்கும் தெரியும். ஆனால் அந்த குழந்தை பெரியவனாகவும் வரை திரும்பத் திரும்ப பரிசோதனையை மேற்கொண்டு அந்த பில்டிங் செட்டில் சரியான வீட்டை கட்டும் வரை தனது முயற்சியை விடுவதில்லை. அந்த பரிசோதனைகள்தான் அந்த குழந்தைக்கு கிடைக்கும் வெற்றி. சரியான முறையில் ஒரு வீட்டினை அந்தக் குழந்தை கட்டும்போது அதற்கு வழிவகுத்த பரிசோதனைகள் வெற்றிக்கு வழியை தேடி தந்தது அல்லவா?
இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் மேற்கொள்ளும் பரிசோதனைகளை சோதனைகளாக நினைக்காமல் அதுவே சாதனைகளுக்கு அடிப்படை என்பதை நினைத்து அவற்றை மேற்கொண்டால், அதிலுள்ள சிரமங்கள் மறைந்து நமக்கு மேலும் ஒரு உத்வேகம் கிடைப்பது உறுதி. எந்த ஒரு விஷயத்தையும் யாரும் உடனே கற்றுக் கொண்டதாக சரித்திரம் கிடையாது.
இதற்கு நமது இந்திய விஞ்ஞானிகள் சரியான உதாரணம். பல வருடங்களாக மேற்கொண்ட பல கட்டப் பரிசோதனைகள் மூலமாக, இறுதியில் நிலவில் சந்திராயனை நிறுத்தி உலகை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் இந்திய விஞ்ஞானிகள். இடையே வந்த தோல்வி எப்படி எங்கு ஏன் ஏற்பட்டது என்பதை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அதற்கு தீர்வுகள் தந்து சாதிக்க உதவியது பரிசோதனைகள்தான்.
எந்தத் துறையாக இருந்தாலும் சோதனைகள் வரத்தான் செய்யும். சோதனை என்றால் முடங்கி விடாமல் பரிசோதனைகள் மூலம் சாதனையாக மாற்றுவதே நமது வெற்றி.
செயல்களில் மட்டுமல்ல மனித மனங்களிலும் இந்த பரிசோதனைகள் பங்கு வகிக்கிறது. ஆம். ஒரு மனிதரைப் பற்றி அறிவதற்கு அவர் மீதான பரிசோதனைகள் அவசியமாகிறது. அதேபோல் சில விஷயங்களில் முடிவெடுக்க மனம் தடுமாறும் நேரத்திலும் நாம் மேற்கொள்ளும் சுயபரிசோதனை தெளிவைத் தர உதவுகிறது.
ரால்ஃப் கூறியது போல் வாழ்க்கையே ஒரு பரிசோதனை எனும்போது அதில் நாம் சந்திக்கும் பரிசோதனைகள் மூலம் பெறும் அனுபவங்கள் நிச்சயம் வெற்றி நோக்கி நம்மை இட்டுச்செல்லும்.