

இன்னும் சில நாட்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வர உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு காலம் வந்தாலே பயம் தொற்றிக்கொள்ளும். தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற, திறம்பட படிப்பதும், அதை நினைவில் வைத்துக் கொள்வதும், தெளிவான பாடத்திட்ட அறிவும், முறையான கால அட்டவணையும், புரிந்து, தொடர்ந்து படித்தலும் அவசியம். முக்கியமான தலைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, மாதிரி வினாத்தாள்களைப் பயிற்சி செய்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதன் மூலம் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, சிறந்த முடிவுகளைப் பெற முடியும்.
அதேசமயம், மாணவர்கள் பெரும்பாலும் சிக்கலான பாடப்பகுதிகளை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள். சரியான முறையில் படித்தால் மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி அடைய முடியும்.
பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்: பாடத்திட்டத்தை (Syllabus) முழுமையாகப் புரிந்துகொண்டு, முக்கியமான மற்றும் கடினமான தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கத் தொடங்குங்கள். அதாவது உங்கள் பாடத்தில் முதலில் தலைப்பை ஆய்வு செய்யுங்கள். தலைப்புகள், துணைத்தலைப்புகள், படங்கள், காட்சிப்படங்கள் ஆகியவற்றை முதலில் தெளிவாக வாசியுங்கள். உதாரணமாக, மாசுபாடு பாடப்பகுதியை பற்றி படிக்கிறீர்கள் என்றால், மாசுபாட்டின் வகைகள், அவற்றின் காரணங்கள் மற்றும் தீர்வுகள் போன்ற துணைத் தலைப்புகளைப் பாருங்கள்.
கேள்வி(Question): தலைப்பை ஆய்வு செய்யும்போது மனதில் தோன்றும் கேள்விகளை தாளில் எழுதுங்கள். தலைப்புகள் மற்றும் துணை தலைப்புகளின் அடிப்படையில் கேள்விகளை உருவாக்குங்கள்.
படிக்கவும் (Read): பாடத்தை முழுமையாக வாசியுங்கள். நீங்கள் எழுதிய கேள்விக்கான பதில்களை கண்டறியுங்கள். ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படியுங்கள். முக்கியமான விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். படித்ததை மறக்காமல் இருக்க, அடிக்கடி Revision செய்வது மிக முக்கியம். அதேபோல் கடந்த ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது, நேர மேலாண்மை மற்றும் நம்பிக்கையை வளர்க்கும்.
கால அட்டவணை (Study Plan): ஒவ்வொரு பாடத்திற்கும் நேரம் ஒதுக்கி, யதார்த்தமான கால அட்டவணையை உருவாக்கி தொடர்ந்து பின்பற்றவும். அதாவது உங்களுக்கு நன்றாக தெரியும் பாடத்திற்கு குறைந்த நேரமும், முக்கியமான மற்றும் கடினமான பாடங்களுக்கு அதிக நேரமும் ஒதுக்கி படியுங்கள். முக்கியமான சூத்திரங்கள், தேதிகள் மற்றும் கருத்துக்களைத் தனி நோட்டில் எழுதி வைத்துக் கொள்வது, கடைசி நேரத் திருப்புதலுக்கு உதவும்.
திருப்பிக்கூறுதல் (Recite): கடினமான பாடப் பகுதியில் வரும் பதில்களை சத்தமாக விளக்கி சொல்ல முயற்சியுங்கள். அதாவது, மாணவர்கள் கற்றுக்கொண்டதை, வேறொருவருக்கு சொல்லிக் கொடுப்பதுபோல, தங்களுக்குள்ளே சொல்ல முயற்சிக்க வேண்டும். இந்த முறை பாடங்களை நன்றாக புரிந்து கொண்டு நினைவில் நிறுத்த உதவும். பாடங்களை புரிந்து படிப்பது, தேர்வில் நீண்ட நேரம் நினைவில் இருக்க உதவும்.
மதிப்பீடு (Review): பாடப்பகுதியின் இறுதியை அடைந்ததும், நீங்கள் எழுதிய அனைத்து கேள்விக்கான பதில்களை திருத்தி மதிப்பீடு செய்யுங்கள். இந்த கடைசி படிநிலை, பாடப்பகுதியை நீண்டகாலத்துக்கு நினைவில் நிறுத்தவும், பின்னர் எளிதாக ஞாபகத்தில் கொண்டு வரவும் உதவும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம்: தேர்வு நேரத்தில் போதுமான தூக்கம், சத்தான உணவு மற்றும் போதிய ஓய்வு எடுப்பது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் தேர்வு பயத்தை போக்கும்.
தேர்வு நேர உத்திகள்:
வினாத்தாள் வாசிப்பு: தேர்வு எழுதும் போது முதலில் வினாத்தாளைப் பெற்றவுடன், கேள்விகளை நிதானமாக வாசித்து, தெரிந்த கேள்விகளை முதலில் தெளிவாக எழுதத் திட்டமிடவும்.
தெளிவான எழுத்து: விடைகளை பாயிண்ட் பாயிண்டாக (Points), தலைப்பிட்டு எழுதுவது நல்ல மதிப்பெண்களைப் பெற உதவும்.
நேர மேலாண்மை: ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி, அந்த கேள்வியை மனதில் உள்வாங்கி விடையை நினைவில் நிறுத்திய விடைகளைச் சரிபார்க்கவும் சிறிது நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத ஆரம்பிக்கவும்.
இவற்றைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுவதன் மூலம், மாணாக்கர்கள் வரும் 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
எனவே மனதை அமைதியாக வைத்திருப்பது, தேர்வு நேரத்தில் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்களை பெற உதவும்.