
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. இதுவரை படிக்காமல் இருந்து விட்டாலும் கவலை வேண்டாம். சில குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் சுலபமாக மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். அத்தகைய வழிமுறைகளை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற கேள்வித்தாள்களை சேகரித்து அதற்கான விடைகளை எழுதி மனதில் பதித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்படும். இதனால் இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒவ்வொரு பாடத்தையும் ஒரு மணிநேரம் ஆழ்ந்து படியுங்கள். இடையில் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
புத்தகத்திலிருந்துதான் அனைத்துக் கேள்விகளையும் கேட்பார்கள். எனவே புத்தத்தில் முக்கியமான விஷயங்களை அடிக்கோடிடுங்கள். அடிக்கோடிட்ட வரிகளை அடிக்கடி படியுங்கள்.
இரவில் அதிகம் கண் விழிக்க வேண்டாம். பத்து மணிக்கு தூங்கச் சென்று அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்குங்கள். அதிகாலை அமைதி பாடங்களை மனதில் சுலபமாக பதித்துக்கொள்ள உதவும்.
கணக்கு ஃபார்முலாக்களை பெரிய எழுத்தில் சார்ட் பேப்பரில் எழுதி உங்கள் அறையில் மாட்டி வையுங்கள். அடிக்கடி பார்க்கும்போது அவை உங்களையும் அறியாமல் மனதில் பதிந்து போகும்.
முக்கியமாக உங்கள் கையெழுத்து நன்றாக இருக்கவேண்டும். கையெழுத்து சரியில்லை என்றால் நீங்கள் சரியான பதில்களை எழுதியிருந்தாலும் கூட அவை தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடும்.
உடன் படிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விவாதம் செய்யுங்கள். இதனால் கடினமான விடைகள் கூட எளிதில் மனதில் நிரந்தரமாகப் பதியும்.
மாணவர்களுக்கான பாடங்களை ஆசிரியர்கள் தொலைக்காட்சியில் தோன்றி நடத்துகிறார்கள். அவற்றைப் பார்ப்பது மிகவும் நன்மையுள்ளதாக அமையும்.
எந்த பாடத்தையும் புத்தகத்தில் உள்ளபடி மனப்பாடம் செய்யாமல் அதை நன்றாகப் புரிந்து கொண்டு படிக்க முயற்சி செய்யுங்கள்.
ஒரு மதிப்பெண் இரண்டு மதிப்பெண் கேள்விகளை எழுதினால் முழு மதிப்பெண்களையும் சுலபமாகப் பெறலாம். சுலபமாக தேர்ச்சியும் பெறலாம். இதில் அதிக கவனம் செலுத்துங்கள்.
படங்களை பலமுறை வரைந்து பாருங்கள். பாகங்களைக் குறித்துப் பழகுங்கள். இதிலும் சுலபமாக முழுமதிப்பெண்களையும் வாங்க முடியும்.
கூடுமானவரை கேள்வித்தாளில் உள்ளபடி வரிசைப்படி அதாவது Part A, Part B, Part C என வரிசையாக விடை எழுத முயலுங்கள். திருத்தும் ஆசிரியருக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க இது உதவும்.
கேள்வித்தாளில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்ப விடையளிக்க வேண்டும். உதாரணமான மூன்று மதிப்பெண் கேள்விக்கு மூன்று சரியான பாயிண்ட்களை எழுதினால் போதும். அதிகபட்சமாக நான்கு பாயிண்ட்டுகளை எழுதலாம்.
எக்காரணத்தைக் கொண்டும் சிவப்பு வண்ணப் பேனாவை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. இதைத்தவிர நீங்கள் படம் வரைய, அடிக்கோடிட்ட பாகங்களைக் குறிக்க வேறு எந்த வண்ணத்தை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
தேர்வு அன்றைக்கு காலை ஏழரை மணிக்கு மேல் எதையும் படிக்கக் கூடாது. தேர்வு அன்று மனது ஒருவித பதட்டத்தில் இருக்கும். அந்த சூழ்நிலையில் படித்தால் அது குழப்பத்திலே முடியும்.
தேர்வுக்குத் தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் ஆகியவற்றை ஒருநாள் முன்னதாகவே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பேனா மட்டும் இரண்டு எடுத்துக்கொள்ளுங்கள். ஹால்டிக்கெட் ரொம்ப முக்கியம்.
தேர்வு காலை பத்து மணிக்கு துவங்குகிறது என்றால் நீங்கள் ஒன்பதரை மணிக்கு பள்ளிக்குச் சென்றால் போதும். மிகவும் முன்னதாகவே பள்ளிக்குச் சென்றல் சகமாணவர்கள் மூலமாக உங்களுக்கு தேவையற்ற பலவிதமான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேர்வு விடைத்தாளில் பதிவு எண்னை மறக்காமல் எழுதுங்கள். விடைகளை எழுதி முடித்ததும் கூடுதல் தாள்களை (Additional Book) அடுக்கி நன்றாக கட்டுங்கள். முழு கவனத்தோடு விடைத்தாள்களை வரிசைப்படி அதாவது முதல் புத்தகம் மற்றும் கூடுதல் விடைத்தாள் அதாவது அடிஷனல் புக் 1, 2, 3, 4, 5 என வரிசைப்படி வைத்துக் கட்ட வேண்டும். தாள்களை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கும் முன்னர் மீண்டும் ஒருமுறை அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.
அனைத்துத் தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறு பெற்று வாழ்க்கையில் சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துகள்.