30 வயதிற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்! 

Facts you should know before turning 30.
Facts you should know before turning 30.

வாழ்க்கை அனைவருக்குமே ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களைக் கொடுக்கிறது. நான் என்னுடைய 25 வயதிற்குப் பிறகுதான் வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளை உணர ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ஆணாக இந்த சமூகத்தில் என்னுடைய எதிர்பார்ப்புகள், என் மீதான பிறரது எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தையும் புரிந்து கொண்டு நிம்மதியாக இருப்பதே மிகவும் கடினமானதுதான். எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய 30 வயதிற்குள் சில உண்மைகளை தெரிந்து கொண்டால், வாழ்க்கையை ஓரளவுக்கு மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும். 

1. நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட ஆசை வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது உங்களுடைய விருப்பமாக இருக்கலாம். அல்லது பிறர் முன்னே ஒரு நிலைக்கு வந்து காட்ட வேண்டும் என ஆசைப்படலாம். ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் செய்து சாதித்து காட்டினாலும், இறுதியில் மரணத்தை தவிர்க்க முடியாது. நீங்கள் இறக்கத்தான் போகிறீர்கள். எனவே வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தபடி அந்தந்த தருணங்களில் ரசித்து வாழுங்கள். அந்தந்த வயதில் செய்ய வேண்டிய விஷயங்களை, தவறாமல் செய்யுங்கள். இது உங்களது வாழ்க்கையில் ஒரு முழுமையை ஏற்படுத்தும். 

2. யாரும் இறுதிவரை உங்களுடன் இருக்க மாட்டார்கள்: இது உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கலாம். ஆனால் முற்றிலும் உண்மை. நீங்கள் விரும்பும் யாருமே உங்களுடன் இறுதி வரை இருக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்கு பிடித்தவாறு இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் உங்களுடன் இருக்க விரும்புவார்கள். கொஞ்சம் உங்களது குணம் மாறினாலும், உங்களை பிறர் விட்டுப் போகவே நினைப்பார்கள். இது தவிர எதோ ஒரு தருணத்தில் அனைவருமே உங்களை விட்டு பிரியத்தான் போகிறார்கள். எனவே வாழ்க்கையில் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள். தனித்து வாழும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் ஒரு தைரியத்தை ஏற்படுத்தும். 

3. உங்களுக்கு நீங்கள் மட்டுமே: எல்லா தருணங்களிலும் உங்களுக்கு ஒருவரால் உதவ முடியும் என்றால் அது நீங்கள் மட்டுமே. எல்லா மோசமான சூழ்நிலைகளில் இருந்தும் உங்களை நீங்களே முழுமையாக காப்பாற்ற முடியும். பிறரால் ஓரளவுக்கு தான் உதவ முடியும், ஆனால் முழுமையாக மீண்டு வருவதற்கு உங்களுடைய உதவி அதிகம் தேவை. எனவே உங்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலை பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களை மெருகேற்றும் விஷயங்களில் அதிகம் ஈடுபடுங்கள். 

4. பொருட்களும் உடைமைகளும் உங்களுக்கு முழுமையான மகிழ்ச்சியையும், திருப்தியையும் கொடுக்காது: உங்களிடம் ஏதோ ஒரு சாதனம் இருந்தால் மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என எண்ணாதீர்கள். சிலர் வருடத்திற்கு ஒரு புது போன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதேபோல சிலர் அவ்வப்போது தங்களின் இருசக்கர வாகனத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு எலக்ட்ரானிக் கேஜெட் வாங்குவது அதிகம் பிடிக்கும். ஆனால் இவை எதுவுமே ஒரு கட்டத்திற்கு மேல் முழுமையான மகிழ்ச்சியை அளிப்பதில்லை. நீங்கள் ஆத்மார்த்தமாக உணரும் விஷயங்களை உங்களுக்கான மகிழ்ச்சியை கொடுக்கும். உறவுகளில் இருந்து இத்தகைய உணர்வை நீங்கள் அடையலாம். எனவே உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் அடிமையாகாதீர்கள். 

இதையும் படியுங்கள்:
Kakapo: உலகில் உள்ள ஒரே பறக்காத கிளி இனம் இதுதான்!
Facts you should know before turning 30.

5. மாற்றத்தை தவிர்க்க முடியாது: இந்த உலகில் அனைத்திற்குமே மாற்று என்பது உண்டு. நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களைவிட வேறு யாரும் அந்த வேலையை செய்ய மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் வேலையை விட்டு சென்ற மறுநாளே அந்த இடத்தில் வேறு ஒரு நபர் பணியமரத்தப்படுவார். இதுபோல எல்லா இடங்களிலுமே மாற்றம் என்பது கட்டாயம் இருக்கும். எனவே அதை ஏற்றுக்கொண்டு, நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை வேறு விதமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். 

இந்த 5 விஷயங்களை நீங்கள் புரிந்து கொண்டாலே, வாழ்க்கையில் எல்லாமே உங்களுக்கு சாதாரணமாகத் தெரிந்துவிடும். வாழ்க்கையில் எப்போதும் நிம்மதியாக இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com