வாழ்க்கையில் எப்போதும் தோல்விகள் மட்டுமே வந்து கொண்டு இருக்காது. இருப்பதைக் கொண்டு முயற்சி செய்தால் சீக்கிரமாக வெற்றி கிடைக்கும் .
இந்த உலகத்திலேயே கஷ்டப்படுவது நாமாக மட்டும்தான் இருக்கும். வேற எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவர்கள் நம்மை விட பெரிய அளவில் பிரச்னையில் துவண்டு கொண்டிருப்பார்கள். அது நமக்கு தெரிவதே இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக நான் கேட்டு அறிந்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு விறகு வெட்டி ஒருவர் ஒரு ஊரில் வந்திருக்கிறார். அவர் அன்றைய பொழுது வெட்டும் விறகுகளை விற்றால் தான் அவருடைய வீட்டில் சாப்பாடு. தான் விற்கும் பணத்தில் அன்றைய சாப்பாடு மட்டும்தான் உண்ண முடிகிறது. மீதம் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த வேதனையில் இருக்கிறார். அப்போது அவருடைய காலில் நலிந்து நொந்து போய் இருந்த செருப்பும் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு பிய்ந்து போகிறது. அவரும் அதை எப்படியாவது சரி செய்து போட்டு விடலாம் என்று முயற்சி செய்கிறார்.
ஆனால் அங்கே அது எடுபடவில்லை. அங்கு தைப்பதற்கு கூட எந்த இடமும் இல்லை. அந்த அளவிற்கு அங்கே முள் குத்தி எல்லாமே பிஞ்சு போய் இருக்கிறது. இதற்கு மேலும் இதை பயன்படுத்த முடியாது என்று அந்த விறகு வெட்டி அதை தூக்கி எறிந்து விடுகிறார்.
வழக்கம் போல அவர் விறகு வெட்ட செல்கிறார். ஆனால் காலில் செருப்பு இல்லாததால் காலை முட்கள் பதம் பார்க்கிறது. அவரும் வேறு வழியில்லாமல் வெறுங்காலோடு அன்றைய பொழுதை சமாளித்து விடுகிறார்.
பிறகு அடுத்த நாள் எப்படியாவது இன்றைய பணத்தில் செருப்பு வாங்கி விட வேண்டும் என்று அவரும் நினைக்கிறார். ஆனால் கிடைக்கும் சொற்ப பணத்தில் அவருக்கு வீட்டுக்கு குழந்தைகளுக்கான சாப்பாட்டுக்கு மட்டும்தான் வாங்க முடிகிறது. இப்படியே அடுத்த நாள் அடுத்த நாள் என்று மாத கணக்கை தாண்டி விடுகிறது.
அந்த விறகு வெட்டியின் காலில் முட்கள் படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அப்போது அவருக்கு கடவுள் மீது கோபம் வருகிறது. நான் உன்னிடம் என்ன கேட்டேன் . எனக்கு பெரிய ஆடம்பரமாக எதுவும் தேவையில்லை. இப்போது இருக்கிற லெவலுக்கு ஒரு செருப்பு வாங்குற அளவுக்கு எனக்கு கொஞ்சம் வருமானத்தை கொடு.
அப்பதான் என்னால் அடுத்த நாள் வேலையை பார்க்க முடியும். நான் ஒரு நாள் வேலைக்கு போகாமல் விட்டாலும் என் குழந்தைகள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேண்டும் என்று தானே நான் உன்னிடம் கேட்டேன் என்று அந்த நபர் கோபத்தில் புலம்பி கொண்டிருக்கிறார்.
நம்முடைய மனசில் இருப்பதை எல்லாம் கோவிலில் இருக்கும் கடவுளிடம் போய் கொட்டி விட வேண்டும் என்று அந்த விறகு வெட்டி கோபம் கோபமாக கோவிலை நோக்கி நடக்கிறார். கோவிலுக்கு வந்த பிறகு அவருக்கு அதிர்ச்சி கிடைக்கிறது. அப்போது அங்கே ஒரு நபர் இரண்டு கால்களும் இல்லாமல் கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
அப்போதுதான் அவருடைய மனதில் தோன்றியிருக்கிறது நமக்கு காலில் செருப்பு இல்லை என்று இங்கே கடவுளிடம் சண்டை போட வந்திருக்கிறோம். ஆனால் இங்கே இருக்கும் நபருக்கு இரண்டு கால்களுமே இல்லையே யோசித்து இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு புரிந்திருக்கிறது. நம்மிடம் இருக்கும் பொருள் நமக்கு சிறியதாக இருந்தாலும் வேறு ஒருவருக்கு அதுவே பெரியதாக இருக்கிறது என்பது.
இந்த நிலையில் அடுத்த நாள் மீண்டும் அந்த விறகு வெட்டி வழக்கம்போல வேலைக்கு செல்கிறார். ஆனால் இப்போது அவருடைய கால்களில் குத்தும் முள்கள் அவருக்கு வலிக்கவே இல்லை. எப்படியும் சில நாட்களில் நான் இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வருவேன். அதற்கான முயற்சியில் வலியோடு இருந்தாலும் சரி தீவிரவாக முயற்சி செய்வேன் என்று அவர் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டே இருந்தாராம்.
நாம் கஷ்டங்கள் வந்து விட்டது என்று சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டால், அந்த கஷ்டங்கள் நம்முடைய தலையின் மேல் கூடுகட்டி கும்மாளம் போட்டு விடும். அதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி நாம் அடியெடுத்து வைப்போம்.