கோடைக்காலத்தில் நாம் பல்வேறு அலர்ஜிகளுக்கு ஆளாகிறோம். அதிலும் தற்போது வெப்பத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கிறோம். வெப்பத்தின் பிடியில் இருந்தும் அதன் தாக்கம் காரணமாக ஏற்படும் நோயிலிருந்தும் யாருமே தப்ப முடியாது என்ற சூழ்நிலை இந்த ஆண்டு நிலவுகிறது. ஆனாலும், வெப்பத்தின் பிடியில் சிக்கி இருக்கும் நமக்கு பலவிதமான அலர்ஜிகள் ஏற்படும். நாம் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்தால் அந்த அலர்ஜிகளை தடுத்து விடலாம். அது என்னென்ன அலர்ஜிகள் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
ஜலதோஷம், இருமல் எல்லாம் மழைக்காலத்தில் மட்டுமே நம்மை தொற்றிக் கொள்ளும் பிரச்னைகள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். கோடை காலத்திலும் கூட தூசிகளால் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் சுகாதரமற்ற இடங்களில் நாம் பருகும் ஜூஸ்கள், வியர்வையுடன் குளிப்பது போன்ற காரணங்களாலும் ஜலதோஷம் பிடிக்கும்.
அதிலும் அலர்ஜி காரணமாக கண், மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். எந்த சமயத்திலும், எங்கு வேண்டுமானாலும் அலர்ஜி ஏற்படக் கூடும். இது மட்டுமல்ல சிலருக்கு காய்ச்சல் கூட வரலாம். காற்றில் உள்ள நச்சுக்களுக்கு எதிராக நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக வேலை செய்வதன் காரணமாக காய்ச்சல் ஏற்படும்.
அலர்ஜிக்கான அறிகுறிகளை புரிந்து கொள்வது சற்று கடினமாகும். இடைவிடாத தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல், கண் மற்றும் மூக்கில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படலாம். இது தவிர தலைவலி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகளும் சிலருக்கு ஏற்படக் கூடும்.
உங்களுக்கு எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டு, அவற்றை தவிர்க்கவும், தீர்வு காணவும் முயற்சிக்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை போன்றவற்றை சலவை செய்ய வேண்டும். மெத்தையாக இருப்பின் வெயிலில் உலர்த்தி எடுக்கலாம்.
கோடைக் காலத்தில் ஜன்னல் மற்றும் கதவுகளை முழுமையாக மூடி வைப்பது இயலாத காரியம் என்றாலும், தூசிகளை தடுக்கும் வகையில் அவற்றின் முன்னே வலைகளை அடித்து வைக்கலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
வெளியிடங்களுக்குச் சென்று வந்த உடனே கை, கால்கள், முகத்தை கழுவி உடையை மாற்றி விடுங்கள். வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தலையுடன் குளிப்பது நல்லது. உங்கள் சருமம் மற்றும் முடி ஆகியவற்றில் படர்ந்துள்ள தூசிகளை நீக்கவும், வியர்வையினால் ஏற்பட்டுள்ள கிருமி மற்றும் நாற்றத்தை போக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் அந்தக் குட்டி குளியல் உங்களுக்கு உதவியாக அமையும்.
அலர்ஜியை எதிர்கொள்ளும் வகையில் நம் உடலை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம் உணவுப் பட்டியலில் சில உணவுகளை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இஞ்சி, சிட்ரஸ் பழங்கள், மஞ்சள், வெங்காயம், ஆழி விதைகள், நட்ஸ், க்ரீன் டீ, தக்காளி போன்றவை அலர்ஜியை எதிர்கொள்ள உதவும்.
அலர்ஜி குறித்து தெரிந்து வைத்திருப்பதும், ஆரோக்கியமான, சுகாதாரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அலர்ஜியை தவிர்க்க உதவும். நீடித்த அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.