தோல்விகளை அறிவின் அலசலோடு நிறுத்தாமல் மனதோடு தொடர்புபடுத்தி வேதனை கொள்வது தவறானது. இதனை மனதளவில் தோல்வியாக கருதுவதால்தான் இனி நமக்கு என்ன இருக்கிறது என்ற விரக்தி ஏற்படுகிறது. இந்த விரக்தி தவறான முடிவுகளை எடுக்க வழி வகுக்கும். நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல வெற்றி தோல்விகள் மாறி மாறி வரும் என்பதை அறிவின் துணை கொண்டு உணர்ந்து கொள்ள வேண்டும். தோற்றதற்கான காரணத்தை ஆராய்ந்து நம்மிடம் உள்ள குறைபாடுகளை சரி செய்து அடுத்த நிலைக்கு தயாராகுவது வெற்றி பெற வழிவகுக்கும்.
வெற்றி என்பது நம்மை உலகுக்கு அறிமுகம் செய்வது. தோல்வி என்பது நம்மை நமக்கே அறிமுகம் செய்வது. தோல்வி நம்மை துரத்தினால் கலங்காது வெற்றியை நோக்கி ஓட வேண்டும். தோல்வியிடம் வழி கேட்டுதான் வெற்றியின் வாசற்படிக்கு நம்மால் வந்து சேரமுடியும். தோல்வியைக் கண்டு துவளக்கூடாது. தோல்வி என்னும் துன்பக் கடலில் மூழ்கி விடாமல் எதிர்நீச்சல் போட்டு வெற்றி என்னும் கரையை அடைய வேண்டும்.
வாழ்வில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல. ஆரம்பம் எப்போதும் கடினமாகத்தான் இருக்கும். அதனால் சோம்பி உட்கார்ந்து விடாமல் முயற்சித்து முன்னேற பார்க்கவேண்டும். போராடிப் பெறும் வெற்றி அடிக்கரும்பின் சுவைபோல என்றும் இனிக்கும். போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்தான். அதனால் கவலை கொள்ளத் தேவையில்லை. தோல்வி என்பது வெற்றியின் முதல்படி என்பதை நினைவில் கொண்டாலே நம்மால் போராடி நாம் எண்ணியதை அடைய முடியும்.
தோல்வி என்பது நிரந்தரமல்ல. வாழ்வில் எப்பொழுதுமே தோல்விகள் மட்டுமே வந்து கொண்டிருக்காது. ஆனால் தோல்வியடையும் போதுதான் நம்மை நமக்கே யார் என்பது தெரியும். வெற்றி என்பது நிரந்தரமல்ல. தோல்வி என்பது இறுதியானதும் அல்ல. தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல். தோல்வி என்பது முடிவு அல்ல. வாழ்வில் அது ஒரு கட்டம் அவ்வளவுதான். தோல்வியடைந்த பிறகு மீண்டும் முயற்சித்து விஸ்வரூபம் எடுப்பது சாத்தியம்தான்.
வள்ளுவரின் "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" எனும் குறளை மறக்கலாகாது. முதல் முறையிலேயே வென்றால் வெற்றியின் சுவையை உணரமுடியாது. சில தோல்விகளுக்கு பின் வரும் வெற்றி நம்மை சமநிலைப்படுத்தி அதன் சுவையை நன்கு உணரவைக்கும். தோல்வி நம்மை வளரவும், நம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், நம்மை மேம்படுத்தவும் உதவுகிறது. தோல்வி என்பது முடிவல்ல. அதற்குப் பிறகும் நாம் தொடர்ந்து முயன்று வெற்றி பெறுகிறோமா என்பதுதான் முக்கியம். வெற்றி அடைந்ததும் அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வெற்றி என்பது முடிவு அல்ல. தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல. இரண்டுமே வாழ்வின் அடுத்த கட்ட வளர்ச்சிக் கானது. வெற்றி பெற முதலில் நாம் தோல்வியை சுவைக்க கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்கவில்லை என்றால் வாழ்வில் உண்மையாக முன்னேற முடியாது.