கர்மவினை உடலால் மட்டும் ஏற்படுவதில்லை!

Karma does not occur only in the body!
karma...
Published on

செயல் என்பது நான்கு விதமாக நடக்கிறது. உடலின்செயல், மனதின் செயல், உணர்வின் செயல், சக்தியின் செயல். மற்றவற்றை ஒப்பிடும்போது, உடலின் செயலுக்கும் தாக்கம் குறைவு. யார் மீதோ கோபம் கொண்டு  அவரை பொளேர் என்று அறைந்தீர்கள். அது ஒருவிதமான கர்மா. ஆனால் அந்த சூழ்நிலையில் தைரியம் இல்லாமல் அடிக்காமல் விட்டுவிட்டீர்கள்.‌ ஆனால் அடிக்க வேண்டும் என்று  மனதில் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது மிகப்பெரிய கர்மா. 

ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் ஒரு குருவை நாடி வந்தார். "குருவே என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நான் சந்தித்த ஏமாற்றங்கள், மற்றவர்கள் செய்த துரோகங்கள், என்று மனம் முழுவதும் ரணங்கள். வழி காட்டுங்கள்" என்றார்.

குரு அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காட்டி "அதைப் போல் வாழ்" என்றார்.

எல்லாவற்றையும் துறந்து ஏழையாகச் சொல்கிறீர்களா என்று செல்வந்தர் கேட்க குரு" இல்லை மகனே‌ எங்கிருந்தாலும் குழந்தைகள் ஒன்று போலவே இருக்கின்றன. அச்சம், ஏமாற்றம், வன்மம், அழுக்காறு எதுவும் குழந்தையின் மனதில்  குடியேற்றுவதில்லை. உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிப்படுத்தி  தங்கள் இதயங்களில் சுமை இல்லாமல் அடுத்தகட்ட சாகசத்திற்குத் தயாராவதை குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்" என்றார்.

மனதில் அடிக்கடி திட்டமிட்டு அது செயலாக அமையும்போது, மேலோட்டமாக இல்லாமல் மிக ஆழமாகப் போகிறது. கோபம், வெறுப்பு, பழி வாங்கும் உணர்ச்சி எல்லாவற்றையும் சுமந்து கொண்டு செயலற்று உட்கார்ந்திருப்பதன்  மூலம்  உங்களுக்கு ஏற்பாடும் பாதிப்பு, அடித்திருந்தால் கூட ஏற்படாது. இப்படி இருப்பது வீட்டில் இருந்து கொண்டு வெளியில் இருப்பவன் மீது கல் வீசுவது போல்தான்.  அந்தக் கல் மறுபடி மறுபடி உங்கள் வீட்டுக்குள்ளேயே எங்காவது விழுந்து எதையாவது உடைத்துக் கொண்டிருக்கும். அந்தக் கல்லை வீசுவதற்கு எவ்வளவு தூரம் கவனம் செலுத்தினீர்கள்.  கடைசியில் அது உங்களை காயப்படுத்தும் அளவிற்கு அல்லவா பயன்பட்டுவிட்டது. உண்மையில் ஒரு செயலை விட அதன் நோக்கம்தான் அதன் பலனைத் தீர்மானிக்கிறது.

ஒரு இளைஞன் உணவு விடுதியில் இருந்து வந்தவன் கீழே 100 ரூபாய் கிடந்ததைப் பார்த்து எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். தன் பைக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போனான். பைக்கை காணவில்லை. அவன் நிறுத்திய இடத்தில் வண்டிகள் நிறுத்தக் கூடாது என்பதால் போலீஸ் அதை இழுத்துக் கொண்டு போய்விட்டது. இதையெல்லாம் ஒரு சாது கவனித்துக் கொண்டிருந்தார். 

இதையும் படியுங்கள்:
உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள புரிதல் மிக மிக அவசியம்!
Karma does not occur only in the body!

தெருவில் கிடந்த பணம் வேறு ஒருவருடையது. அதை எடுத்தால்தான் செலவு வந்து விட்டது என்று அச்சம் கொண்டு சாதுவின் தட்டில் போட்டான். அவர் "நீ எடுத்தது பாவமில்லை. கொடுத்தது புண்ணியமில்லை" என்றார். அவன் பணத்தை களவாடவில்லை. சாதுவுக்கு கொடுத்ததில் கருணையினால் அல்ல. அச்சத்தால். 

கர்ம வினை என்பது உடல் செயலினால் மட்டும் ஏற்படுவதில்லை.  மனதின் விருப்பத்தால்தான் முக்கியமாக  ஏற்படுகிறது. நல்ல எண்ணங்கள் கொண்டு  நல்லது செய்வதற்கும், தகாத எண்ணங்களை மனதில் புதைத்துவிட்டு, வெளியில் நல்ல செயல்களை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதை நினைவில் வைத்துக்கொண்டு உடலாலும், மனதாலும் செயல்பட்டால் வாழ்க்கை நலமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com