பயந்தால் கிடைக்காது பலம். துணிந்து சென்றால் கிடைக்கும் வரம். தைரியம் என்ற ஒரு மந்திரம் நம் உள்ளத்தில் இருக்கும்வரை பயம் என்பது இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் பயம் என்றால் என்னவென்று தெரியக்கூடாது. வாழ்வில் சிலவற்றை புரிந்து கொண்டால் நம்மால் பலவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
உலகில் முதல் இழப்பும் நம்முடையதல்ல. அது போல்தான் கடைசி இழப்பும் நம்முடையதாக இருக்கப் போவதில்லை. எல்லோருக்கும் நேருவதே நமக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டாலே போதும் பயம் என்பது மனதில் எழாது. பயம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு நம் வாழ்வில் இடமில்லை. முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமேயில்லை. தன்னம்பிக்கை இருக்கும் வரை தோல்வி என்பது ஒரு பொருட்டேயில்லை.
நம் முன் தெரியும் பிரச்னையைக் கண்டு பயந்து விடக்கூடாது. மலையைப் பார்த்து மலைத்துவிடாதே! மலை மீது ஏறினால் மலையும் நம் காலடியில்தான். பயந்தால் கிடைக்காது பலம். வாழ்க்கை நமக்கு வலிகளையும் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் சேர்த்தே தருகின்றது. எனவே பயப்படத் தேவையில்லை. குளமாக தேங்கி விடாமல் ஆறாய் பயணித்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாகும்.
வாழ்வில் பயந்தால் குழப்பம் வரும். குட்டையில் குழம்புவது மாதிரி எப்பவும் வேண்டாத எண்ணங்கள் வரும். தூக்கம் கெடும். எப்பொழுது குழப்பம் வருகிறதோ அப்பொழுது பதட்டமும், பயமும் சேர்ந்தே வரும். எனவே தெளிவில்லாத, குழப்பமான எண்ணங்களைக் குறைக்க நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நமக்கு நாமே தைரியம் சொல்லிக் கொண்டு உற்சாகமான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பயந்தால் கிடைக்காது பலம். துணிந்து செல்வதே வரம்.
பயம் எதற்கு? எதற்கெடுத்தாலும் பயப்படுவது நம் உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கும். தேவையில்லாமல் எதிர்காலத்தைப் பற்றிய பயமும், நம் எதிராளிகளைப் பற்றிய பயமும் நம்மை கோழை களாக்கிவிடும். பயம் என்பது தேவையில்லாதது. பயம் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது. வாழ்வில் ஒரு அடி முன்னேற வேண்டுமானாலும் கூட பயத்தையும், தயக்கத்தையும் உதறிவிட்டு தைரியமாக முன்னேறிச்செல்ல வேண்டும். தைரியமும், துணிச்சலும் இருக்கும் இடத்தில் பயம் உண்டாகாது.
பயம் போகவேண்டுமானால் முதலில் நாம் நம்மை முழுவதுமாக நம்ப வேண்டும். நம்மால் சாதிக்க முடியும், இந்த துன்பங்களிலிருந்து மீண்டு வர முடியும் என்று நம்ப வேண்டும். பயம் நீங்கி திடமான மனதினைப் பெற தியானமும், உடற்பயிற்சியும் அவசியம். தியானம் மன பலத்தைப் பெறவும், உடற்பயிற்சி உடல் பலத்தை பெறவும் உதவும். எந்த காரியத்தையும் துணிந்து செய்ய கற்றுக்கொள்ளுங்கள். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள். துணிந்தவர்க்கு துக்கம் இல்லை என்பார்கள்.
நமக்கு பிரச்னைகள் வரும்போது அதைக் கண்டு பயப்படக்கூடாது. பதட்டமடையாமல் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தாலே நல்ல வழி கிடைக்கும்.