அச்சம் ஒரு விலங்குபோல நம்மை அறிவற்ற தன்மையதாக்கி விடுகிறது. நம் சிந்தனைக்குத் தடையாக, ஒற்றுமைக்குத் தடங்கலாக, முயற்சிக்கு முட்டுக் கட்டையாக, மூட நம்பிக்கைக்கு மூலமாக, உண்மையை மறைக்கும் திரையாக அது இருக்கிறது .
"உலகத்தில் மனித முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது அச்ச உணர்வே. அச்சத்திலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம் ஆகும்," என்கிறார் தாகூர்.
அச்சமே முன்னேற்றத்தின் முட்டுக்கட்டையாக நிற்கிறது. உயிரற்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருப்பது அச்சமே.
பரம்பரையாக வந்த பழக்கங்களையும் , வழி வழி வந்த வழக்கங்களையும் இந்த அச்சத்தால் தான் அறிவற்ற பழக்க வழக்கங்களை உதறித் தள்ள முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.
அதனால் நம் முன்னேற்றம் தடைபடுகிறது. அறிவு வளர்ச்சி குன்றுகிறது. சிந்தனையும் செயலும் ஒடுங்குகிறது.
எங்கு மனதிலே அச்சமின்றி மக்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கு சிந்தனை சுதந்திரமாகச் செயல் படுகிறதோ, எங்கு ஓய்வற்ற முயற்சி உயர்வை காட்டுகிறதோ - எங்கு பகுத்தறிவு என்ற ஒளி பாழான பழக்கங்கள் என்ற இருளில் மறைந்து விடவில்லையோ, எங்கு சிந்தனையும், செயலும் பரந்து விரிந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றனவோ. அங்குதான் வெற்றி பெறமுடியும்.
இவ்வுலகம் தோன்றியதிலிருந்து எத்தனைகோடி மக்கள் பிறந்து வாழ்ந்து இறந்து போயிருக்கிறார்கள்! எண்ணவே முடியாத தொகையில். ஒரு சிலரை மட்டும் நாம் நினைவில் வைக்கிறோம், காரணம் என்ன?
உண்டு, உறங்கி, பின் மாண்டு போவதில் எந்த உயர்வும் இல்லை. விலங்கினங்கள் இவ்வாறுதானே இறுதியில் மடிகின்றன.
அப்படியானால் நமக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லையா! செயற்கரிய செயலை செய்ய உடலை பெற்ற நாம் அதற்கான முயற்சியிலும் உழைப்பிலும் ஈடுபட வேண்டும்.
கரும்பின் ருசி அதன் இனிப்பான சாறு. அந்தச் சாறு இல்லையெனில் அது வெறும் சக்கையே ஆகும். உடம்பினால் உழைக்க முடியும் என்ற உறுதி ஏற்படும்போது அச்சம் அகன்று விடும். உடம்பு என்ற கரும்பிலிருந்து வெற்றி என்ற சாற்றை பிழிய முடியும் வெற்றியைப் பெற தவறிவிட்டால் நாளடைவில் நம் உடம்பு சாறு வற்றிய கரும்பு போல் ஆகிவிடும். ஆகவே அச்சத்தை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.