கஷ்டங்களைச் சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அவற்றைக் கண்டு நாம் பயப்படக் கூடாது.உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. அவற்றைப் பற்றிய பயம்தான் நம் மனத்தைக் கலக்கி அறிவைக் குழப்புகிறது.
நமது ஆற்றல்களை அதிகப்படுத்துவதற்கே கஷ்டங்கள் வருகின்றன. உடற்பயிற்சியால் உடலின் வலிமை வளர்ச்சியடைவதுபோல, நமக்கு வரும் கஷ்டங்களை நாம் எதிர்த்து நடத்தும் பல போராட்டத்தினால் நமது உள்ளம் திண்மை அடைகிறது. பயம் என்பது அறியாமை யிலிருந்தும் நிச்சயமற்ற தன்மையிலிருந்தும் உதிக்கிறது. பயம் பயத்தையே வளர்க்கும் கிலி. பயமே மூடத்தனத்தை அதிகமாக உருவாக்குகிறது.
பயத்தின் பிடியிலேயுள்ள எந்த மனிதனும் மனித தன்மையோடு சிந்தித்துச் செயலாற்ற மாட்டான்!" என்கிறார் ரஸ்ஸல்.
படைக்குத் தலைமை தாங்கி நிற்கும் படைத் தலைவனே கிலி பிடித்துப் போர்க்களம் விட்டுப் புறமுதுகு காட்டி ஓடிவிட்டால் படை வீரர்கள களத்திலே எதிர்த்து நிற்பார்களா?
வாழ்க்கையின் தலைவனாக இருக்கும் நமக்கு மலை குலைந்தாலும் நிலை குலையாத உறுதி வேண்டும். அந்த மன உறுதி மட்டும் போதுமான அளவு இருந்து விட்டால் வெற்றிபெற முடியும்.
விமானத்தை ஓட்டும் விமானியின் உடலும் மனமும் உறுதியாக இருப்பது எப்படி அவசியமோ, அப்படியே வாழ்க்கை விமானத்தைச் செலுத்தும் நம்முடைய மனமும் வைரம் போல் ஒளி பொருந்தியதாகவும் இரும்பு போல் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
வெற்றி என்பது கடினமான உறுதியை மூலதனமாகச் கொட்டி நடத்த வேண்டிய கடுமையான போராட்டம் உறுதி என்பது மனநிலையைப் பொறுத்து அமையும்.
மனநிலை மனத்தை ஓட்டி அமைகிறது. மனத்தின் தன்மையும் தரமும் நாம் ஏற்றுக் கொள்ளும் விதத்தை பொறுத்திருக்கின்றது. "வாழ்க்கை என்பது ஒரு சுமை. அதைத் தாங்கிக்கொள். அது ஒரு முள்கிரீடம் அதை அணிந்துகொள்," என்கிறார் அப்ராம் ரியான்.
வாழ்க்கை என்பது சுமை என்று நாம் தெரிந்து கொண்ட பின் பயந்து ஓடிவிட வேண்டுமா? சுமையைத் தாங்கி வாழத்தான் வேண்டும்.
எதற்கும் கலங்காத இரும்பு இதயத்தை லெனின் கொண்டிருந்தபடியினால்தான் ஆண்டாண்டு காலமாகக் கொடுங்கோலாட்சி புரிந்த ஜார் மன்னரின் அதிகாரத்தை அழிக்க முடிந்தது.
நேதாஜி துணிச்சல் இன்றும் இந்திய வரலாற்றிலே உயர்வான இடத்தை நினைவு கூற வைக்கிறது. துணிவுடைமையை தங்களது ஆயுதமாக கொண்டிருப்பவர்கள் அனைவரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல நன்றாக தெரிகிறது.