அற்பமானவற்றால் நம்மை நிரப்பிக் கொண்டால் மகிழ்ச்சி விளையாது!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதே ஆறாவது அறிவு. அதை அப்படியே செம்மையாகச் செயல் படுத்துவதே ஏழாவது அறிவு. ஒரு தத்துவ பேராசிரியர் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். ஒரு காலியான பெரிய ஜாடியை மேசை மீது வைத்தார். பிறகு இரண்டு அங்குலம் கொண்ட கற்களை உள்ளே போட்டார்.

ஜாடி நிரம்பியதும் மாணவர்களிடம் ஜாடி எப்படி உள்ளது என்று கேட்டார்.

நிரம்பியுள்ளது என்றார்கள்.

பிறகு கூழாங்கற்கள் இருந்த ஒரு பெட்டியை எடுத்தார். அரை சென்ட் மீட்டருக்கும் குறைவான கற்களை ஜாடியில் போட்டார். இனி ஒரு கூழாங்கல் கூட போட முடியாது அளவு ஜாடி நிரம்பியது. அதை மாணவர்களிடம் காட்டி இப்போது இந்த ஜாடி நிரம்பி விட்டதா என கேட்க, முழுவதும் நிரம்பி விட்டது என்றார்கள். ஆசிரியர் இன்னொரு பெட்டியை மேலே வைத்தார். அதில் மணல் இருந்தது. அந்த மணலை ஜாடிக்குள் மெதுவாக போட ஆரம்பித்தார்.

இப்போது எப்படி உள்ளது என கேட்க சிறிது கூட இடம் இல்லாதபடி நிரம்பி விட்டது என்று ஒருமித்த குரலில் மாணவர்கள் கூறினார்கள். இப்போது அவர் பேச ஆரம்பித்தாரு "இந்த ஜாடி உங்கள் வாழ்வை பிரதிபலிக்கிறது. நான் முதலில் போட்ட கற்கள் உங்கள் வாழ்வின் முக்கியமான அம்சங்களை முன் மொழிகின்றன. இவைதான் உங்கள் குடும்பம் ஆரோக்கியம் மனைவி மக்கள். மற்ற எல்லாவற்றையும் இழந்தாலும் இவற்றைத் தக்கவைத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை நிறைவுபெறும். நான் அடுத்தும் போட்ட கூழாங்கற்கள் உங்கள் பணி வீடு கார் ஆகியவை. மற்றவையெல்லாம் நான் ஜாடிக்குள்ளே கொட்டிய மணலைப் போன்றவை சாதாரணமானவை. நீங்கள் முதலில் ஜாடியை மணலால் நிரப்பிவிட்டால் பிறகு அதில் கூழாங்கற்களுக்கும் கற்களுக்கும் இடமிருக்காது. நீங்கள் உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் சின்ன இலக்குகளுக்காக செலவழித்தால் பெரிய நோக்கங்களுக்கு இடமில்லாமல் போய்விடும். உங்கள் மகிழ்ச்சியில் அதிக கவனம் செலுத்துங்கள். மனைவி குழந்தைகளோடு நேரத்தை செலவழியுங்கள். அப்போது வீடு கட்டவும் கார் வாங்கவும்பணி புரியவும் அகன்ற வாய்ப்புக்கள் கிட்டும்.

அந்த பேராசிரியர் கூறியது போலவே நம்மில் பலர் சின்ன இலக்குகளில் சக்தியை சிதற அடித்து விடுவதால் சிறகடிக்க முடியாமல் போகிறது. மணலால் வாழ்வை நிரப்பிக் கொள்பவர்க்கு வைரங்கள் வரும்போது அறையில் இடம் இல்லாமல் போய்விடுகிறது. மகிழ்ச்சி வருவது விகிதாசார வாழ்வில்தான்.

அருவி என்றாலும் அளவுக்கு அதிகமாக குளித்தால் ஜலதோஷம்தான் பிடிக்கும். பணியை எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் என தெரியாமல் பணிக்கு அடிமையாகி விடுகிறார்கள். பணியும் செயல்பாடும் போதைகளாகும். அது புலன்களை மந்தமாக்கும். பணியை மற்றவர்களுக்காக இல்லாமல் நமக்காக அதைச் செய்யும் போதுதான் கூழாங்கல்லாகவாவது இருக்கும். இல்லாவிட்டால் அது மணல்போல் ஆகிவிடும்.

இதையும் படியுங்கள்:
ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் சஃப்ரான்-ஹனி டீ!
motivation article

சோமர்செட் மாம் என்பவர் நான் புத்தகங்கள் எழுதியதற்குப் பதிலாக என் குழந்தைகளுடன் இன்னும் சிறிது நேரமாவது விளையாடிய இருக்கலாம் என்று வாழ்நாள் இறுதியில் வருத்தப்பட்டார்.

நம்மைச் சுற்றியிருக்கும் இனிமையான நிகழ்வுகளை தவறவிட்டு அற்பமான வற்றால் நம்மை நிரப்பிக் கொண்டால் மகிழ்ச்சி ஒரு போதும் விளையாது. கசப்பான அனுபவங்களுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இன்பத்தை உணர்பவர்களை துன்பம் ஒரு போதும் தொடர்வதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com