நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் எண்ணங்கள் நேர்மறை சிந்தனை கொண்டிருந்தால் மட்டும்தான் வெற்றி சாத்தியப்படுமா?
உண்மைதான். நமக்கு என்ற ஒரு இலக்கை தீர்மானித்துக்கொண்டு அதை நோக்கிய பயணத்தில் நமது எண்ணம் முழுக்க பாசிட்டிவ் அலைகளுடன் செயலாற்றினால் மட்டுமே நம்மால் வெற்றி அடைய முடியும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். அப்படி என்றால் வாழ்க்கையில் நெகட்டிவ் எண்ணங்கள் மற்றும் விஷயங்கள் வராதா?
இரவு பகல், இன்பம் துன்பம்போல் பாசிட்டிவ் நெகட்டிவ்களும் வாழ்க்கையில் சரி சமமாக வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், நெகட்டிவ்வில் இருக்கும் பாசிட்டிவ்வை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெற்றி பெறவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லை எனில் 'என்னை சுற்றி எப்பொழுதும் நெகட்டிவ்வான எண்ணங்கள்தான் நெகட்டிவ்வான செயல்கள்தான் நடைபெறுகிறது அதனால் நான் எதற்கும் லாயக்கற்றவன்' என்ற உறுத்துதல் உண்டானால் நம்மால் எதிலும் முழுமையாக இறங்க முடியாது. சரி நெகடிவ்வில் எப்படி பாசிட்டிவ் பார்ப்பது?
கணேசும் ரமேஷும் வீடு மனைகளை வாங்கி விற்கும் தொழிலில் உள்ளனர். இருவரும் பத்து வருடங்களாக இதே தொழிலில் நண்பர்களாக இயங்கி வருகின்றனர். வெளியூர் சென்றிருந்த ரமேஷ் திரும்பி வருவதற்குள் கணேஷ் இரண்டே வருடத்தில் நல்ல சம்பாத்தியத்துடன் லட்சாதிபதியாக உயர்ந்திருந்தான். ரமேஷ் ஆச்சரியம் தாங்காமல் "உன்னால் இவ்வளவு விரைவில் இந்த தொழிலில் வெற்றி பெற முடிந்தது?" என்று கணேசிடம் கேட்டபோது அவன் சொன்னது இது.
"ஒருமுறை ஒரு பிரபல தொழிலதிபரின் வீடு மூலைக்குத்து வீடு என்று ஒதுக்கப்பட்டிருந்தது. அதை விற்க அவர் முயற்சி செய்தபோது யாரும் முன்வராமல் போக நான் அதை விற்று தருகிறேன் என்று சொல்லி அதை குறைந்த விலைக்கு வாங்கினேன். அதை அப்படியே வேறொரு நிறுவனத்துக்கு சில மாற்றங்களுடன் விற்று விட்டேன். அதில் நல்ல லாபம் கிடைத்தது. பிறகுதான் ஒரு எனக்கு ஒரு யோசனை வந்தது எல்லோரும் ஒதுக்கும் நெகட்டிவ் ஆக பார்க்கும் அந்த மூலைக்குத்து வீடுகள் அல்லது திசை சரியில்லாத வீடு வில்லங்கம் இருக்கும் வீடு என்று ஏகப்பட்ட பிராப்பர்ட்டிகள் விற்காமல் தேங்கிக் கிடந்தது என் கவனத்திற்கு வந்தது. அதை எப்படியாவது வாங்கி என்னுடைய சாமர்த்தியத்தின் பேரில் புதுமையாக சிந்தித்து மாற்றி குறைந்த விலைக்கு வாங்கி விற்க ஆரம்பித்து விட்டேன் இதுதான் என் வெற்றிக்கு காரணம்" என்றான். ரமேஷ் அவனைப் பாராட்டினான்.
இதில்தான் நாம் கவனிக்க ஒரு விஷயம் இருக்கிறது. நாம் நெகடிவ் ஆக பார்க்கும் பல விஷயங்களை, பாஸிடிவாக, லாபகரமாக ஆக்குவதற்கும் திறமை வாய்ந்த மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நெகடிவ்வுக்குள்ளும் ஏதோ ஒரு பாஸிடிவ் இருக்கத்தான் செய்கிறது. அதைக் கண்டுபிடிப்பது, நம் கைகளில்தான் இருக்கிறது. தேடும் வெற்றியைப்போல்.