

நீண்ட காலமாக கடலிலேயே வாழ்ந்து வந்த சிறிய மீன் ஒன்று பெரிய மீனிடம், "எல்லோரும் கடல் பெரியது எனப் பேசிக்கொள்கிறார்கள். உண்மையிலேயே கடல் என்றால் என்ன?" என்று கேட்டது.
அதற்குப் பெரிய மீன் சிறிய மீனிடம், "உன்னைச் சூழ்ந்திருப்பதே கடல்தான். அதற்குள்தான் நீ இருக்கிறாய்," என்று கூறியது.
"அப்படியா?" எனக் கேட்ட சிறிய மீன், "ஆனால், எனக்கு அவ்வாறு தெரியவில்லையே!" என்று கூறியது.
"நீ கடலிலேயே பிறந்து, இந்தக் கடலிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதால் உன்னைச் சுற்றி கடல் இருப்பது உனக்குத் தெரியவில்லை. உன்னை விட்டுப் பிரியாமல் உன் தோலைப் போல கூடவே இருப்பதால் உனக்குக் கடல் என்றால் என்னவென்று புரியவில்லை. நீ பிறந்து, வாழ்ந்து, மறையப்போவதும் இந்தக் கடலில்தான். எனவே, இந்தப்பரந்து விரிந்த கடலைப் பற்றி நீ அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில், பல அதிசயங்கள் நிறைந்த இந்தக் கடலில் நீ முயன்று நீந்தினால், இதனைப் பற்றி கொஞ்சமாவது அறிந்துகொள்ளலாம்," என்று பெரிய மீன் கூறியது.
கடலைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், சிறிய மீன் மகிழ்ச்சியோடு நீந்த ஆரம்பித்தது.
உலகத்தைப் பற்றிய குறுகிய கண்ணோட்டத்துடன் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இந்தச் சிறிய மீனைப் போலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிலரைப் பார்த்துக் 'கிணற்றுத் தவளைகள்' என்று கூறும் எல்லோருமே, ஒரு வகையில் சில விஷயங்களில் கிணற்றுத் தவளையாகத்தான் இருக்கின்றனர். நமக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதில் வேலியைப் போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
எல்லைகளும் வேலியும் பாதுகாப்பானது என்றாலும், அதனைத் தாண்டி உலகத்தில் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "உலகம் உள்ளங்கையில் இருக்கிறது" எனச் சில இளைஞர்கள் செல்போனுடன் காலத்தைக் கடத்துவதால், பல வேலைகளுக்குத் திறமையான இளைஞர்கள் கிடைப்பதில்லை.
ஒரு பள்ளத்தாக்கில் விழுந்த மனிதரும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒளிந்துகொண்ட அல்லது தேங்கிப்போன மனிதரும் ஒன்றாவார்கள். சிலரது தவறான கண்ணோட்டமே உலகின் உண்மைத்தன்மையைக் காண முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளும் பின்னடைவுகளும் நமது மன உறுதியைக் குலைத்தாலும், நம்பிக்கையுடன் "நம்மால் சாதிக்க முடியும்" என நினைத்து, பாதுகாப்பான வேலியையும்(fish-and-the-ocean-parable) எல்லைகளையும் தாண்டிச் சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்தால், சாதனை என்பது வெகுதொலைவில் இல்லை!