
நமது வாழ்வில் தினசரி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் பழக்கவழக்கமாக மாறும். அவை நமது வாழ்வையே மாற்றும் சக்தி படைத்தவை. அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
1. சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்தல்;
தினமும் காலையில் ஹார்லிக்ஸ் அல்லது காபி குடிக்கிறோம். டிபன் மற்றும் சாதம் சாப்பிடுகிறோம். காபி குடித்த டம்ளர், சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு போய் சிங்கில் போடக்கூடாது. அதற்குப் பதிலாக அவற்றை கழுவி வைக்கவேண்டும்.
இது மிகச்சிறிய விஷயம்தான். ஆனால் இதை தினமும் செய்யும்போது பழக்கவழக்கத்தில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படும். மேலும் செருப்பு, ஷூ, துணிகளை கழற்றி கண்ட இடத்தில் வீசி எறியாமல் அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும். இது போன்ற சின்ன சின்ன செயல்கள் ஒரு ஒழுங்கு முறையைக் கற்றுத்தரும்.
2. எழுதும் பழக்கம்;
உலகில் வெற்றி பெற்ற மனிதர்கள் தங்களுடைய நேர்மறையான மாற்றங்களை தினமும் டயரியில் எழுதுகிறார்கள். எனவே தினமும் ஒரு 15 நிமிடம் ஒதுக்கி வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், மேலும் என்னென்ன தவறுகள் செய்திருக்கிறோம் என்பது பற்றி டைரியில் தினமும் எழுத வேண்டும். இது நம்ப முடியாத அளவிற்கு பயன் தரும் ஒரு விஷயமாகும். தினமும் இரவு இவற்றை எழுதிவிட்டு தூங்கும்போது மனதில் இருக்கும் பாரம் குறைவதோடு நமது எண்ணங்களும் நிறைவேறும்.
3. ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே;
நண்பர்களுடன் பேசிக்கொண்டே போனை நோண்டுவது, மதிய உணவு உண்ணும்போது டி.வி. பார்ப்பது, வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது குறுஞ்செய்தி அனுப்புவது இதுபோன்ற ஒரு நேரத்தில் பல வேலைகளை செய்வதைத் தவிர்க்கவேண்டும். ஒரே ஒரு வேலையை ஒரு நேரத்தில் செய்யும்போது கவனமாக அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்க முடியும்.
4. தேவையில்லாத கற்பனைகளை கைவிட வேண்டும்;
நாளை என்ன நடக்குமோ என்கிற தேவையில்லாத பயமும் கற்பனையுமே ஒருவரை செயல்பட விடாமல் தடுக்கும். கெட்ட செயல்கள் நடந்துவிடுமோ என்று எண்ணி கற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக நல்லவை நடக்கும் என்று நம்பலாம். மனிதர்கள் தினமும் தேவையில்லாத கற்பனைகளில் மூழ்கி தங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறார்கள். இதைக் கைவிட வேண்டும். நல்ல எண்ணங்களை மட்டும் நினைத்துக் கொண்டால் அது ஒரு பழக்கமாக மாறிவிடும்.
5. நன்றி சொல்வது;
தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன்பு அன்று நடந்த மூன்று நல்ல விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும். அதற்கு யார் காரணம் என்று யோசித்து அவர்களுக்கு மனதார நன்றி சொல்ல வேண்டும். நோட்டில் அவர்களுடைய பெயர் எதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறோம் என்கிற காரணத்தையும் எழுத வேண்டும். இது ஒரு அற்புதமான பயிற்சி ஆகும். மனிதர்கள் மீது அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். நன்றி சொல்வதால் நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்.
இந்த ஐந்து விஷயங்களை தினமும் தவறாமல் செய்து வரவேண்டும். இதனால் ஒருவரது நம்பிக்கை அதிகரித்து அவரது திறமைகளை அதிகரித்துக் கொள்ளலாம். வாழ்வில் நல்ல விஷயங்களை அடைய முடியும்.