
உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று - குறள்
ஊக்கம் என்னும் ஒன்று இல்லாத ஒருவரிடம் வேறு என்ன இருந்தாலும் இருப்பவை எவையாக இருந்தாலும், அது பணமாகட்டும், படிப்பாகட்டும், பதவியாகட்டும், உறவாகட்டும் அவை காலப்போக்கில் பயனற்றுதான் போகும்!
தனது ஆத்திசூடியில், ஊக்கமது கைவிடேல்' என்று ஒளவை சொன்னதும் இதன் காரணமாகவே.
தொடக்க நிலையில் இருக்கிறோம்; மத்திய நிலையில் இருக்கிறோம் அல்லது உயர் நிலையில் இருக்கிறோம் என்னும் வேறுபாடின்றி நாம் கைக்கொண்டிருக்க வேண்டிய ஒன்று ஊக்கமே என்கிறாள் நமது பாட்டி.
ஊக்கத்தைப் பற்றி இவ்வளவு அழுத்தமாகப் பேசுகிறோம்; ஊக்கம் என்றால் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சரி; உடனுக்குடன் பிரதிபலன் எதிர்பார்க்காமல், அந்த வேலை நிறைவு காணும் வரை மலர்ந்த முகத்துடன், பூரண ஈடுபாட்டுடன் உழைப்பதை ஊக்கம் என்று சொல்லலாம்.
நம்பியவை நடக்கவில்லை; நண்பரே துரோகம் செய்கிறார்; கிடைக்க வேண்டிய அனைத்தும் கை தட்டிப் போகின்றன; நம்மைவிட ஆற்றலும் முயற்சியும் குறைவாக உடையவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கின்றது: நமது முயற்சிகளுக்கு அடிப்படை அங்கீகாரம்கூட கிடைக்கவில்லை.
இப்படிப் பல நிலைகளில் சறுக்கல்கள் இருந்தாலும், சோர்ந்து நின்றுவிடாமல் முயன்றுகொண்டே இருப்பதை ஊக்கம் என்று சொல்லலாம்.
வாழ்க்கையில் வளர்ச்சி காண விரும்பும் அனைவரும் கைக்கொள்ள வேண்டியது இத்தகைய ஊக்கத்தையே.
செய்யும் வேலை சுயதொழிலாக இருந்தாலும் சரி; அல்லது ஓர் அலுவலகத்தில் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி; ஊக்கம் நிறைந்தவர்களையே அனைவரும் விரும்புகிறார்கள்.
ஊக்கம் நிறைந்தவர்களின் வெற்றி, அது தாமதமானதாக இருந்தாலும் தவிர்க்க இயலாதது.
தனது வேலைகளில் உண்மையாக, மகிழ்ச்சியாக இருந்து உழைப்பவர்கள், தம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்.
அப்படி இல்லாதவர்கள், தாங்களும் எரிச்சல் அடைந்து, பிறருக்கும் அந்த உணர்வைப் பரப்புகிறார்கள்.
குறுகிய காலத்தில் தனது உழைப்பின் பணத்திலும், வங்கிக் கடனிலும் சொந்தமாகக் கார் வாங்குபவர்களை நினைத்தபோது, வள்ளுவன்தான் நினைவுக்கு வந்தான்.
வெற்றி, ஊக்கம் உடையவனின் வீட்டுக்கு வழி தெரியாவிட்டாலும் நான்கு பேரிடம் கேட்டுக் கொண்டாவது கண்டிப்பாகப் போய் சேர்ந்து விடுவான்.
வேலை தேடித்திரிவதோ அல்லது நிறைய பணத்தை முதலீடு செய்து சுயதொழில் தொடங்குவதோ, வாழ்க்கைக்குக் கண்டிப்பாகத் தேவைதான்.
ஆனால், வேலையில் சேர்ந்துவிடுவதோ அல்லது தொழில் தொடங்கிவிடுவதோ மட்டும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தருவதே இல்லை.
நாம் என்ன வேலை செய்கிறோம் என்பது முக்கியமே இல்லை; அந்த வேலையை எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம்.
என்னவாக இருக்கிறோம் என்பதில் பெருமையே இல்லை; இருக்கும் இடத்தில் ஊக்கம் குறையாமல் செயல்படுகிறோமா என்பதில்தான் பெருமையும் இருக்கிறது; வெற்றி இருக்கிறது.