
1. உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்
மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர் கொண்டு பாதிக்கப்படும் போதும், சிக்கலுக்கு ஆளாகின்றபோதும் நம்மை நாமே குறை கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்ட றிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள்.
2. மற்றவர்களுக்கு உதவலாம்
தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மன மகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.
3. அறிவை வளர்க்கலாம்
ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைகளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், கலை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், புதிய திறன்கள் மற்றும் மொழிகளைக் கற்றல், மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை ஆடுதல் போன்ற செயல்பாடுகளால் நம் மூளை தூண்டப்படுகின்றது. அதனால் இன்பம், அமைதி, பெருமிதம் போன்ற நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கின்றோம் மற்றும் மனநிறைவையும் உணர்கின்றோம்.
4. நேர்மறைக் கண்ணோட்டம் வேண்டும்
வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையே. துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றப் பழகுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல், உங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றியுணர்வுடன் இருங்கள்.
எதிர்மறையான செய்திகள், உறவுகள் மற்றும் சுழல்களை தவிர்த்து விடுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொண்டிருங்கள். மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை ரசித்துச் செய்யுங்கள். அது அந்த நாளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். நேர்மறையான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நேர்மறைப் பார்வை யில் வாழ்க்கையை நோக்கி, வாழும் வாழ்க் கைக்கு நன்மைகளை ஈர்த்து மனமகிழ்ச்சி பெறுவோம்,
5. உடம்பை உறுதியாக்கலாம்
தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவு உண்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைக்கும் விதம் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வது, தீமை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் நமது உடல்நலனை அதிகரிக்கலாம். உடல் நலம் மேம்படும்போது மனநலனும் சேர்ந்தே மேம்படும்.