எங்கே ஒழுங்கு இருக்கிறதோ அங்கே அழகு இருக்கிறது. ஒழுங்கை பின்பற்றினால் நமது அழகும் நமது சுற்றுப்புறத்தின் அழகும் பல மடங்கு உடனே உயர்ந்துவிடும்.
ஒழுங்கு என்பதற்குச் சூழ்நிலையைப் பொறுத்துப் பல அர்த்தங்கள் ஏற்பட்டாலும், அடிப்படையில் ஒழுங்கு என்ற சொல் குறிப்பது சீரான தன்மையைத்தான்.
இந்த ஒழுங்கு உங்களுக்கான விலங்கல்ல. உங்களை உயர்த்தி வைக்கும் உன்னத சிம்மாசனம். சிந்தனையில் தெளிவை ஏற்படுத்தித் தருவது ஒழுங்கு. ஒழுங்கான சிந்தனையில் இருந்து உலகிற்கு உபயோகமான தீர்வுகள் கிடைக்கும். ஒழுங்கான நிச்சயமாக வெற்றி கிட்டும்.
ஆனால், ஒரு செயலை ஒழுங்காகச் செய்வது என்பது ஒரே நாளில் கை வந்து விடாது. இதற்கு தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி முதலில் நமது மேஜையை ஒழுங்காக வைப்பதில் ஆரம்பிக்கலாம். பின்னர் படிப்படியாக முன்னேறி வீடு முழுவதையும் ஒழுங்காக வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த முயற்சிகள்தான் மேலே சொன்ன பயிற்சி. முயற்சி திருவினை ஆக்கும்.
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எல்லோருமே, தங்கள் வெற்றிக்குக் காரணமாகக் கூறுவது இடைவிடாத ஒழுங்கான பயிற்சியைத்தான். உடற்பயிற்சியாகட்டும், சாதகமாகட்டும், ஒத்திகையாகட்டும், படிப்பாகட்டும் ஒழுங்காகப் பயிற்சி செய்தால் தானே வெற்றி கிட்டுகிறது. கிரிக்கெட்டில் பெரும் சாதனைகளைப் புரிந்த சச்சின் டெண்டுல்கர் - தான் விளையாடிய காலங்களில் செய்த பயிற்சிகளை இன்னமும் தொடர்ந்து ஒழுங்காகச் செய்து வருவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். வாழ்க்கையின் எக்காலத்திலும் ஒழுங்கின் தேவை இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டதால்தான்.
காலை எழுந்தது முதல் மீண்டும் இரவு படுக்கப்போகும் வரை நாம் செய்யும் அத்தனை செயல்பாடுகளிலும் ஒரு ஒழுங்கை கொண்டு வந்து பாருங்கள் ஏன் பேசும் பேச்சிலும் அதே ஒழுங்கை கொண்டு வாருங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று உங்களுக்கு ஒரு கம்பீரத்தையும் இந்த ஒழுங்கு பெற்று தரும். உங்களது ஒழுங்கான நடவடிக்கையை பார்க்கும் மற்றவர்கள் பிரமித்து போவார்கள் உங்கள் மீது அவர்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் உங்கள் மேல் உள்ள மரியாதை அதிகரிக்கும்.
ஒழுங்கு இல்லாத இடம் அலங்கோலமாகி விடுவதைப் போன்று ஒழுங்கில்லாத வாழ்க்கையும் அல்லோகலப்பட்டுதான் போகும்.
ஒழுங்குதான் வாழ்க்கைக்கு அழகைத் தருவதுடன் வெற்றிகரமாக வாழ்வதற்கும் படிக்கலாக இருக்கும் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
எல்லா விஷயத்திலும் ஒழுங்கை கடைபிடிப்பவர்கள் நிச்சய வெற்றியை எட்டுவார்கள் என்பது உறுதி.