
சிலரைப் பார்த்தால் எப்பொழுதும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் ஃபிரஷ் ஆகவும் இருப்பார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பெரிய விஷயம் அல்ல. காலையில் சீக்கிரமாக எழுந்து வாசல் பெருக்கி வண்ண கோலம் வரைவது, காலை சிற்றுண்டியை நேரத்துடன் முடிப்பது, இடைப்பட்ட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சிறிது நேரம் தனக்குப் பிடித்த வேலையை செய்வது, நடப்பது, தியானம் செய்வது, இரவு உணவை சீக்கிரம் ஆக முடித்துக்கொண்டு படுக்கைக்கு செல்வது, நீண்ட நேரம் கணினி செல், டி.வி மற்றும் வலைத்தளங்களில் நேரத்தை செலவிடாமல் இருப்பது, இதில் மிக ஆர்வம் காட்டாமல் இருப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்வதால் அப்படி ஒரு சுறுசுறுப்பின் திலகமாகத் திகழ்கிறார்கள்.
ஆனால் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும், எதையும் கிரகிப்பதில் நுட்பம் உடையவர்களாக இருப்பதை அவர்களின் பேச்சின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதனால் இவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், எப்பொழுதும் நேர்த்தியாக ஆடை அணிந்திருப்பதால் எங்காவது புறப்பட வேண்டும் என்றாலும் சட்டென்று புறப்படுபவர் களாகவும், ஊர், இடத்தை நினைவில் வைத்துக் கொள்பவர்களாகவும் இருப்பதால் வழி தவறாமல் எதையும் வாங்குவது, அதை முறையாக பயன்படுத்துவது, பண்டிகைகளை அழகாக சிறப்புடன் செய்து முடித்துக் கொள்வதில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
இதனால் இவர்களுடன் பழகுவதற்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களின் நேர்மறை சிந்தனை மற்றவர்களை கவரும் விதமாக இருப்பதால் இவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. இதனால் நட்பு, உறவு வட்டம் விரிவடைகிறது. இதுபோல் அன்றாட நிகழ்ச்சிகளை அழகுற செய்து வந்தாலே மற்றவர்கள் நம்மை ஒரு எடுத்துக்காட்டாக கூறுவார்கள்.
அந்த நற்பெயரும் நாம் நிமிர்ந்து நடக்க நல்ல வழி வகை செய்து கொடுக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆதலால் அன்றன்றைய வேலைகளை நன்றாக முடிப்போம். அதுவே நம்மை உற்சாகமடைய வைக்கும் என்பது உறுதி.
அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்; குணம்தான் உங்களுக்கு மரியாதையைப் பெற்றுத்தரும்!