

வாழ்க்கை என்பது இறைவன் தந்த கொடை. அதில் நமது நல்ல எண்ணங்களால் நோ்மறை சக்திகளும், தீய கெடுமதி எண்ணங்களால் எதிா்மறை சக்திகளும் நம்மிடம் தலைகாட்டி விட்டுப்போகும்.
எப்போதுமே எந்த விஷயமானாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் எனப்பேசுவதும், விரக்தியாகப் பேசுவதும், நமக்கானவர் சொல்லப்போகும் வாா்த்தைகளை உள்வாங்காமல் அவர்கள் சொல்ல வந்த முதல் வாா்த்தையை கூறி முடிப்பதற்குள், முடியாது அதெல்லாம் சரிப்பட்டு வராது, இந்தக்காாியம் நடக்காது, என் பேச்சைக்கேட்காமல் இந்தக்காாியத்தைச் செய்தால் தோல்விதான் வரும், என பட பட வென வாா்த்தைகளால் பொாிந்து தள்ளுவதால் என்ன லாபத்தைக்கண்டோம். ஒன்றுமில்லை. ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடுதான் மிச்சமாகும்.
ஆக, நாம் அவசரத்தில் அள்ளித்தெளித்த வாா்த்தைகளால் குடும்ப அமைதி போவதுடன் வாக்குவாதம் முற்றிப்போய் நமது குழந்தைகளின் மனதில் தேவையில்லாத மனக்கிலேசம், யாா்மீதாவது வெறுப்பு, இனம் புாியாத பயம், மனவேதனை, இவைகள் அத்தனையும் குழந்தைகளின் நெஞ்சில் ஆழமாக பதிந்துவிடுமே!
ஒரு நிமிடம் யோசிக்காமல் நாம் படுகிற அவசர புத்தி தந்த கோபத்தால் எவ்வளவு சங்கடம்! புயலே அடித்து ஓய்ந்தது போலல்லவா ஆகிவிட்டது.
அது சமயம் தாயாா் குழந்தையை சமாதானம் செய்யும் வேளையில் என்னையும் தம்பியையும் ஹாஸ்டலில் சோ்த்துவிடுங்கள் என்ற வாா்த்தைகளும் குழந்தைகள் வாயிலிருந்து வந்துவிடுமே இது தேவையா?
அதேபோல ஏன் இப்படி நடக்கிறது, எதுக்கு இப்படி நடக்கிறது, எதுவுமே தொியவுமில்லை, ஒன்னுமே புாியவுமில்லை,
ஆனால் ஏதோ ஒன்று நடக்கப்போவதுதான் நிஜம்.
ஏதோ நடக்கிறது அதுமட்டும் நன்றாகவே தொிகிறது, என புலம்புவதால் ஒரு பயனும் இல்லையே! அதேபோல கோழைத்தனமாக இருப்பது, தொட்டதற்கெல்லாம் பயப்படுவது, என்ற நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். தைரியமாக இருந்தாலே எதையும் எதிா்கொள்ளும் ஆற்றல் தானாகவே வராமலா போகும்!
நாம் தேவையில்லாத வாா்த்தைகளை உதிா்ப்பதால் அடுத்தவர் மனதை காயப்படுத்திவிட்டு, சாாி கேட்டு விட்டால் போதுமா, அதே நேரம் இரு தரப்பினர்களும் சின்ன விஷயத்தை பொிது படுத்தாமல் மன்னிக்கும் மனோநிலைக்கு தன்னை தயாா் படுத்திக்கொள்வதே சிறப்பான ஒன்றாகுமே!
மன்னிக்கத்தொிந்தால் வாழ்க்கை அழகாகும்.
மறக்கத்தொிந்தால் வாழ்க்கை இனிதாகுமே. மன்னிப்பதும் மறப்பதும் நமக்கான கவசமே!