

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்து முடிக்கும் தகுதியும், திறமையும் இப்போது என்னிடம் இல்லை. என்னை நான் தயார்படுத்திக்கொள்ளாமல் உடனடியாக இந்த வேலையை ஆரம்பித்தால் நான் தோல்வியைத்தான் தழுவவேண்டியிருக்கும். முதலில் நான் என் செயல் திறமையை வளர்த்துக்கொள்ளப் போகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கும். அதற்குப் பிறகுதான் இந்தக் காரியத்தை ஆரம்பிக்கப்போகிறேன்' என்று காரியம் தொடங்குவதை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடாதீர்கள்.
சிலர் அளவுக்கு மீறி முன் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். ஆனால் வாழ்க்கையில் சாதித்தது மிகவும் குறைவானதாகத்தான் இருக்கும். ஒருவன் சொந்தமாக வீடுகட்ட ஆசைப்படுகிறான். அவன் ஆசைப்படும் வீட்டைக்கட்டி முடிக்க அவனுக்கு ரூ. 3 இலட்சம் தேவை. அதைச் சம்பாதித்தவுடன்தான் நான் வீடு கட்ட ஆரம்பிக்கப் போகிறேன் என்று முடிவெடுப்பவர் களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்நாட்களிலேயே வீடே கட்டாதவர்களாகத்தான் உருவெடுப்பார்கள்.
அப்படி ஒருவன் 3 இலட்சம் சேமித்தாலும்கூட விலைவாசி உயர்வினால் அதே வீட்டைக்கட்ட அப்போது 6 இலட்சம் தேவைப்படும். அதற்கு மாறாக கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு வீட்டுமனை வாங்கியவர்கள் வீடு கட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்குச் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் நகை அடகு வைப்பது, சேமிப்பு நிதியிலிருந்து கடன் வாங்குவது போன்ற வழிகளில் கொஞ்சம் திரட்டி வீடுகட்டும் பணியை ஆரம்பித்து விடுகிறார்கள்.
எனவே திட்டமிட்டு ஒரு செயலை நினைத்துவிட்டால் தாமதிக்காமல் உடனே செய்யும் பழக்கம் உயர்வைத்தரும் என்பதில் ஐயமில்லை.
ஒரு பெரிய காரியத்தை எப்படிச் சுலபமாக முடிப்பது என்பதைப் பற்றி ஹென்றி ஃபோர்ட் கீழ்க்கண்ட அறிவுரையை வழங்கியிருக்கிறார். நீங்கள் செய்ய விரும்பும் அந்த காரியத்தை நிறைய சிறிய சிறிய காரியங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அதற்குப் பின் ஒவ்வொரு நாளும் உங்களுடைய சௌகரியத்திற்குத் தகுந்த மாதிரி இரண்டு அல்லது மூன்று சிறிய காரியங்களைச் செய்து முடியுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் ஒருநாள் அந்தப் பெரிய காரியம் முடிந்துவிட்டிருப்பதைக் காணலாம்.
'தள்ளிப்போடுதல்', 'தாமதம்' என்ற வார்த்தைகளை நமது அகராதியிலிருந்து கூடுமானவரை விலக்கவேண்டும். எதையும் உடனே செய்கின்ற பழக்கம் கொண்டவனையே அனைவரும் விரும்புவார்கள் அவனிடமே முக்கியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள்.
வெற்றி பெற்றுச் சாதனை படைக்க எண்ணுகின்ற நீங்கள், எதையும் உடனே செய்யும் பழக்கத்தை உடனே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.