8 விரல்களுடன் டென்னிஸ் உலகில் சாதனை படைக்கும் மங்கை! பிரான்செஸ்கா ஜோன்ஸின் உருக்கும் கதை!

Tennis player Francesca jones
Tennis player Francesca jones motivation Img credit: AI Image
Published on

விளையாட்டு உலகம் என்பது உடல் வலிமை மற்றும் நுணுக்கங்களைச் சார்ந்தது. குறிப்பாக டென்னிஸ் போன்ற ஆட்டங்களில் கைகளின் பிடிமானம் மற்றும் கால்களின் வேகம் மிக முக்கியம். ஆனால், பிறப்பிலேயே உடல் ரீதியான குறைபாடுகளுடன் பிறந்து, "உன்னால் நடக்கவே முடியாது" என்று சொன்ன மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கி, இன்று உலக டென்னிஸ் அரங்கில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம் தான் பிரான்செஸ்கா ஜோன்ஸ்.

யார் இந்த பிரான்செஸ்கா ஜோன்ஸ்?

பிரிட்டனைச் சேர்ந்த பிரான்செஸ்கா ஜோன்ஸ், 'எக்ட்ரோடாக்டிலி எக்டோடெர்மல் டிஸ்ப்ளாசியா' (Ectrodactyly Ectodermal Dysplasia - EED) என்ற ஒரு அரிய மரபணு குறைபாட்டுடன் பிறந்தார். இந்தக் குறைபாட்டின் காரணமாக, அவருக்கு இரு கைகளிலும் தலா நான்கு விரல்கள் மட்டுமே உள்ளன (மொத்தம் 8 விரல்கள்). மேலும், அவரது கால்களில் ஒரு காலில் மூன்று விரல்களும், மற்றொரு காலில் நான்கு விரல்களும் மட்டுமே உள்ளன.

சாதாரண மனிதர்கள் நடப்பதற்கே சிரமப்படும் இந்த நிலையில், ஒரு சர்வதேச டென்னிஸ் வீரராக உருவெடுப்பது என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்று.

ஜோன்ஸ் குழந்தையாக இருந்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் ஒரு அதிர்ச்சியான உண்மையைக் கூறினர். "இந்தக் குழந்தையால் ஒருபோதும் பேலன்ஸ் செய்து நடக்க முடியாது, விளையாட்டு என்பது கனவில் கூட நடக்காத ஒன்று" என்பதே அந்த எச்சரிக்கை.

ஆனால், சிறுமி ஜோன்ஸின் மன உறுதி இரும்பை விட வலிமையாக இருந்தது. ஒன்பது வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் எடுத்த அவர், தனது குறைபாட்டை ஒரு தடையாகப் பார்க்காமல், ஒரு சவாலாகப் பார்த்தார். விரல்கள் குறைவாக இருப்பதால் ராக்கெட்டைப் பிடிப்பதில் பெரும் சிரமம் இருந்தது. இதற்காக தனிப்பயிற்சி முறைகளைத் தொடங்கினார்.

அவர் தனது வாழ்நாளில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார். ஒவ்வொரு முறை அறுவை சிகிச்சை முடிந்து மீண்டு வரும்போதும், முன்பை விட அதிக பலத்துடன் களமிறங்குவார். கால்களில் விரல்கள் குறைவாக இருப்பதால், ஓடும்போது சமநிலையை இழந்து விழுந்து காயமடைவது அவருக்கு வாடிக்கை.

2021-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜோன்ஸ் பங்கேற்றபோது, ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் உறைந்து போனது. தனது உடல் குறைபாடுகளைத் தாண்டி, தகுதிச் சுற்றில் மூன்று கடினமான போட்டிகளில் வெற்றி பெற்று, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

ஒவ்வொரு முறை அவர் பந்தை அடிக்கும்போதும், விதியை மதியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இன்று பல இளைஞர்கள் சிறிய தோல்விகளுக்கே துவண்டு போகின்றனர். அவர்களுக்கு எட்டு விரல்களுடன் டென்னிஸ் ராக்கெட்டைச் சுழற்றும் பிரான்செஸ்கா ஜோன்ஸ் ஒரு வாழும் உதாரணம். பிறப்பால் வந்த குறைபாட்டைப் பற்றிக் கவலைப்படாமல், தன் உழைப்பால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இந்த மங்கையின் கதை, நம் அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை ஒளியைத் தருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com