

கடினமான நல்ல காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை பொதுவாக அனைவர் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கும். கனடா நாட்டில் ஓர் ஏழைக்குடும்பத்தில் ஃப்ரடெரிக் க்ரேன்ட் பேன்டிங் என்பவர் பிறந்தார். விவசாயத்தில் ஈடுபட்டிருந்த அவருடைய குடும்பம் போதுமான சாப்பாடு, துணி போன்றவை கூடப் பெறமுடியாமல் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
முதல் உலகயுத்தம் வந்தபோது கனடா நாட்டுப் போர்ப்படையில் மருத்துவப்பிரிவில் சேர்ந்து அவர் போர்முனைக்குச் சென்றார். துப்பாக்கிக் குண்டு அவருடைய வலது கையின் வழியாக துளைத்துச் சென்றுவிட்டது. டாக்டர்கள் அவருடைய வலது கையைத் துண்டித்துவிட வேண்டுமென்று கூறினார்கள். போர் முடிந்தவுடன் டாக்டர் பட்டம் பெற்றுப் புகழ்பெற்ற சர்ஜனாக வர அவர் ஆசைப்பட்டார். வலது கை துண்டிக்கப்பட்டு வட்டால் தன் ஆசை நிறைவேறாது என்பதை உணர்ந்த அவர் தன் கையைத் துண்டிக்கக்கூடாது என்று கூறிவிட்டார்.
உயிரையும் மதிக்காமல் போரிட்ட அவருடைய தீரத்தை மெச்சி அவருக்குப் புகழ் பெற்ற 'மிலிடிரிக்ராஸ்' என்ற பதக்கம் வழங்கப் பட்டது. மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து டாக்டர் பட்டமும் பெற்று விட்டார். எட்வர்ட் ஜென்னிங் என்பவர் அம்மைக்கு மருந்து கண்டு பிடித்தார். வெறிநாய்க் கடிக்கு பாஸ்டர் என்பவர் மருந்து கண்டுபிடித்தார். கோச் என்பவர் காலரா என்னும் வியாதிக்கு மருந்து கண்டுபிடித்தார்.
சர்க்கரை வியாதிக்கு அதுவரையில் யாரும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. அந்த வியாதி கண்டவர்களுக்குச் சிறிய காயம் கூட ஆறாமல் பெரிதாகிக்கொண்டே வரும். காயம் கண்ட பாகத்தையே வெட்டியெறிந்து விடுவார்கள். சாப்பிடும் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
தனக்கு நல்ல வருமானம் தந்த மருத்துவப் பணியைத் துறந்துவிட்டு ஒரு காற்றோட்டமில்லாத சிறிய அறையில் மிகச் சாதாரணமான ஆராய்ச்சி சாதனங்களைக் கொண்டு ஆராய்ச்சியைத் தொடங்கினார். இரவும் பகலும் பாடுபட்ட அவர் முடிவில் ‘டயாபெடீஸ்' என்ற வியாதியைக் கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்தார், 1923-ஆம் ஆண்டு மருத்துவப் பிரிவிற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப் பட்டது. டயாபெடிஸ் நோயினால் அவதிப்பட்ட உலகளாவிய எண்ணற்ற நோயாளிகள் குணம் பெற்ற முழுவாழ்க்கை வாழத் தொடங்கினார்கள்."
புகழ் பெற்ற எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸ், இங்கிலாந்து நாட்டு அரசர் ஐந்தாம் ஜார்ஜ் போன்ற பல பெரிய மனிதர்களின் உயிரை இவர் கண்டு பிடித்த மருந்து மீட்டுத் தந்திருக்கிறது. தான் கண்டுபிடித்த மருந்தின் விற்பனையைக் கொண்டு இவர் சுலபமாகக் கோடீஸ்வரராக மாறியிருக்க முடியும். ஆனால் மனித குலத்தின் மேன்மைக்காக இவர் இதை இலவசமாக வழங்கினார். வாழ்க்கையில் படிப்பதற்குப் போதுமான பொருளாதார வசதிகூடக் கிடைக்காதவர்களில் பலரும், உடுக்க உடையும், உண்ண உணவும் கிடைக்காமல் தவித்த பலரும், தங்களுடைய விதியை நொந்து கொண்டு வாழாமல் வீறு கொண்டு உழைத்துப் பல அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.
'நான் என்றும் ஏழையாக இருக்கமாட்டேன் புகழும் செல்வமும் பெற்று மற்றவர்கள் மதிக்கும்படி வாழப்போகிறேன். மனித குல மேன்மைக்காக என் உழைப்பைச் செலவிடப்போகிறேன்' என்ற மனவுறுதியுடன் செயல்படுபவரை, அவருடைய இலட்சியத்தை அடைவ திலிருந்து. இந்த உலகத்தில் இருக்கும் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.
சுலபமாக ஒருவன் செல்வத்தையும், புகழையும் அடைந்துவிட முடியாது அயராத உழைப்பு ஒன்றின் துணைகொண்டுதான் ஒருவன் பல புதுமைகளைக் கண்டுபிடிக்க முடியும். அவற்றின் மூலம் புகழையும் எட்டமுடியும்.