கவலைகளுக்கு விடுதலை கொடுத்தால் எப்போதும் சந்தோஷம்தான்!
உங்கள் தலை மீது பறவை பறப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் கூடு கட்டுவதை தடுக்க முடியும். இன்று உலகெங்கும் பலர் கவலைப் பறவைகளின் கூடுகளாகிவிட்டார்கள். கவலை வருவதும் போவதுமாக இருக்கலாமே ஒழிய நிரந்தரக் குடியுரிமை கோருவதற்கு அனுமதிக்க வேண்டாம். கவலைகள் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் உதயமானாலும் ஏதேனும் ஒரு பகுதியை நிரந்தரமாக ஆக்ரமித்து வீணாக்கி விடுகின்றன. மருந்தோ மருத்துவரோ காப்பாற்ற முடியாது. காரணம் மருந்து உடலைச் சரிசெய்யும் வேகத்தை விட மனம் உடலை நாசமாக்கும் வேலையை அதிகரித்து விடுகிறது.
வாழ்க்கையே நோய்களின் துறைமுகமாகி ஒரு நோய் போவதும் மறு நோய் வருவதுமாக இருந்தால் சந்தோஷம் சாத்தியமா? பயம் கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் தோன்றிய கொஞ்ச காலத்திலேயே சரிசெய்யப்படவில்லையென்றால் அதுவே உடம்பில் நிரந்தர நாசத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இருதய நோய் உள்ளவர்களை ஆராய்ந்தால் பலரும் எதிர்காலம் பற்றிய பயம் உடையவர்கள. கிட்டத்தட்ட உடல் குறைபாடுகள் பலவும் எதிர்மறை எண்ணங்களால்தான் உருவாகுகிறது என்று யோகிகள் சித்தர்கள் கருதுகிறார்கள்.
Irritable bowel syndrome ஆய்வுக் கட்டுரையில் வயிறு இரண்டாவது மூளை என்கிறார் ஆய்வாளர். எல்லையற்ற வேலைப்பளு மன அழுத்தம் இயலாமை ஏற்படும்போது நமக்குத் திகைப்பும் இறுக்கமும் ஏற்படுவது போலவே, மலச்சிக்கல், குடல் செயல்படாமை வயிற்றில் தோன்றுகிறது. கடமையைச் செய்ய முடியாதோ என்ற பயம் வந்ததும் அதுவே வயிற்றுப்போக்காக மாறிவிடுகிறது. குடலுக்கும் மூளைக்கும் அப்படி ஒரூ ஒருமைப்பாடு உண்டு என்கிறது ஆய்வு.
எல்லா நோய்க்கும் ஒரு மாமருந்து உண்டு. இது அனுமன் இராமாயண யுத்தத்திலே தூக்கி வந்த சஞ்சீவினி மலை மாதிரியான சர்வரோக நிவாரணி. அந்த மருந்து விவேகம். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது. கிடைக்க முடியாதது கிடைக்க வாய்ப்பில்லை.
அமெரிக்காவின் கோடீஸ்வரர் ராக்ஃபெல்லர் இளமையில் பணவெறியோடு இருப்பாராம். ஒருமுறறை அவரது கப்பல் ஒன்றில் 40000 டாலர் மதிப்புள்ள தானியங்களை ஏற்றி அனுப்பினார். ஆனால் இன்சூரன்ஸ் செய்ய 150 டாலர்களை செலவிட விரும்பவில்லை. அவ்வளவு கஞ்சத்தனம். ஆனால் கடும் புயல் விசி கப்பல் மூழ்கி விட்டால் என்ன செய்வது என்று இரவு தூக்கம் வரவில்லை. விடிந்ததும் தன் கூட்டாளியை இன்ஷ்யூர் செய்ய விரட்டினார். கப்பல் சௌகரியமாக வந்து சேர்ந்த தகவல் வந்தது. இன்ஷுரன்ஸ் காசு நஷ்டம் என வருத்தப்பட்டார் ஆம். இந்த கவலையால் அவர் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
பிறகே எல்லா கவலைகளையும் தூக்கி எரிந்து புதுமனிதரானார். கவலைகள் உங்கள் கை கால்களை பூட்டுபோடுவதற்கு முன் நீங்கள் ஏன் கவலைகளைக்கு விடுதலை கொடுக்கக் கூடாது.