
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து ஒரு மனிதனாகி இந்தப் பரந்த பூமியில் வாழும்போது அந்த 'மனிதன்' கூடவே வரப்போவது அவனுடைய தன்னம்பிக்கை ஒன்றைத் தவிற வேறேதுவும் இல்லை. எனவே ஒரு நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் சொல்லித்தர வேண்டியது சுயமாக முடிவு எடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒரு குழந்தை இதைக் கற்றுக் கொண்டுவிட்டாலே அதனால் இந்த உலகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சிறகடித்து பறக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் பள்ளிப் படிப்பில் இறுதிக் கட்டத்தில் வரும்போதே தான் பெரிய மனிதானபின் என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவது ஒருவிதத்தில் மிகவும் நல்லதுதான்.
காரணம் அவனுடைய எதிர்காலத்தை முடிவு செய்யும் பணி அவனுடைய 16 வது வயதிலேயே அவனிடம் போய்விடுகிறது.ஒரு குழந்தைக்கு எல்லாவற்றையும் பெற்றோர் சொல்லித் தருவதைப் போல் தனிப்பட்ட முடிவெடுக்கும் திறனையும் பெற்றோரே சொல்லித்தர வேண்டும்.
சின்னக் குழந்தையாக இருக்கும்போதே அந்தக் குழந்தைக்குத் தன்னுடைய தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளத் தெரியவேண்டும். தேவைகளை உணர்ந்து கொண்டால்தானே அவற்றை அடையவேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். அது இல்லாமல் பெற்றோரே குழந்தையின் சார்பாக முடிவு எடுத்துக் கொண்டிருந்தால் குழந்தையின் நலன் அது நினைத்தாலும் தொலை நோக்குப் பார்வையில் பார்த்தால் அது குழந்தையின் தனித்தன்மையை முழுமையாக பாதித்துவிடும் அபாயம் உள்ளது என்பதைப் பெற்றோர் உணரவேண்டும்.
மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜெயந்தினி ஒரு குழந்தைக்குப் பேச தெரிகின்ற நிலையிலேயே அதன் தேவைகள் என்ன என்பதை அதையே உணரவைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ஒரு குழந்தை பேச ஆரம்பித்த உடனேயே பிரத்யேகமான அதற்கென்று குணங்களும் வந்து விடுகின்றன. சின்ன சாப்பாட்டு விஷயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் நெய் கலந்த சாதத்தை விரும்பிச் சாப்பிடுகின்றன.
அதே நேரம் சில குழந்தைகள் அதே சோற்றைத் துப்பி விடுகின்றன். இந்தக் குணம் எதைக்காட்டுகிறது? அரும்பாக இருக்கும்போதே அதன் மனத்தில் தனி விருப்பு வெறுப்பு வந்து விடுகின்றன என்பதைத்தானே?"
ஆனால் நாம் சாப்பாட்டு விஷயத்தில் குழந்தை விரும்புவதை சந்தோஷமாகக் கொடுக்கிறோம். ஆனால் அதே குழந்தை வளர்ந்து தன் விருப்பத்தைச் சொல்லும்போது நாம் அதற்கு பல விதங்களில் முட்டுக்கட்டைப் போடுகிறோம். இங்கே முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
பெற்றோருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைக்கும் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை பெரியவர்கள் உணரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் பெற்றோர்களே குழந்தைகள் சுயமாகச் சிந்திப்பதை வரவேற்க வேண்டும். அந்த எண்ணத்தை அதன் அவசியத்தை மனத்தில் விதைக்க வேண்டும்.