நம்மில் பலர் தினந்தோறும் பிறரோடு வாதங்கள் செய்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. விவாதங்கள் நமக்கு நன்மை தருமா? என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். மாறாக இவை நமது நிம்மதியைக் குலைத்து பொன்னான நேரத்தை வீணாக்கும் என்பதே உண்மை. உறவுகளையும் நட்புகளையும் இழக்கச் செய்யும் ஒரு ஆயுதம் வீண் விவாதம். இதைப் பற்றி இந்த பதிவில் நாம் சற்று பார்ப்போம்.
பொதுவாக எந்த ஒரு செயலுக்கும் சரி தவறு என இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒரு கருத்து மற்றொருவருக்குத் தவறாகத் தோன்றும். இதில் உண்மையும் உள்ளது. விவாதங்கள் முற்று பெறாமல் பிரச்னையிலும் மனஸ்தாபத்திலும் முடிவடைவதற்கு முக்கிய காரணம் நாம் சொல்லும் கருத்து முற்றிலும் சரி என்றும் அதை எதிரில் உள்ளவர் கட்டாயம் ஏற்றே ஆகவேண்டும் என்று விவாதிப்பவரின் மனநிலையாக இருக்கும். ஒருவருக்கு இருக்கும் அதே மனநிலை மற்றவருக்கும் இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
சிலர் ஓரிடத்தில் நின்று கொண்டு அடுத்தவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறு என்பதை உணர வேண்டும். அடுத்தவரின் சொந்த விஷயங்களில் தலையிடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. அவரவர் பிரச்னைகளை அவரவரே பிரச்னைகளின் தன்மைகளை நன்றாக ஆற அமர யோசித்து ஆராய்ந்து பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவர் தான் சொல்லும் கருத்தை எதிரே விவாதிப்பவர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே பிரச்னைக்கு அடிகோலுகிறது. வாய் வார்த்தைகள் தடித்து கை கலப்பில் முடிந்த விவாதங்களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. இதில் இருதரப்பினருக்கும் அவமானமே மிஞ்சும் என்பதையும் நம் உணரவேண்டும். நமது கருத்து சரியாக இருக்கும் என்பது நமது அனுமானமே தவிர உண்மையல்ல. மற்றவர் சொல்லும் கருத்து உண்மையாகவும் இருக்கலாம்.
விவாதம் என்பது நாம் சொல்லுவதை மற்றவர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அல்ல. ஒரு கருத்தை இருவர் விவாதிக்கும்போது அதில் உள்ள உண்மைத் தன்மையை யார் ஆதாரப்பூர்வாக எடுத்துச் சொன்னாலும் மற்றவர் அதை ஏற்றுக் கொண்டு தெளிவடைய வேண்டும். இதுதான் ஆரோக்கியமான விவாதம். இது நன்மை தரும் விவாதமும் கூட.
கூடுமானவரை விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. விவாதங்கள் நல்ல நட்புகளை இழக்கச் செய்யும். உறவுகள் பிரிந்து செல்ல வழிகோலும். உங்களுடன் ஒருவர் வீண் விவாதத்தில் ஈடுபட வைக்க முயற்சிக்கும்போது நீங்களும் விமர்சிக்கிறேன் பேர்வழி என்று அவருடன் மல்லுகட்டிக் கொண்ட நிற்காதீர்கள். இது இருவரின் மனநிம்மதியைக் கெடுத்துவிடும். ஒரு நல்ல சூழ்நிலையைக் கெடுத்துவிடும். யாராவது வீண் விவாதத்தில் உங்களுடன் ஈடுபட முயற்சிக்கும் போது நாசூக்காக பேச்சை மாற்றி விடுங்கள். அல்லது “மன்னிக்கவும். அவசர வேலை இருக்கிறது பிறகு சந்திக்கிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்படப் பாருங்கள். அப்படியும் அவர் உங்களை விடவில்லை என்றால் “நீங்க சொல்றதுதான் சரி பிரதர்” என்று சொல்லி விடுங்கள். இதில் ஒரு தவறும் இல்லை. அவரும் நிம்மதியாகச் செல்லுவார். இது உங்களுக்கும் நல்லது. அவருக்கும் நல்லது.
ஒரு விவாதமானது உங்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய பொருளாக இருக்க வேண்டும். பிறர் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் விவாதிக்காதீர்கள். அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு. நம்மிடமே பல குறைகள் இருக்கும் போது அடுத்தவரின் குறைகளை நாம் ஏன் விவாதிக்க வேண்டும். கூடுமானவரை வீண் பேச்சுக்களைக் குறையுங்கள். இது எல்லோருக்கும் நல்லது. எப்போதும் அன்பாகப் பேசுங்கள். நேர்மறைப் பேச்சுக்களை மட்டுமே பேசுங்கள். உறவும் நட்பும் பலமாகும். நிம்மதி எப்போதும் நிலவும்.