

இலக்கிய மேதை டாக்டர் ஜான்சன் ஒரு கருத்தைச் சொன்னர். இதற்குப் பொருள் என்னவென்றால் பழைய நண்பர்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள் என்று சொன்னார். இதற்குப் பொருள் என்னவென்றால் பழைய நண்பர்களையும் இழந்து விடக்கூடாது. புதிய நண்பர்களையும் உண்டாக்கி கொண்டே இருக்க வேண்டும் என்பதாகும்.
வாழ்க்கை இன்பத்துக்கு இது இன்றியமையாதது . நல்ல நண்பர்களைப் பெறுவதைப் போல வாழ்க்கையில் ஒருவன் பெறக்கூடிய வேறு பாக்கியம் எதுவும் இருக்க முடியாது. நம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நண்பர்கள் தேவை. எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கின்ற போதுதான் சிந்தனை விரிவடைகிறது. புதிய எண்ணங்கள் தோன்றுகின்றன.
தண்பர்களிடம் மட்டும்தான் மனம் விட்டு விவாதிக்க முடியும். சில விஷயங்களை மனத்துக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தால் அது பெரிய பாரம் ஆகிவிடுகிறது. அது கவலையை வளர்த்து பலகீனம் அடையச் செய்கிறது. அழுத்தி வைக்கப்பட்ட எண்ணங்கள் உடல் நிலை பாதிப்புகளுக்கும் காரணமாகிவிடுகிறது.
கவலை என்கிற பாரத்தைத் தொடர்ந்து சுமக்காமல் இறக்கி வைப்பதற்குச் சுமை தாங்கி தேவைப்படுகிறது. பாரத்தை இறக்கக்கூடிய சுமைதாங்கிகளாக நல்ல நண்பர்கள் பயன்படுகிறார்கள்.
நம்முடைய மனத்தின் பாரத்தை அவர்களிடம்தான் இறக்கிவைக்க முடியும். தவிர, எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவர்களால் தான் நல்ல ஆலோசனைகளைக் கூற முடியும். நல்ல நண்பர்கள் எளிதில் கிடைத்துவிட மாட்டார்கள் . ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பரஸ்பரம் மரியாதையும் அன்பும் காட்டுகின்றபோது நட்பு மலர்ச்சிப் பெறுகின்றது. இரண்டு நண்பர்கள் எல்லா விஷயங் களிலும் இணங்கிப் போக வேண்டும் என்கிற அவசியமில்லை. கருத்து வேற்றுமைகளையும் தாண்டி நிலவுகிற அன்புதான் நட்புக்கு அடிப்படை .இவ்வாறு அமைகின்ற நட்புதான் நிலைக்கிறது. நீடிக்கிறது.
'நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் இரும்பு கொக்கிப் போட்டு அவர்களைப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். போலி தனமாக அன்பு காட்டுகின்றவர்களும் இருப்பர்கள் . காரியமாக வேண்டும் என்பதற்காக நெருக்கமாக பழகுகின்றவர்களும் இருப்பார்கள்.
இடித்து உரைத்து நம்முடைய தவறுகளை திருத்துகின்றவர்களும் இருப்பார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் நம்மிடம் கடுமையாக நடந்து கொண்டாலும், நம்மைத் திருத்துவதுதான் அவர்களின் நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய நலனைப் பற்றி கவலைப்படாமல், நம்முடைய திருப்திக்காக இனிமையாகப் பேசிப் பழகுகின்றவர்கள் நல்ல நண்பர்கள் ஆக மாட்டார்கள்.
ஒருவர் எப்படிப் பேசுகிறார் என்பதைவிட என்ன நோக்கத்துடன் பேசுகிறார் என்பதைத்தான் முக்கியமான விஷயமாகக் கருதவேண்டும். நல்ல நட்புக்கு இலக்கணம் சொல்கின்ற வள்ளுவர் அழகான உவமையினைச் சொல்லி நல்ல நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.
ஆடை அவிழ்ந்த மாத்திரத்தில் கை எவ்வாறு தாமாகச் சென்று அதைப்பற்றி மானத்தைக் காப்பாற்றுகிறதோ அதைப் போல ஒருவனுக்குத் துன்பம் வந்தபோது உடனே சென்று அதை நீக்குவதுதான் நட்பு என்கிறார் வள்ளுவர்.