
முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் மகள்கள் ஆன அங்கவை, சங்கவை இருவரையும் அவர்கள் மிகவும் வறுமையுற்று இருந்த காலத்தில், அவரின் நற்பண்புகளை கண்டு வியந்த ஔவையார் அவர்களுக்கு மணமுடித்து வைத்தார் என்று படித்திருக்கிறோம்.
அதேபோல் கடையேழு வள்ளல்கள் வழியில் சிலர் அறம் தவறி நடந்தபொழுது, நம் பெண்பாற் புலவர்கள் அவர்களிடம் சென்று அவர்களின் நற்பண்புகளை எடுத்துக்கூறி, அதற்கு களங்கம் ஏற்படுமாறு நீ இந்த தீய செயலை செய்யலாமா? அவ்வாறு செய்வதால் உன் புகழ் என்னாகும். உன் நாட்டு மக்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கூறி அவர்களை திருத்திய வரலாறு கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதேபோல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்ற வரிகளை படித்து விட்டு, எம்.ஜி.சக்கரபாணி அவர்கள், அவர்களிடம் சென்று குறை இருந்தால் அது எப்படி 22 கேரட் தங்கம் ஆகும் என்று கேட்க அதற்கு கண்ணதாசன் நான் எழுதியது பிழையே என்று வருந்தியதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.
இப்படி தவறுகளை திருத்திக் கொண்டவர்கள்தான் மாபெரும் வெற்றிகளை அடைந்தவர்களாக இன்றும் நம் முன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
அதேபோல் மாவீரரான அலெக்சாண்டருக்கும் ஒரு நிகழ்வு உண்டு. பேரறிஞரும், பெருவீரருமான அலெக்சாண்டர் போர் மேற்கொண்டு சென்ற பொழுது பெண்கள் அரசாண்ட நாடு ஒன்று அவன் முன் எதிர்ப்பட்டது. அதைத் தாக்கி தாம் வெற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியதால், அந்த நாட்டின் அரசி அவன் முன் எதிர் பட்டார். வீராதி வீரா! எதற்கு இங்கு வந்துள்ளாய்? என்று வினவினார். போர் செய்து வெற்றிகொள்ள என்று வீராப்புடன் கூறினார் அலெக்சாண்டர்.
அதைக் கேட்டதும் அந்த அரசி மன்னர் மன்னா! பெண்களை வெற்றிக்கொள்ளவா நீ வந்தாய்? நீ எங்களை வெற்றி கொள்ளின் உனக்கு உண்மையில் புகழ் ஏற்படுமா? மாவீரன் அலெக்சாண்டர் சில நிரபராதிகளான பெண்களை கொன்றுவிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றல்லவா உலகம் இடித்துரைக்கும். ஆனால் எதிர்ப்பாராத விதமாக நாங்கள் உன்னை வென்றுவிட்டாலோ உன் வான்புகழ் புகழ் மாசுபட்டு மறைந்துவிடுமே 'என்று கூறினாள்.
அதைக் கேட்டதும் அலெக்சாண்டரின் அறிவு கண்கள் வெளிச்சம் பெற்றன. 'அரசியே நீ எனக்கொரு அனுமதி நல்க வேண்டும். இந்நாட்டின் தலைவாயிலில் 'பைத்தியக்காரனாகிய அலெக்சாண்டர் ஆகிய நான் பல நாடுகளை வென்ற பின் இந்நாட்டிற்கு வந்து பெண்களிடம் இருந்து அறிவு கற்றுக்கொண்டேன் 'என்று பொறிக்கச் செய்யவேண்டும் 'என்றான் வினயமாக. அதற்குச் சரி என்றாள் அவ்வரசி.
அதன் பிறகு 'நீர் எவ்வாறு உலகை வெற்றி கொண்டீர்' என்று அலெக்சாண்டரிடம் பலரும் கேட்ட பொழுது "நான் வென்ற நாடுகளில் உள்ள மக்களை நான் கொடுமைப்படுத்தவில்லை. அந்நாட்டில் ஆண்ட மன்னர்களின் பெயர்களை நான் பெருமைப் படுத்தினேனேயன்றி சிறுமைப்படுத்தவில்லை என்று பதில் கூறினான் அந்த வீராதி வீரனான அலெக்சாண்டர்.
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என்று வள்ளுவரும் கூறியுள்ளார். ஆதலால் நாம் செய்யும் பிழையை சிலர் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுமாறு எடுத்து இயம்பினால் போற்றாரைப் பொறுத்தல் என்று மனதில் எண்ணிக் கொண்டு, மேற்கூறியவர்களின் ஆற்றலும் வீரமும் நமக்கு எதற்கு சான்றாக விளங்குகின்றன என்பதை நினைவில் கொண்டு, நம்மை நாம் திருத்திக் கொண்டோமே ஆனால் நாம் எதிலும் இயல்பாக வெற்றி பெறலாம்.
மற்றவர்களிடமும் அன்பான அணுகுமுறையை கையாளலாம். இதனால் எதையும் பொறுத்துக்கொள்ளும் இதயம் நமக்கு வலுவடையும் என்பது உறுதி.