பல கோடிகளைப் பெற்றுத் தந்த பழைய டிராக்டர் புகைப்படம்... சாத்தியமானது எப்படி?

செக்கு மாடுகளைப் போல ஒரே வட்டத்தில் சுற்றாமல், புதியதாகச் சிந்திக்கப் பழக வேண்டும். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் மாற்றி யோசித்தவர்களே!
The value of old tractor Tamil motivation
Success in lifeCredits: AI Image
Published on

"என்ன வேலை செஞ்சு என்ன பிரயோஜனம்! கஷ்டப்பட்டு உழைத்தும் ஒரு பைசா வருமானம் இல்லையே!" என்று பெருமூச்சு விடுபவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களைக் கண்டுதான் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், 'நம்பினால் நம்புங்கள்' (Believe It or Not) புகழ் பெற்றவருமான ராபர்ட் ரிப்ளி (Robert Ripley) ஒரு கருத்தைக் கூறினார்.

அவர் தனது புத்தகம் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "நான்கு பேர் ஆளுக்கொரு இரும்புத் துண்டை தலா 250 டாலர்களுக்கு வாங்கினர். அதில் ஒருவன் அதனைத் தனது சொந்த உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தினான். இன்னொருவன் அதை உருக்கி, குதிரைகளுக்கான லாடங்களாக மாற்றி 2,000 டாலர்களுக்கு விற்றான். மற்றொருவன் அதே இரும்பைக் கொண்டு தையல் இயந்திரத்திற்கான தரமான ஊசிகளைத் தயாரித்து, ஒரு லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்தான். நான்காவது நபரோ, அந்த இரும்பைக் கொண்டு ஒரு சக்திவாய்ந்த இயந்திரத்தின் முக்கியப் பாகத்தைத் தயாரித்து, பல லட்சக்கணக்கான டாலர்களுக்கு விற்றுப் பெரும் லாபம் ஈட்டினான்."

இங்கே இரும்புத் துண்டு ஒன்றுதான்; ஆனால், அதை விதவிதமாக வடிவமைக்கும் போது அதன் மதிப்பு பல மடங்கு பெருகுகிறது. அந்த இரும்பை வாங்கிய ஒருவன் அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஆனால், பயனுள்ள வகையில் சிந்தித்த மற்றவர்களோ, தங்கள் சிந்தனைத் திறனால் அதன் மதிப்பை ஆயிரம், லட்சம் எனப் பல மடங்காக மாற்றினர்.

திறமைகளை வெளிப்படுத்துங்கள்!

இதைப் போலவே நம்மிடமும் ஏராளமான திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை நாம்தான் வெளிப்படுத்த வேண்டும். செக்கு மாடுகளைப் போல ஒரே வட்டத்தில் சுற்றாமல், புதியதாகச் சிந்திக்கப் பழக வேண்டும். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் மாற்றி யோசித்தவர்களே! அவர்களின் சிந்திக்கும் திறன் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால்தான் வெற்றி அவர்களுக்குச் சாத்தியமானது.

ஒரு மாறுபட்ட சிந்தனை நம் செயல்திறனையே மாற்றி அமைத்துவிடும். செயல்முறையில் மாற்றம் வரும்போது, அதன் விளைவுகளும் நன்மையாகவே இருக்கும். அதற்குச் சிறு உதாரணம், அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு:

ஒரு குக்கிராமத்தில் கேட்பாரற்று, பழைய இரும்பு விலைக்குப் போக வேண்டிய நிலையில் ஒரு நூற்றாண்டு காலப் பழமையான இத்தாலியத் தயாரிப்பு டிராக்டர் ஒன்று இருந்தது. அதன் உரிமையாளர் வம்சாவழியில் வந்த ஒருவர், வித்தியாசமாகச் சிந்தித்து அந்தப் பழைய டிராக்டரைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வைரலாக்கினார்.

இதனைப் பார்த்த அந்த இத்தாலியத் தயாரிப்பு நிறுவனம், "நாங்கள் தயாரித்த முதல் டிராக்டர் ஆயிற்றே!" என்று வியந்து, பல கோடிகளைக் கொடுத்து அதனை வாங்கியது. உரிமையாளருக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இதற்கு அடிப்படையாக அமைந்தது அவரின் அந்த ஒரு மாற்றுச் சிந்தனை மட்டுமே!

வெற்றிக்கான வழிமுறை

உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், நீங்கள் மிகப்பெரிய புத்திசாலியாகவோ, பணக்காரராகவோ அல்லது அழகானவராகவோ இருக்கத் தேவையில்லை. உங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தாலே போதுமானது.

சிந்திக்கும் திறன் மட்டுமே வாழ்வை மாற்றிவிடாது. அந்தச் சிந்தனையைத் தைரியத்துடன் செயல்படுத்துபவனே வாழ்வில் வெற்றி(Success in life) பெறுகிறான். இதற்குக் கடவுளின் அருளும் தேவை. எனவே, தினமும் காலையில் எழுந்தவுடன், "நான் இன்று இந்தச் செயலைச் செய்யப் போகிறேன்; அதை நிறைவேற்ற எனக்கு ஆற்றலைக் கொடு. அதில் வெற்றி பெற இறைவா என்னுடன் இரு!" என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

நமது முடிவுகள் 100% சரியானவைதான். ஆனால், முடிவெடுத்த பின் அதனைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டினால் மட்டுமே அது தவறாகப் போக வாய்ப்புள்ளது. சாதிக்கத் துணிந்துவிட்டால், குறைகள் ஒரு பொருட்டே அல்ல என்று உறுதியாக நின்று சாதித்தவர்கள் பலர்.

இதையும் படியுங்கள்:
Re-charge: தாத்தா பாட்டியின் வாழ்வியல் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமா?
The value of old tractor Tamil motivation

வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் நமக்குக் குறைந்த அளவே அதிகாரம் உண்டு. ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் முழு அதிகாரமும் சக்தியும் நம்மிடமே உள்ளது. நீங்கள் தவறவிட்ட வாழ்க்கை உங்களுக்கானது அல்ல என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நீங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை மட்டுமே உங்களுக்கானது! எனவே, எடுக்கும் நல்ல முடிவில் உறுதியாக இருந்து அதனை நிறைவேற்றினால், வெற்றி நிச்சயம் நம் கைகளில்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com