Re-charge: தாத்தா பாட்டியின் வாழ்வியல் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமா?

நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அன்பு, ஆரோக்கியம் மற்றும் நிதானம் போன்ற பொக்கிஷங்களை நாம் கைவிடாமல் பற்றிக்கொள்வோம்.
grandparents
grandparents life lessons AI generated
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

தாத்தா பாட்டி என்பவர்கள் வெறும் உறவுகள் மட்டுமல்ல; அவர்கள் ஒரு குடும்பத்தின் வேர்கள். அவர்களின் வாழ்க்கை முறை இன்றைய தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய பாடப்புத்தகம்.

பொறுமை எனும் பொக்கிஷம்: இன்றைய காலகட்டத்தில் நமக்கு ‘இன்ஸ்டன்ட்’ முடிவுகள் தேவைப்படுகின்றன. ஆனால், தாத்தா பாட்டி காலத்தில் எதற்கும் காத்திருந்தார்கள். ஒரு கடிதம் வர வாரக்கணக்கில் காத்திருந்த அந்தப் பொறுமை, அவர்களுக்கு வாழ்க்கையின் சவால்களை நிதானமாக கையாளும் பக்குவத்தைத் தந்தது.

சிக்கனம் மற்றும் சேமிப்பு: 'பழையது தானே' என்று எதையும் அவர்கள் தூக்கி எறிந்ததில்லை. பழுதான பொருட்களைச் சீரமைத்து பயன்படுத்துவதிலும், கையில் இருக்கும் சொற்பப் பணத்தில் ஒரு பகுதியை எதிர்காலத்திற்காகச் சேமிப்பதிலும் அவர்கள் கில்லாடிகள். இந்த திட்டமிடல் தான் பல குடும்பங்களை இன்றும் தாங்கிப் பிடிக்கிறது.

இயற்கையோடு கலந்த வாழ்வு: அதிகாலை எழுவது, ரசாயனம் இல்லாத உணவு, நடைப்பயணம் என அவர்கள் வாழ்ந்த விதம் இயற்கையானது. 'உணவே மருந்து' என்பதை அவர்கள் வெறும் சொல்லாகக் கொள்ளாமல், வாழ்வியலாகக் கொண்டிருந்தனர். அதனால் தான் 80 வயதிலும் பலரால் நிமிர்ந்து நடக்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
அன்புப் பாலம்: தாத்தா - பாட்டி; பேரன் - பேத்தி!
grandparents

உறவுகளின் முக்கியத்துவம்: கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அவர்களுக்கு, விட்டுக்கொடுத்தல் (Adjustment) என்பது இயல்பாகவே இருந்தது. 'நான்' என்பதற்குப் பதில் 'நாம்' என்கிற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது. சுற்றத்தாருடன் இணக்கமாக வாழ்வது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

அவர்கள் இணைந்து பேணிய உடல் நலம்: நம்முடைய தாத்தா, பாட்டிமார்கள் இணைந்தே நிறைய வீட்டு வேலைகளைச் செய்தார்கள். ஆண்கள் செய்யும் வேலைகளுக்கு அந்த வீட்டு பெண்கள் எப்போதும் உதவிகரமாகவே இருந்தார்கள். கணவர் விவசாய நிலத்தை உழுதால் அங்கு நாற்று நடும் பணியை மனைவி மற்றும் பிள்ளைகள் செய்தனர். கணவர் பனை ஏறி பதநீர் இறக்குபவராக இருந்தால் அந்த பதநீரை காய்ச்சி கருப்புகட்டியாக்குகிற பணியைப் பெண்கள் செய்தனர்.

கணவர் மீன் பிடித்து வருபவராக இருந்தால் மற்றவர்கள் அவற்றை விற்பனை செய்யவும், மீதம் வருவதை உலர்த்தி கருவாடாக மாற்றும் செயலையும் செய்தனர். அதனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள்.

தாத்தா பாட்டியின் சுருக்கங்கள் நிறைந்த கைகள், அவர்கள் உழைத்த உழைப்பிற்கும், அவர்கள் கடந்த வந்த கஷ்டங்களுக்கும் சாட்சி. அவர்கள் ஒரு மரத்தின் நிழல் போன்றவர்கள்; அந்த நிழலில் நாம் அமர்ந்திருப்பது நமக்கான வரம். அவர்களிடம் ஒரு 10 நிமிடம் பேசுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளில் ஆயிரம் மேலாண்மைப் பாடங்களும் (Management lessons), வாழ்வியல் உண்மைகளும் மறைந்திருக்கும். நீங்கள் இன்று சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனைக்கு, அவர்கள் மிக எளிமையான ஒரு தீர்வைச் சொல்லக்கூடும்.

இதையும் படியுங்கள்:
தாத்தா, பாட்டி எனும் சொற்களைக் கேட்டு அலறும் முதியவர்கள்!
grandparents

அதிகப்படியான சத்தமோ, தேவையற்ற வேகமோ இல்லாமல், நிதானமான பேச்சும், திட்டமிட்ட சேமிப்பும், இயற்கையோடு இணைந்த உணவும் இருந்தால் நம் வாழ்வு என்றும் மணம் வீசும். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பது மாற்ற முடியாத விதி என்றாலும், நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அன்பு, ஆரோக்கியம் மற்றும் நிதானம் போன்ற பொக்கிஷங்களை நாம் கைவிடாமல் பற்றிக்கொள்வோம்.

logo
Kalki Online
kalkionline.com