
கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ் சினிமாவில் துணை நடிகர்களுக்கான காட்சிகள் குறைவாகவே இருக்கும். இருப்பினும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் அப்புக்குட்டி. சமூகத்தில் ஒருவரது வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என இன்றைய இளைஞர்களுக்கு இவர் அறிவுரை வழங்கியுள்ளார். இதுபற்றிய கூடுதல் தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்த் திரையுலகில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த மறுமலர்ச்சி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார் அப்புக்குட்டி. அதற்கு பின் சொல்ல மறந்த கதை, கில்லி, அழகிய தமிழ் மகன் மற்றும் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். சினிமாவை விடாமல் தொடர்ந்து முயற்சித்தவருக்கு 2009 இல் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு கவனிக்கத்தக்க குணச்சித்திர நடிகர்களில் ஒருவரானார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அப்புக்குட்டி பிழைப்புக்காகவே சென்னைக்கு வந்துள்ளார். பிரபல தனியார் ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்புக்குட்டியை சினிமா பிரபலங்கள் பலர் கண்டுள்ளனர். அதில் சிலர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை இவருக்கு கொடுத்தனர். இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட அப்புக்குட்டி குள்ளநரி கூட்டம், அழகர்சாமியின் குதிரை, சுந்தர பாண்டியன், வீரம் மற்றும் வேதாளம் போன்ற திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதில் அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
சமீபத்தில் தமிழக இளைஞர்களுக்கு ஒரு ஆகச் சிறந்த அறிவுரையை வழங்கியுள்ளார் அப்புக்குட்டி. இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் ஊரில் பணமில்லாத ஏழைகளுக்கு சிலபேர் அவர்களின் திருமணத்திற்கு கூட பத்திரிகை வைக்க மாட்டார்கள். எல்லாருமே இங்கு சாதியைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால், அதைத் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. முதலில் நீங்கள் பொருளாதார ரீதியாகவும், பண ரீதியாகவும் முன்னேறுங்கள். அதுதான் நீங்கள் யார் என்பதை பலருக்கும் நிரூபிக்கும். வாழ்க்கையில் முன்னேற நினைத்தால் பண ரீதியாக முன்னேறுங்கள். அதன்பின் உங்களுக்கு பின்னால் ஆயிரம் பேர் வருவார்கள்,” என்று அவர் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் தான் அதிகம் என்ற சூழலில், வாழ்க்கையில் முன்னேறுவது மிகவும் அவசியம். வருங்காலம் எப்படி இருக்கும் என்றே சொல்ல முடியாது. தொடர்ந்து மாதச்சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர், பண ரீதியாக முன்னேறுவது மிகவும் கடினம். இதற்கு தொழில்முனைவோராக மாற வேண்டும்.
எந்தத் தொழிலைத் தேர்வு செய்வது என்பதில் தொடங்கி இலாபத்தை ஈட்டுவது வரை பல சந்தேகங்களும், குழப்பங்களும் நமக்கு ஏற்படும். இதனையெல்லாம் எதிர்கொண்டு நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் போது நிச்சயமாக நம்மால் வெற்றியைப் பெற முடியும்.
யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்ல முடியாது. ஆகையால் கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் திறமையின் படி நீங்கள் சென்றால், நிச்சயமாக அது உங்களை முன்னேற்றும்.