Get rid of negative thinking!
Image credit - pixabay

எதிர்மறை சிந்தனையை எடுத்தெறியுங்கள்!

Published on

வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை வாதம் பெரும்பாலான மனிதர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது. எதிர்மறை சிந்தனை மாணவர்களை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.

எந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவற்றையும் மீறி நல்ல விஷயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி.

எல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது குற்றத்தைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும். காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது. மனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது.

மனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்து விடுகிறோம். ஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.

அவன் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பித்துவிடுகிறது. அவன் சதை தொய்வுறுகிறது - தாடை தொங்க ஆரம்பித்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு  பார்க்கவேண்டும்.

இன்னொரு மனப்பான்மை இருக்கின்றது. எதைப் பார்த்தாலும் இதைவிடச் சிறந்தது. ஏற்கெனவே எனக்குத் தெரியும் என்று சொல்லுகிற மனப்பான்மை. அடுத்தவர் களை மட்டம் தட்டுவதற்கான ஒரு  உபாயமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
திறமை என்பது வெற்றிக்கான தகுதி!
Get rid of negative thinking!

ஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை மனிதன் மறந்துவிடுகின்றான்.

பாரதப் பிரதமர் என்ன செய்யவேண்டுமென்பதை பள்ளி ஆசிரியர் விலாவாரியாகச் சொல்கிறார். ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் பாரதப் பிரதமருக்கு அறிவுரை கூறுகிறார்!

நிறைய பேர் அடுத்தவர்கள் என்ன செய்யவேண்டு மென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் கடமைகளை மட்டும் சௌகரியமாக மறந்து போகிறார்கள். எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிதுபடுத்துகிறார்கள்.

பூதக்கண்ணாடியால் பூங்கொத்துக்களை பார்க்கிறார்கள்.எங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

யாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள். இன்று மிகச் சின்ன வயதில் சர்க்கரை வியாதியும், ரத்த அழுத்தமும் வருகிறது என்கிறார்கள்.

ஒருவேளை நம்மிடம் உற்பத்தியாகும் கசப்புத்தான் சிறிய வயதிலேயே நம்மிடம் பாதிப்பையும், உடல்நலக் குறைவையும். ஏற்படுத்துகிறதா என்று தெரியவில்லை.

இருந்தாலும் வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது. கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடு பறக்கின்றன.

இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றன.

அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள் மீது பூக்கள் சொரியும்.

logo
Kalki Online
kalkionline.com