மாற்றமா? ஏமாற்றமா?

Change
Change
Published on

நம் வாழ்வில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தப் பதிவு.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வாசகத்தை அனைவருமே கேட்டிருப்போம். நாம் வாழும் உலகில் அனைத்திலுமே மாற்றம் என்பது நிச்சயம் உருவாகும். மாற்றம் இல்லையேல் மனிதனால் அடுத்த கட்டத்திற்கு செல்லவே முடியாது. இயற்கையில் கூட காலநிலைக்கேற்ப மாற்றங்கள் நிகழ்வதை நாம் பார்க்கிறோம். கோடையில் வெப்பம், மழைக்காலத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் குளிர்காலத்தில் பனி என ஆண்டுதோறும் இயற்கையின் மாற்றங்களை காண்கிறோம் அல்லவா! அதுபோல் நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றங்களையும் முழு மனதாக ஏற்றுக் கொண்டால் ஏமாற்றம் என்பதே கிடையாது.

அனைவருக்கும் வாழ்வில் இன்பம் மட்டுமே நிரந்தரம் இல்லை. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை நாம் உணர வேண்டும். இன்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் நாம் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பண்பு நம்மிடம் இருந்தால், எதையும் நம் பொறுமையைக் கொண்டு வென்று விடலாம். உதாரணத்திற்கு எப்போதும் பகலாகவே இருந்து விட்டால் அதை நாம் ஏற்றுக் கொள்வோமா? இரவொன்று வருவதால் தானே நாம் அனைவரும் உறக்கம் எனும் ஓய்வு நிலைக்குச் செல்கிறோம். நாள் முழுக்க கதிரவனால் ஒளியைத் தர முடியாதல்லவா! பகல் மறைந்து நிலவொளியில் இரவு மிளிர்கிறது. இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் தான் இரவை நன்றாக அனுபவிக்கிறோம். இதே போல் நம் வாழ்வில் நிகழும் சிறுசிறு மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டால் நன்மை நமக்கு தான்.

இதையும் படியுங்கள்:
கவிதை - மாற்றம் வேண்டும்!
Change

நம் அன்புக்குரியவர்களின் இழப்பு கூட வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், வெற்றிடத்தையும் ஏற்படுத்தி விடும். இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இல்லையேல் பாதிப்பு நமக்கு தான்.

அவ்வளவு எளிதில் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படி முடியவில்லை என்றால் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாம் அறிய வேண்டியது கட்டாயம். நம் வாழ்வில் ஏற்படும் சிறு மாற்றத்தால் இன்பம் உண்டானால் அதனை உடனே நம் மனம் ஏற்றுக் கொள்ளும். அதுவே, துன்பம் ஏற்பட்டால் அந்த மாற்றத்தை ஏற்க மனம் மறுக்கும்.

நம் மனதை ஒரு நிலைப்படுத்த தியானம் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதன்மூலம் மனதிற்கு அமைதி கிடைக்கும். அமைதியான சூழலில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். அதேபோல் அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொண்டு மாற்றத்தை ஏற்கப் பழகினால், ஏமாற்றம் இன்றி வாழலாம்.

எதிர்ப்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றம் இருக்காது என்பார்கள். இது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு மாற்றத்தை ஏற்றுக் கொண்டால் ஏமாற்றம் நமக்கில்லை என்பதும் உண்மை தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com