
சான்றோர்களின் நற்குணம் என்பது மென்மையானது. இது இவர்கள் கையிலிருக்கும் பாத்திரத்தை பாதுகாப்பது போன்றது. கையில் இருப்பது மண்சட்டி பாத்திரமாகவும் இருக்கலாம். கோப்பையாகவும் இருக்கலாம். இரண்டில் ஒன்றை பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக மென்மையாக இருந்தே தீர வேண்டும். சான்றோர்கள், தான் கெட்டாலும் பிறரை கெடுக்க நினைப்பதில்லை. இதுதான் அவர்களின் உன்னதமான குணம் ஆகும்.
சான்றோர்கள் விரும்புவது நற்குணம். நற்குணம் என்பது அடக்கமும் சேர்ந்தது. இது கொடுமைகளுக்கு அடங்குதல் அல்ல, விதிகள் பாதிக்கா வண்ணம் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடத்தல், இறைவனை நம்புதல், உரிமையை விட்டு கொடுக்காது இருத்தல், கடமைகளை செய்தல், உழைத்தல், சரியாக பேசுதல், எந்த இடத்தில் எப்படி நடப்பது என்பதை தெரிந்து இருத்தல், குறிப்பறிந்து செயல்படுதல், தன் மதிப்பை தானே கூட்டுதல், அன்பை கொடுத்து அன்பை வாங்குதல், உரிமை உள்ளதை அழுத்தமாகவும், உரிமையில்லாததை பட்டும் படாமலும் செயல்படுத்துவது, வெளி உலகம் பற்றி தெரிதல், பிறர் கஷ்டங்களைப் புரிதல், உண்மையான சந்தோஷத்தை மதித்தல்.
மேலும் நியாய நீதிக்கு உதவியாக இருத்தல், வீட்டில் உள்ளவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்தல், துன்பங்களை அணுகாமல் பார்த்தல், எல்லா நலனையும் அனுபவிக்க தெரிதல், பிறருடைய தேவைகளை எந்தெந்த நேரம் என்ன வேண்டும் என்று புரிதல், பிறரை ஓரளவு மன்னித்தல், வாலிப வேகத்தை புரிதல், தொண்டு செய்ய வேண்டிய இடத்தில் தொண்டு செய்தல், தன் குழந்தைகளையும், மனைவியையும் பணத்தாலும் நற்குணத்தாலும் பாதுகாத்தல், வயது காலத்தில் தனக்கு வேண்டிய வசதியோடு அளவோடு ஒதுங்கி கொள்ளுதல், கோபமும், பயமும் குறைந்து நிறைவாக காணப்படுதல், இளைய சந்ததியரை தொந்தரவு செய்யா வண்ணம் இருத்தல், நல்ல வார்த்தைகளை பேசுதல், பொறாமைகளை அகற்றுதல், தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்தல், அளவுக்கு மீறிய பாசத்தை கண்டித்தல், மன நிம்மதிக்கு இறைவனை மட்டும் நம்புதல், கவர்ச்சியை குறைத்தல் அதே நேரம் திறமைகளை கூட்டுதல், கண்டிப்பான காரியங்களை நிறைவேற்றுதல், சுத்தத்தை பேணுதல், மகிழ்ச்சியை தேடுதல், பிறரின் உடல் மனம் வேதனையைத் தடுத்தல், போன்றவை ஆகும்.
மேலும் பிறருக்கு மதிப்பு கொடுத்து பணத்தை போடும் இடம் போட்டு, சாப்பிடும் விதம் சாப்பிட்டு, பழகும் விதம் அறிந்து பழகி, கல்விக்கு மதிப்பு கொடுத்து, பணத்தை விரயம் செய்யாமல் அளவு தெரிந்து செலவு செய்து, தனியறையில் வைப்பவற்றை வைத்து, பயம் என்பதை நியாயத்துக்கு மட்டும் வைத்துக் கொள்ளவும், தவறுகளை தவறு என்று ஒத்துக் கொள்ளவும், பொறுமை எடுத்தல், பிறர் நிலை புரிதல், திருமணத்தில் சூழ்நிலையை புரிந்து கொள்ளுதல், பெண்ணுக்கும் பெண் வீட்டிற்கும் மதிப்பு கொடுத்தல், வயதானவர்களுக்கு கைகொடுத்து உதவி செய்து பிறர் கண்களுக்கு அழகாக காட்சி அளிப்பது போன்றவையாகும்.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை எப்படி வேலை கொடுப்பது, எப்படி விட்டு பிடிப்பது, எப்படி சமாளிப்பது, எப்படி சமாதானப்படுத்துவது, எப்படி கண்டிப்பான வேலை களை செய்ய சொல்லுவது, எப்படி வார்த்தைகளை கட்டுப் படுத்துவது, எப்படி ஆசைகளை கட்டுபடுத்துவது, பணத்தை பாதுகாப்பது, சொத்து விலையை மதித்து அதனை வாங்குதல், தேவைக்கு சொத்தை விற்றல் போன்றவைகள் சான்றோர்களின் நற்குணங்கள் ஆகும். அவர்களுடைய பேச்சின் தன்மையானது எப்போதுமே மாறாதது.