

உலகில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு நிம்மதியாக வாழ மற்றவர்களுடைய ஒத்துழைப்பு அதிக அவசியமாகும். நீங்கள் எல்லோரையும் நண்பர்கள் ஆக்கிக் கொண்டால்தான், அவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். உண்மையான அன்பு எங்கே காட்டப்படுகிறதோ அங்கேதான் நட்பு மலர்ந்து ஒத்துழைப்புக்கிட்டுகிறது. எனவே, யாவரையும் உள்ளன்போடு நேசிப்பதே மனக்கவலையை விரட்ட சிறந்த வழியாகும்.
இந்த நட்பு யுகத்தில் நண்பர்களின் உதவியின்றி இந்த யுகத்தில் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ முடியாது. 'நட்பு' என்ற தாரக மந்திரம் இன்று மனித இனத்தின் உயிர் மூச்சாக இருக்கிறது. நட்பு என்றால் மனிதர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமான உதவிகள் செய்து வாழும் ஓர் அற்புத நிலையாகும். இந்த நிலையை உங்களுக்குள் உண்டாக்கிக் கொள்ளும் முயற்சியில் முன்னேறுங்கள். நீங்கள் நட்பைப் பிறருக்கு அளித்தாலும், பிறரிடமிருந்து எதிர்பார்த்தாலும் அது பரஸ்பர உதவி அடிப்படையில் அமையும்போது மட்டுந்தான் அது நீடித்து உறுதியான நட்பாக இருக்க முடியும்.
பரஸ்பர உதவி என்பது வெறும் பணத்தினால் மட்டும்தான் என்று எண்ணி விடாதீர்கள். தகுந்த யோசனைகள் மூலமும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்துகொள்ள முடியும்.
மனிதனை அழிவுப்பாதைக்கு இழுத்துச் செல்லும் தீயவழியில் நண்பன் சிக்கிக்கொண்டு விட்டான் என்று தெரிந்தால் அவனைத் தீமையிலிருந்து காப்பாற்றி நல்வழியில் நடக்கச் செய்வதோடு துன்பப்படும் காலத்தில் உடனிருந்து அவன் துன்பத்திலும் பங்கு பெற வேண்டும். ஒரு நல்ல நண்பனின் கடமை இதுதான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
வாய் இனிக்கப் பேசி, வழி பார்த்திருந்து நம்மைக் காலை வாரிவிடும் விஷ ஜந்துக்கள் நிறைந்த இந்த உலகத்தில் நினைத்த மாத்திரத்தில் உயிர்த் தோழனைக் கண்டுபிடித்து விட முடியுமா என்று நீங்கள் எண்ணலாம். பொறுமையுடன் பல நாட்கள் சோதனை செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்தச் சோதனையை வீண் வேலை என ஒதுக்கிவிடாதீர்கள். நண்பர்கள் அற்ற தனிமை வாழ்வு உங்களுக்கு ஆனந்த வாழ்வாக அமையாது.
உங்கள் முகத்தில் எப்பொழுதும் மலர்ச்சி குடிகொண்டிருக்கு மானால் நீங்கள் நண்பர்களைத் தேடிப் போக வேண்டியதில்லை. பலர் உங்களைத்தேடி வந்து நண்பர்களாவதற்குத் துடிப்பார்கள். அவர்களுடன் உரையாடும் பொழுது, மனப்பூர்வமான அன்பும் பரிவும் உங்கள் பேச்சில் கலந்திருக்க வேண்டும். அதனால் அவர்கள் ஆனந்த மடைவார்கள்.
பொதுவாக நட்புத் துறையில் நீங்கள் கவர்ச்சியுள்ளவராக விளங்க வேண்டுமானால், உங்கள் சுயநலத்தை ஒதுக்கி வைக்க முயற்சி செய்யுங்கள். விட்டுக் கொடுக்கும் சுபாவமும் உங்களுக்கு அதிகம் வேண்டும். பிறரிடம் உள்ள குற்றம் குறைகளை அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்யும் பண்பு கூடாது. நல்ல நண்பனைவிட உயர்ந்த வரமில்லை;பொல்லாத நண்பனை விடப் பயங்கரச் சாபமுமில்லை. உயிர் நண்பர்களை அடைய ஒரே வழி நீங்கள் மற்றவர்களுக்கு அதாவது தகுதியுடைய சிலருக்காவது உயிர் நண்பனாக இருப்பதே.
குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, மற்றவர் கருத்தில் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்தால் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பதோடு, ஆனந்தமான வாழ்க்கையும் நிச்சயம் அமையும் என்பதில் ஐயமில்லை.