

36 வயதான அழகிய இளம் பெண். புகைப்படங்களில் அனைத்திலும் அழகான மாடல்போல இரு கைகளையும் பாக்கெட்டுக்குள் மறைத்தவாறு போஸ் கொடுப்பார். அவர் புன்னகையும் சொற்களும் அத்தனை வீரியம் மிக்கது. 2018ல், இந்திய குடியரசுத் தலைவர் வழங்கும் “நாரி சக்தி புரஸ்கார்” விருதையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கதை தெரிந்தால் வியந்து போவீர்கள். ஆம். மால்விகா ஐயர்தான் அவர்.
விடாமுயற்சியின் உருவமாக நம்மிடையே வாழும் இந்த வலிமை மிக்க பெண்ணின் வலி மிக்க வாழ்க்கை பற்றி நீங்கள் அறிவீர்களா? முதலில் இவரது எழுச்சி மிகுந்த வாழ்வின் சுவடுகளை இங்கு காண்போம்.
மால்விகா ஐயர் 1989 பிப்ரவரி 18 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்து சிறு வயதில் தந்தை பணி காரணமாக ராஜஸ்தானின் பிகானர் நகரில் வளர்ந்தார். 2002 மே 26 அவரது 13 ஆவது வயதில் நடந்தது அவரது வாழ்வை மாற்றிய அந்த விபத்து.
அவரது வீட்டுக்கு அருகில் ராணுவத்தினர் ஆயுத பயிற்சி் செய்யும் இடம் இருந்தது. ஒரு நாள் அங்கிருந்த ஆயுத கிடங்கு தீப்பற்றியதில் சில வெடிக்காத கை எறி குண்டுகள் சுற்றுப்புறத்தில் விழுந்து மண்ணுக்குள் புதைந்து கிடந்தன. அவற்றில் ஒன்றை சிறுமியாக இருந்த அவர் தவறுதலாக கையில் எடுத்து விளையாடியபோது அது வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்ததுடன் கால்களும் கடுமையாக காயமடைந்தன.
பல எலும்பு முறிவுகளும், நரம்பு முடக்கமும், உணர்வின்மை உள்ளிட்ட பல வேதனையான பாதிப்புகளுடன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்ட பின் இவர், ஊன்றுகோல் உதவியுடன் நடக்கத் தொடங்கி செயற்கைக் கைகளும் பொருத்தப்பட்டது.
18 மாதங்கள் படுக்கையிலேயே இருந்தாலும் வாழ்க்கையை விடாமல் பிடித்து நிற்கும் தனது மனவலிமையால் சிகிச்சையில் இருந்தபோதே 10ஆம் வகுப்பை தனிப் பரீட்சையாக எழுதிப் பிரமாதமான மதிப்பெண்கள் பெற்று குடியரசுத் தலைவரின் பாராட்டைப் பெற்றார்.
அதன் பின் டெல்லியின் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். சமூகப் பணியில் M.Phil மற்றும் Ph.D முடித்தார். இப்போது அவர் ஒரு மாற்றுத்திறனாளி உரிமை போராளி, தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராக செயல்பட்டு பலரது நம்பிக்கை நாயகியாக திகழ்கிறார். ஐக்கிய நாடுகள் மேடையிலும் பேசியுள்ள மால்விகா ஐயர் தற்போதும் இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார் நம்பிக்கை தரும் புன்னகையுடன் பலருக்கும் ரோல் மாடலாக.
இவர் மூலம் நாம் அறிவது என்ன? வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், விடாமுயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதுதான். இணையதளத்தில் இவரைப் பற்றி தேடி அறிந்தால் நம்பிக்கை மீதே நமக்கும் நம்பிக்கை பிறக்கும் என்பது நிச்சயம்.
சிலர் கல்வி அறிவு செல்வவளம் என அனைத்தும் இருந்தாலும் உடலில் சிறு பாதிப்பு என்றால் அப்படியே முடங்கிப் போய்விடுவது உண்டு. அதேபோல் நன்கு படித்திருந்தாலும் சிலருக்கு எளிதில் வாய்ப்புகள் கிட்டாமல் போவதும் உண்டு. அப்போதெல்லாம் மனம் தளராமல் மால்விகா ஐயர் போன்றவர்களின் தன்னம்பிக்கை கதைகளைப் படித்து விடாமுயற்சியுடன் விட்டதைப் பிடிக்க முனைந்தால் தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகி வெற்றி தேடிவரும்.