
தரமான நல்ல நட்புகள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதுடன் நம் மன ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். சிறந்த நண்பர்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைத் தருவதுடன், நம்மை நேசிக்கவும் செய்வதால் நம் மன ஆரோக்கியத்திற்கும், சமூக நல்வாழ்விற்கும் அவசியமானதாக உள்ளது. நம் மீது அக்கறை காட்டும் நண்பர்கள் அமைவது சிறந்த வரமாகும். நட்புக்கும், நம்மை நேசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது ஒரு நல்ல சிறந்த நண்பரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நண்பர்களையும் நம்மை மிகவும் நேசிப்பவர்களையும் தக்க வைத்துக் கொள்ள அவர்களுடைய தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவசியம் அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதும், நேர்மையாக இருப்பதும் உறவை வலுவாக்க உதவும். பொதுவான விஷயங்களில் ஒருவருக்கொருவர் என்ன செய்கிறார்கள், என்னை நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி தெரிந்து கொள்வதும் அவசியம்.
நண்பர்கள் மற்றும் நம்மை நேசிப்பவர்களிடம் சமயம் கிடைக்கும்போது தொடர்ந்து சந்தித்து மனம் திறந்து பேசலாம். நேரம் இல்லாது போனால் அவர்களுடன் whatsapp அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்கவும். நண்பர்களிடம் உண்மையாக இருப்பதும், மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வதும் (வெளிப்படைத் தன்மை) நட்புறவை வலுப்படுத்தும்.
நகைச்சுவைத் தன்மை, மன்னித்தல், மனம் திறந்து பேசுதல், உண்மையாக இருத்தல், மதிப்பும் மரியாதையும் அளித்தல் ஆகிய குணங்கள் நண்பர்களையும், நம்மை நேசிப்பவர்களையும் தக்க வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். நண்பர்களுடன் பேசுவது, அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வது, தேவைகளை அறிந்து கஷ்டப்படும்பொழுது உதவ முன்வருவது மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்றவை நட்புறவை வலுப்படுத்தும்.
நண்பர்கள் தவறு செய்யும்பொழுது இடித்துரைத்து நல்வழிப்படுத்துவதுடன், அவர்களை மன்னித்து மீண்டும் நட்பை வலுப்படுத்துவது சிறந்தது. உண்மையான நட்பு என்பது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளின் மூலம் நம்மைப் பின்தொடரும் ஒரு வகையான நிபந்தனையற்ற அன்பை உள்ளடக்கியது. இதில் நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியம். பிரச்னை என்று வரும்போது காது கொடுத்து கேட்பதும், ஆறுதலாக இருப்பதும், நம் உணர்வுகளை புரிந்துகொள்வதுமாக இருப்பார்கள்.
நண்பர்களையும் நம்மை நேசிப்பவர்களையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்போமா நண்பர்களே!