
மாறாமல் இருக்கும் அன்றைய கொள்கைகளை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலினை செய்வதே வெற்றி தரும் என்பதுதான் இன்றைய பதிவு. நம் தாத்தா காலத்து கொள்கைகள் இப்போது நமக்கு சரியாக வருமா யோசித்துப் பாருங்கள்.
அன்றைய நிதானமான போக்கு எங்கே? இன்றைய அவசரகால வாழ்க்கை எங்கே? அன்று இருந்த தகவல் தொடர்பு நுட்பங்களுக்கும் இன்று இருக்கக்கூடிய தகவல் தொடர்பு முன்னேற்றங்களுக்கும் மலைக்கும் நடுவுக்கும் இருக்கிற இருக்கும் வித்தியாசம்.
அன்று இருந்ததைப்போல் அன்பும் பாசமும் இன்று இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். இதே நிலைதான் எல்லா விஷயத்திலும். சமையல் முதல் அலுவல் வரை, ஆண் பெண் சுதந்திரம் முதல் குழந்தைகளின் வளர்ப்புவரை என இன்றைய காலகட்டத்தில் அநேக விஷயங்கள் மாறுதலுக்கு உட்பட்டு வளர்ச்சி முன்னேறி வருகிறது.
சரி பழையவற்றை மறுபரிசீலனை செய்வது நமது வெற்றிக்கு உதவுமா? பார்ப்போம்.
மற்றவர்கள் சொல்வதை ஏன் நமது எல்லைகளாகவும் குறிக்கோள்களாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்? 10 வருடங்களுக்கு முன்னால் இருந்த லட்சியங்கள் இன்று லட்சியங்களாக கருதப்படவில்லை. பழையதைக் கழியட்டும் புதியன புகட்டும் என்று ஒரு அமைதியான புரட்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
மறுபரிசீலனை என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை. அவரவர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாழ்க்கையின் குறிக்கோள்கள் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு சந்ததிக்கும் ஒவ்வொரு விதமான கல்வி மற்றும் சமூக வாய்ப்புகள் அமையப்பெறும்.
நமது முந்தைய சந்ததியின் ஆலோசனையை கேட்டும் நடக்கும்போது ஒருவிதமான அழுத்தத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். பழங்கருத்துக்கள் நல்லதொரு வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதுவே நமது கழுத்தைச் சுற்றிய பாம்பாக மாறி நமது வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடக்கூடாது.
பழமையான கருத்துக்கள் என்று மட்டுமல்ல நம்மை அறியாமல் நமது மனதில் கற்பித்துக்கொண்ட தோல்விகள், விவேகமற்ற வேகங்கள், அழுத்தங்கள், ஏமாற்றங்கள் இவைகளை பற்றி மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்து பாருங்கள். வெற்றியோ தோல்வியோ உங்களை மட்டுமே சார்ந்தது.
உளவியல் நிபுணர்கள் ஒரு விஷயத்தை கூறுவார்கள். கட்டாயம் இது செய்யப்பட வேண்டும் என்கிற அழுத்தம் நமது செயல்களை செய்யவிடாமல் தடுக்கக்கூடிய காரணிஆக மாறிவிடும் என்று. ஆம் மன அழுத்தம் இன்றி இதை செய்துதான் பார்ப்போம் என்று உங்கள் வழியில் நீங்கள் முயன்றால் மட்டுமே அது சந்தோஷமான வெற்றியை தருவதாக அமையும்.
வழி வழியாக பின்பற்றி வரும் கலாச்சாரங்களின் மூலத்தை ஆராய்ந்து மறுபரிசீலனை செய்து பாருங்கள். அது எந்த அளவுக்கு தற்போதைய வாழ்க்கையுடன் ஒத்து வருகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தாத்தா பாட்டி நீங்கள் வளர்ந்த பின் இதுதான் செய்தாக வேண்டும் என்று உங்களிடம் சொல்லிவிட்டு சென்றார்களா? இல்லையே? அவர்கள் காலத்தில் அது ஏற்புடையதாக இருந்ததால் மட்டுமே அவர்கள் அதை கடைபிடித்தார்கள்.
ஒரு உதாரணம் சொல்லலாம். அன்று நாம் பாட்டிமார்கள் விறகடுப்பில் பாத்திரத்தில் வைத்து அரிசியை வடித்தார்கள். இன்று இருக்கும் அவசர காலகட்டத்தில் விறகும் இல்லை. நேரமும் இல்லை. கேஸ் அடுப்பை பற்றவைத்தால் குக்கரில் நிமிஷத்தில் சாதம் ரெடி.
இதுதான். இதுபோன்ற பரிசீலனைகள்தான் நமது வாழ்க்கையில் வெற்றிக்கான அடித்தளம் என்பதை புரிந்துகொண்டால் வெற்றி பாதையில் பயணிக்கலாம். மறுபரிசீலனை செய்த மாறுதல்களை ஏற்று.