வெற்றிக்கு வழிகாட்டும் தோல்வியின் இலக்கணங்கள்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

"நம்முடைய பெருமை நாம் தடுக்கியே விழாமல் சென்று கொண்டிருப்பதில் இல்லை. தடுக்கி விழுந்த போதெல்லாம் அமைதியுடன் எழுந்திருந்து மீண்டும் உறுதியுடன் நம் பணியை செய்து கொண்டே இருப்பதில்தான் இருக்கிறது"  தோல்வி குறித்து கோல்ட் ஸ்மித் (Goldsmith) என்ற அறிஞர் சொன்ன கருத்து இது.

தோல்வி என்பது கண்டிப்பாக வரவேற்கத்தக்கதுதான். அனைத்து முயற்சிகளிலும் அனைவருக்கும் வெற்றி கிடைத்துவிட்டால் அகம்பாவத்துடன் நடந்து அனைவரையும் அவமதிக்க ஆரம்பித்து விடுவார்கள். வெற்றிக்கு முன் வரும் தோல்விகளால்தான் வெற்றியின் மதிப்பு நமக்குப் புரிகிறது. "நான் ஏற்கனவே கண்ட தோல்விகள்தான் இப்போது நான் கண்டு வரும் வெற்றிகளுக்கு வழி வகுத்திருக்கின்றன" என்று பல வெற்றியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தோல்வி ஒருவனுக்கு திறமை இல்லை என்பதைக் காட்டுவதில்லை. வேறு ஒரு புதிய வழியை பின்பற்ற வேண்டும் என்று அது பல அனுபவங்களின் மூலம் எடுத்துக்காட்டுகிறது. தோல்வி  ஒருவன் தன் வாழ்க்கையை வீணாக கழித்து விட்டான் என்பதை காட்டுவதில்லை . மாறாக மீண்டும் அதே வேலையை உற்சாகத்துடன் துவங்க மேலும் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி தருகிறது. தோல்வியினால் ஒருவன் செய்து வரும் பணியை விட்டுவிட வேண்டியதில்லை. இன்னும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள ராணுவக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு இதுவரையில் நடந்த போர்களைப் பற்றி உயர் அதிகாரிகள் விளக்குவார்கள்.  ஒரு நாட்டிற்கு ஏன் வெற்றி கிடைத்தது. இன்னொரு நாட்டிற்கு ஏன் தோல்வி கிடைத்தது என்று அலசி ஆராய்வார்கள். தவறான போர் முறைகளை பின்பற்றும் நாடுகளுக்கு தோல்வி கிட்டுகிறது என்பதை அறிந்து ராணுவ வீரர்கள் தோல்வி கண்ட நாடுகள் கடைபிடித்த தவறான போர் முறைகளில் இருந்து நிறைய படிப்பினைகளை கற்றுக்கொண்டு அதே தவறுகளை தாங்கள் செய்யாமல் இருக்கும்படி எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

இதே போன்றுதான் வாழ்க்கையில் நமக்கு வரும் தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து கண்டறிந்து மீண்டும் அதே போன்ற தவறுகளை செய்யாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். முன்னேறத் துடிப்பவர்கள் மற்றவர்கள் செய்த தவறுகளில் இருந்து பல படிப்பினைகளை கற்றுக் கொள்வார்கள். ஆனால் வெற்றியை நோக்கி செல்ல விருப்பம் இல்லாதவர்கள் தான் கண்ட தோல்விகளுக்கு விதிதான் காரணம் என்றும் தன் கீழ் வேலை செய்து வேலை செய்து வருபவர்கள் தான் காரணம் என்று கூறி திசை திருப்ப முயன்று மேலும் மேலும் தோல்வியையே சந்திப்பார்கள்.

தோல்வி கண்டவுடன் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறான் என்பதிலிருந்தே அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சுலபமாக கணித்து விட முடியும். தோல்வி கண்ட உடன் சிலர் பயந்து  முடங்கி விடுவார்கள். சிலர் கலக்கத்தின் விளக்கப் பொருளாக காட்சி தருவார்கள். சிலர் பரிதாபத்தின் மொத்த உருவமாக நடமாடுவார்கள். இன்னும் சிலர் புதிய முயற்சிகள் செய்வதையே விட்டு விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பிரகாசமான எதிர்காலத்தை நிச்சயம் சந்திக்க முடியாது.

இதையெல்லாம் தவிர்த்து  தோல்விகள் தங்களுடைய திறமையை சோதிக்க கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பரிட்சைகள் என்று நினைத்து மிகவும் பாடுபட்டு உழைத்து தோல்விகளை வெற்றிகளாக மாற்றி காண்பிப்பார்கள் வெற்றியாளர்கள். தோல்விகளை சவால்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு தான் ஒளிமயமான எதிர்காலம் கிட்டும்.

தோல்வி தற்காலிகமானது.  புதிதாக ஒன்றை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்பதை எடுத்துக்காட்டுவதே தோல்வி. ஆம். தோல்விகளால் நம்மிடம் இருக்கும் குறைபாடுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
தேங்காய்ப்பூவின் ஆரோக்கிய மகத்துவம்!
Motivation image

வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்பவர்கள் அனைவரும் பல முறைகள் தோல்விகளை கட்டாயம் சந்திக்க வேண்டி இருக்கும். "எந்த முயற்சியும் செய்யாதவனுக்குதான் தோல்வி என்பது கிடையாது" என்று வாட்லி என்ற அறிஞர் கூறி இருக்கிறார்.

தோல்வியை சந்திக்காதவன் இதுவரையில் இந்த உலகத்தில் பிறந்ததே இல்லை. இனிமேலும் பிறக்கப் போவதில்லை. மேலும் செய்ய ஆரம்பித்திருக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதும் இல்லை.

உண்மையாக ஒருவன் பாடுபட்டு உழைத்த பின்னும் அவனுக்கு தோல்வி ஏற்பட்டால் அதில் வருத்தப் படுவதற்கும் அவமானப்படுவதற்கும் எதுவும் இல்லை என்பதை முதலில் மனதில் பதிய வைக்க வேண்டும். தோல்வியின் இலக்கணங்களான உழைப்பு, விடாமுயற்சியுடன்  தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள் போன்றவையே வெற்றிக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com