Handle attention carefully!
Attention imageImage credit-pixabay

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

Published on

ம்மைச் சுற்றி பல நூறு விஷயங்கள் நடக்கும்பொழுது எப்படி கவனம் செலுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாகத்தான் உள்ளது. எங்கு நம் கவனம் செல்கின்றதோ அங்கு சக்தி பாய்கிறது. கவனத்தை கவனத்தோடு கையாண்டால் வெற்றி நிச்சயம். நம்மில் பெரும்பாலானவர்கள் கவனம் இழக்க முக்கிய காரணம் சரியான திட்டமிடல் இல்லாததுதான். அதிக கவனம் அல்லது அதிக ஆற்றல் தேவைப்படும் வேலைகளை காலையில் செய்யக்கூடிய வகையில் திட்டமிடுவது செய்கின்ற செயலை எளிதாக்கும்.

இடைவிடாத கவனசிதறல்கள் நிறைந்த இன்றைய உலகில் நம் கவனத்தை ஆக்கப்பூர்வமான செயல்களில் செலுத்துவது மிகவும் அவசியம். வெற்றிக்கான சாத்தியக் கூறுகளில் நம் கவனத்தை கவனத்தோடு செலுத்துவது சிறந்தது. நம் எண்ணங்கள் அனைத்தையும் நாம் செய்கின்ற செயல்களில் ஒருமுகப்படுத்த நாம் செய்ய நினைக்கும் காரியம் எளிதில் முடியும்.

நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவதும், முடியாதவற்றில் சக்தியை வீணாக்கு வதையும் தவிர்த்தல் நல்லது. புத்திசாலித்தனத்தை விட கவனம் முக்கியம். கவனம் எங்கு செல்கிறதோ அங்கு ஆற்றல் பாய்கிறது. நம் கண் முன் ஒரு பிரச்னை தோன்றினால் நம் கவனத்தை அந்தப் பிரச்சனையில் செலுத்தி அதற்கான தீர்வில் கவனம் செலுத்த பிரச்னையை எளிதில் சரி செய்யலாம்.

கவனம் செலுத்தி ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்து முடிப்பது, அடுத்த வேலைக்கு செல்வதற்கு முன், நம் வேலையை அணுகுவதற்கான மிகச் சிறந்த வழியாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது அந்த வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், மனஅழுத்தம் இன்றியும் செய்து முடிக்க உதவுகிறது.

பல்வேறு காரணங்களால் நம்மால் ஒரு வேலையில் கவனம் செலுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. தொலைக்காட்சி, செல்போன்கள், சமூக ஊடகங்கள் என அனைத்தும் நம் கவனத்தை சிதறடிக்க செய்கிறது. பலர் நம்முடைய கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு கவனம் செலுத்த கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் விரும்பும் விஷயங்களில் நம் மனதை ஒருமுகப்படுத்தி முயற்சிக்க வெற்றிக்கான திறவுகோல் புலப்படும்.

இதையும் படியுங்கள்:
வாகனங்களை முந்தாதீர். வாழ்க்கையில் முந்துங்கள்!
Handle attention carefully!

கவனச்சிதறல்களை தவிர்த்து ஒரு செயலில் நாம் முழு கவனம் செலுத்தும்போது அந்த செயலை மிகவும் விரைவாக முடிக்க முடிகிறது. கணினியை விட நம் மூளை மிகவும் சக்தி வாய்ந்தது. அற்புதமான செயலாக்க சக்தியைக் கொண்டுள்ளது.

கவனத்தை கவனத்தோடு கையாண்டால் நாம் செய்யும் செயல் உயர் தரத்தில் இருப்பதுடன் மன அழுத்தம் குறைந்து செயல் திறனும் அதிகரிக்கும். விருப்பமான இசையை கேட்பது நம் செயல்திறனை மேம்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கவனத்தை மேம்படுத்துவதுடன் கவனச் சிதறல்களை தடுக்கிறது. மேலும்  கடினமான பணியைக் கூட மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் சுவாசிப்பதில் கவனம் செலுத்துவது நம் மனதை சீர்படுத்தி மன அழுத்தத்தையும், மனக்குழப்பத்தையும் நீக்குகிறது. இதனால் கவனச் சிதறல்கள் குறைந்து கவனம் செலுத்தும் திறன் மேம்படுகிறது.

ஒன்றின் மேல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் கவனம் தானாக வந்துவிடும். தேவையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் எண்ணம் அதை சுற்றியே இருக்கும். முயற்சியுடன் பயிற்சி செய்ய கவனம் ஏற்பட்டு வெற்றி கிடைக்கும்.

கவனத்தை கவனத்தோடு கையாள வாழ்த்துக்கள்!

logo
Kalki Online
kalkionline.com