பொய் வதந்திகளைப் புன்னகையால் வீழ்த்துங்கள்: மனநிம்மதியைக் காக்கும் எளிய வழிகள்!

உங்களைப் பற்றி வதந்தி பரப்புபவர்களை எப்படி எதிர்கொள்வது? வெற்றியால் பதிலடி கொடுப்பது எப்படி?
பொய் வதந்திகள்
பொய் வதந்திகள்AI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பொய் வதந்தி மற்றும் புறம்பேச்சு மனித உறவுகளை உடைத்து நம்பிக்கையை சிதைக்கும் தீய செயல்கள். நம் மீது வீண்பழி சுமத்தினால் சிரித்தபடி கடந்து செல்லவும், உண்மை குற்றம் இருந்தால் திருத்திக் கொள்ளவும் வேண்டும். வதந்திகளைப் பொருட்படுத்தாமல் நம் இலட்சியத்தில் கவனம் செலுத்துவது, தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுப்பது, நம் நற்பெயரையும் மனநிம்மதியையும் காக்கும் வழியாகும்.

உங்களை நேரடியாக எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் எப்பொழுதுமே புறம் பேசுவதையும், பொய் வதந்திகளை பரப்புவதையுமே தங்களுடைய பலவீனமான ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் உடனடியாக பதில் அளித்து நம் சக்தியை வீணடிக்க வேண்டாம். நமது நல்ல செயல்களும் வெற்றியும் மட்டுமே பொய்களைத் தகர்க்கும் சிறந்த பதிலாகும். தேவையற்ற பேச்சுக்களைக் கண்டுகொள்ளாமல் நம் இலட்சியத்தில் கவனத்தை செலுத்துவதே சிறப்பு.

தைரியமும் திறமையும் இல்லாதவர்கள்தான் தங்களுடைய இயலாமையை மறைக்கப் பயன்படுத்தும் தற்காப்பு உத்தி இது. நம் வளர்ச்சி, வெற்றி அல்லது நற்பெயரைக் கண்டு பொறாமைப்படுபவர்கள் பெரும்பாலும் வதந்திகளை பரப்புகிறார்கள்.

தங்களின் பலத்தால் நம்மை வீழ்த்த முடியாதவர்கள் நம் மீது களங்கம் கற்பித்து வெற்றிபெற முயற்சிப்பார்கள். இந்தக் கோழைத்தனமான செயலைக் கண்டு முடங்கி விட வேண்டிய அவசியம் இல்லை. பொய்கள் காலப்போக்கில் தாமாகவே அழிந்துவிடும். எனவே நம் நல்ல செயல்களால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கலாம்.

பொய் வதந்திகள் என்பவை உண்மைக்கு மாறான தகவல்களாகும். இவற்றை பரப்புவதன் மூலம் நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை பிறரிடம் ஏற்படுத்த முயற்சி செய்வது, நம் மீது களங்கம் விளைவிக்கும் முயற்சியாகும். நம்மைப் பற்றி தவறாக பேசும் பொழுது அது உண்மை என்றால் தவறுகளை திருத்திக் கொள்ளலாம். வீண்பழி என்று தெரிந்துவிட்டால் சிரித்தபடி அவற்றைக் கடந்து செல்லப் பழக வேண்டும். பொய் வதந்திகள் மற்றும் புறம் பேசுதல், நட்பு மற்றும் குடும்ப உறவுகளை உடைத்து நம்பிக்கையற்ற தன்மையை உருவாக்கும்.

பொய் வதந்திகள்
பொய் வதந்திகள்AI image

நேரடியாக எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் பொய் வதந்திகளை பரப்புவது கோழைத்தனத்தின் வெளிப்பாடு மற்றும் பலவீனமான மனநிலையின் அறிகுறியாகும். இதன் நோக்கம் எதிராளியின் பெயரைக் கெடுப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பை குறைக்கும்படி செய்வதுதான்.

இதற்கான தீர்வு என்று பார்த்தால் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்வதும், எதிர்வினை ஆற்றாமல் இருப்பதும், நம்முடைய செயல்களை நாம் சரியாக செய்வதும், உண்மையை நிலை நிறுத்துவதும் ஆகும்.

இதேபோல் தான் புறம் பேசுவதும். ஒரு நபர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி குறையாகவோ, தீயதாகவோ அல்லது பழி சுமத்தியோ பேசுவது மனித உறவுகளைப் பிரிக்கும் ஒரு தீய செயலாகும். இதனால் மக்களிடையே உள்ள ஒற்றுமையும் அன்பும் குறையும். மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது நம் மனதை நாமே கெடுத்துக் கொள்ளும் செயலாகும்.

அனைத்துச் சமூக மற்றும் ஆன்மீக நெறிகளிலும் இது கண்டிக்கப்பட்ட ஒரு மாபெரும் குற்றமாகத் தான் கருதப்படுகிறது. மற்றவர்களின் குறைகளைப் பரப்புவதை விட நம் குறைகளைப் பார்ப்பது நல்லது. அப்படிப்பட்ட பேச்சுக்கள் நடக்கும்பொழுது அந்த இடத்தைவிட்டு விலகுவது அல்லது பேச்சை மாற்றுவது நல்லது. இல்லையெனில் இத்தகைய செயல் மனிதர்களிடையே நம்பிக்கையை சிதைப்பதுடன், தேவையற்ற பகையும் மனக்கசப்புகளும் மட்டுமே வளரும்.

இதையும் படியுங்கள்:
சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!
பொய் வதந்திகள்

ஒருவரைப் பற்றி அவதூறாக பேசுவதும், பொய் வதந்திகளை பரப்புவதும், புறம் பேசுவதும் செய்வதால் ஒருவருக்கு நேர்மறையான பலன்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. மாறாக பொய் வதந்தி பேசுபவர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும். மன நிம்மதியை போக்கிவிடும். புறம் பேசுபவர்களையும் பொய் வதந்தி பரப்புபவர்களின் பேச்சையும் யாரும் நம்ப மாட்டார்கள். சமூகத்திலும் இவர்களைப் பற்றிய நல்ல பெயர் கெட்டு மரியாதையை இழக்க வேண்டி வரும்.

இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புபவர்கள் நம் கோபமான எதிர்வினையை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அதை நாம் அமைதியாகக் கடந்து செல்லும் போது, அது அந்த வதந்தியின் வீச்சைக் குறைத்து விடும். அதுவே வதந்தி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினால், எளிய மற்றும் தெளிவான உண்மையை மட்டும் சம்பந்தப் பட்டவர்களிடம் விளக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சோஷியல் மீடியா நிறுவனங்கள் உங்க மனச எப்படி ஹேக் பண்றாங்க தெரியுமா?
பொய் வதந்திகள்

சிறிய மற்றும் அர்த்தமற்ற வதந்திகளை பொருட்படுத்தாமல் கடந்து செல்வது, அது மேலும் பரவுவதைத் தடுக்கும். வதந்திகளால் நமக்கோ அல்லது நம் நற்பெயருக்கோ தீவிரமான பாதிப்பு ஏற்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்க வேண்டாம்.

இந்த எளிய மனவலியின் உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தேவையில்லாத வதந்திகளிலிருந்து விலகி எவ்வித மன உளைச்சலுமின்றி உங்கள் இலட்சியங்களை முழு கவனத்துடன் அடைந்து நிலையான நிம்மதியைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com