ஓவரா சீன் போடுபவரை எப்படி எதிர்கொள்வது?

பிறர் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதைவிட நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம், நம்மை எப்படி மெருகேற்றிக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
Self Confidence
Self ConfidenceAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமான நபர்களை நாம் வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும். சிலர் வார்த்தையால் கூட எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் நம்மைப் பார்வையாலேயே ஏளனமாக பார்ப்பார்கள். இவர்கள் தான் நம் மனதை அதிகம் புண்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவகை தான் தன்னைத் தானே பெரிய ஆளாக நினைத்து நடந்து கொள்பவர்கள். தனக்குத் தானே பெருமை பேசிக் கொள்வதும், தன் திறமைகளை அல்லது நிலையை மிகைப்படுத்தி நினைப்பதும், தன் நலன்களை மட்டுமே பெரிதாகக் கருதுவதும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட எண்ணம் தான். இது பொதுவாக அகங்காரம் அல்லது தற்பெருமை என்று அழைக்கப்படுகிறது.

மேலும் நம்மிடம் தாழ்வான எண்ணங்களும், நடத்தைகளும் இருந்தால் கூட பிறர் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள். அப்படி இல்லையெனில் பிறர் தன்னை உயர்வாக நினைப்பது அவருடைய அறியாமை தான். எனவே இவர்களிடம் இருந்து நாம் ஒதுங்கி விடுவது தான் நல்லது. நாம் சரியாக நடந்து கொண்டால் யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்ததாக செல்வம் படைத்தவர்கள். அதாவது சிறிது வசதி படைத்தவர்கள், மிடில் கிளாஸ் மனிதர்களை ஏளனமாக பார்ப்பதும், ஏதோ உலகத்தில் தான் மட்டும்தான் நம்பர் ஒன் பணக்காரர் மாதிரி ஓவராக சீன் போடுவதும் உண்டு. நாம் வசதியாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவது ஒரு நோய். வசதியான வாழ்க்கையை விட மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதே முக்கியம் என்பதை சிலர் மறந்து விடுகிறார்கள். மற்றவர்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன? அவரவர் எண்ணங்கள் அவரவர் மனது போல என்றெண்ணி ஒதுங்கி விடுவது தான் சிறப்பு.

இன்னும் சிலர் நம்மிடம் இல்லாத ஒன்று அவர்களிடம் இருப்பதாக நினைப்பதும், தன்னை ஒரு பெரிய அறிவு ஜீவியாக கருதிக்கொண்டு நமக்கு ஒன்றும் தெரியாது என்றெண்ணி மட்டம் தட்டுவதும், ஏளனமாக பார்ப்பதும், தாழ்த்தி பேசுவதுமாக இருப்பார்கள். பிறர் நம்முடைய குறைபாடுகளை அல்லது பலவீனங்களைத் தெரிந்து கொண்டு அதைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்யலாம். எத்தனை முயன்றும் நம்மால் அடைய முடியாததை, முயற்சியே செய்யாமல் தான் அடைந்ததால் ஏற்படும் கர்வம் காரணமாகக் கூட இப்படிப்பட்டவர்கள் நம்மை ஏளனமாக பார்க்கலாம். இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை.

இதையும் படியுங்கள்:
'Mirror Of The Beast' தத்துவம்: உள்மன மிருகத்தை வெல்லும் வித்தை!
Self Confidence

இப்படி ஒவ்வொருவருமே பலதரப்பட்ட மனிதர்களை தினம் தினம், விதவிதமான சூழ்நிலைகளில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நம்மைப் பார்த்து ஏளனமாக பேசுவதோ, சிரிப்பதோ செய்பவர்களை எப்படி எதிர்கொள்வது?

முதல் வேலையாக மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம். அல்லது அங்கேயே இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் பேச்சை மாற்ற முயற்சிக்கலாம். எதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால் அவர்களையும், அவர்கள் பேச்சையும் புறக்கணித்து, அலட்சியப்படுத்தலாம். முக்கியமாக நம்மை ஏளனமாகப் பேசுபவர்களின் முன் நன்றாக வாழ்ந்து காட்டி, அவர்கள் தங்களின் செயலுக்காக வருந்தும்படி செய்யலாம்.

மனித வாழ்வில் பிறர் மனம் புண்படும்படி யாரையும் பார்த்து ஏளனம் செய்ய வேண்டாமே! மனிதரை மனிதராக மட்டும் பாவித்தால் எந்த துன்பமும் வராது அல்லவா? எது எப்படி இருந்தாலும், பிறர் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதைவிட நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம், நம்மை எப்படி மெருகேற்றிக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நம்முடைய பலம் மற்றும் பலவீனங்களை உணர்ந்து, நம் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். ஏளனம் செய்பவர்களைப் பொருட்படுத்தாமல் நாம் நம் போக்கில் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

என்ன நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே?

logo
Kalki Online
kalkionline.com