Motivation image
Motivation imageImage credit - pixabay.com

மாறும் சூழலை உணர்ந்தால் மகிழ்ச்சி மலரும்!

சே, என்னதான் மனிதர்களோ? ஒவ்வொரு தடவை ஒரு முகம் காட்டறாங்களே. மற்றவர்களைப் பற்றிப் புலம்புகிறீர்களா. அதுசரி நீங்கள் யார் என்று ஒரு முறை கேட்டுப்பாருங்கள். உங்கள் பெயர் பணி இதர தகுதிகள் எல்லாம் உங்களுக்கான அடையாளங்களே  தவிர அவை உங்களுடையதாக மட்டுமே இருப்பவை அல்ல.

பெயர் புகழ் பாராட்டு வேண்டுமென  ஒரு கட்டத்தில் நாடும். ஒரு நிறைந்த சபையில்  தனக்காக யாராவது இருக்கிறாராகளா என்று  அன்பைத்தேடி வாடும். இதற்கெல்லாம் காரணம் சூழ்நிலை மாறும்போதெல்லாம் அதற்கேற்ப உங்களையும் மாற்றிக் கொள்கிறீர்கள்.

ஒரு நாள் இளைஞன் ஒருவன் தன் பாட்டியிடம், "எல்லோரும் வெளிவேஷம் போடறாங்க. ஓரு நேரம் சிரிச்சுப் பேசுறாங்க.  பல சமயம் கிண்டல் அடிக்கிறாங்க. மற்றவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது" என்றான்.

உடனே அவள் நீ சொல்றதெல்லாம் எனக்குப் புரியுது. நீ முதலில் சாப்பிடு என்று கூறினாள். இளைஞன் ஆசையோடு ஒரு பாத்திரத்தை திறக்க அதில் வெறும் அரிசி இருந்தது. இன்னொரு பாத்திரத்தைப் திறக்க அதில்  காய்கறி மசாலா உப்பு பூண்டு என பிரியாணிக்கான பொருட்கள் இருந்தன.

அவன் கோபத்துடன், "என்ன பாட்டி இது" என்றான். கோபப்படாதே பிரியாணியில்  இருக்கும் எல்லா பொருட்களும்தான் இதில் உள்ளதே.தனித்தனியாக சாப்பிட வேண்டியதுதானே என்றாள் பாட்டி.அது சரி இவற்றையெலலாம் சேர்த்து சமைத்தால்தானே பிரியாணியாகும் என்று கத்தினான் இளைஞன். 

இதையும் படியுங்கள்:
பெண்கள் தாய்மைப்பேறு அடைய வயது வரம்பு உண்டா?
Motivation image

அதற்குப் பாட்டி, "மாறுபட்ட குணம் மணம் உள்ள இந்த பொருட்கள் ஒன்று சேர்த்து சமைத்தால்தான்  பிரியாணி வரும் என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் பல்வேறு குணங்களும்  ஒன்று சேர்ந்து இருப்பவன்தான்  மனிதன் என்பது உனக்கும் புரியவில்லையே என்றாள். சட்டென்று அவனுக்கு ஏதோ பொறி தட்டியது. மற்றவர்களைப் பற்றிய அபிப்ராயம் உடனே மாறியது.  மன அழுத்தம் குறைந்த அவனுக்கு வேறு பாத்திரத்தில்  வைத்திருந்த பிரியாணியை பாட்டி எடுத்துக் கொடுத்தாள். இந்தக் கதை சொல்லும் நீதி இதுதான்.

எல்லாவித குணங்களும் சேர்ந்தவர்கள்தான் மனிதர்கள். அவர்களை ஒவ்வொரு குணமாக அலசிப் பார்ப்பதும் தான் எதிர்பார்க்கும்  ஏதாவது ஒரு குணத்தால் அடையாளப்படுத்த முயல்வதும்தான்  மகிழ்ச்சியை மறக்கடிக்கிறது. ஒருவருடைய செயல் அவர்களைப் பற்றிய கணிப்பு எல்லாம் ஒருபோதும் நிலையாக இருக்க முடியாது. உடல்நிலை மனநிலை சூழலுக்கேற்ப  மாறிக் கொண்டேதான் இருக்கும். இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி நிலைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com