பெரும்பாலும் நாம் அனைவரும் உடல் நலத்திற்கு கொடுக்கும் கவனத்தை மனநலத்திற்கு கொடுப்பதில்லை. உடல் நலத்தின் அடித்தளம் மனநலம் என்பதை நாம் கருத்தில் கொண்டு நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் வாழ்வில் பெரும்பாலான நேரங்களை நம்மால் பயனுள்ளதாக மகிழ்ச்சியாக கழிக்க முடியும். நம்முடைய வாழ்வை நகர்த்திச் செல்லும் அத்தகைய செயல்களை நாம் தேர்ந்தெடுப்பதற்கு அதைப் பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் மனநலம் பற்றிய ஒரு விவாத நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அதில் மனநலம் குறித்த பல்வேறு கருத்துக்களை அனைவரும் பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய மனநல மருத்துவர் வாழ்க்கையைப் பற்றி இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்தார். வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல் மிகவும் இன்பமயமானது அல்ல. அது ஒவ்வொரு நிமிடமும் நம்மை எதிர்நீச்சல் போட வைப்பது. சோகம், துன்பம், கவலை, பிரச்சனை இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்பதே அவர் கொடுத்த விளக்கம். இன்று நாமும் பல்வேறு துன்ப பாதைகளுக்கு நடுவே தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலையிலும் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு பிடித்த செயல்களை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான செயல்களில் ஈடுபாடு இருந்திருக்கும். கற்பனைக் கதவுகளை திறந்துவிட்டு உற்சாகமாய் நடைபோட்ட பயணம் அது. யாருக்கு தெரியும் எத்தனை பேர் பள்ளி, கல்லூரி காலங்களில் ராஜாக்களாகவும் ராணிகளாகவும் வலம் வந்தீர்கள் என்று! இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் உயிர் கொடுப்பதுதான். இந்த வாழ்க்கை இவ்வளவுதான், திருமணம் முடிந்து விட்டது, குழந்தைகள் வந்து விட்டார்கள் இனி நாம் வாழ்வதற்கு என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று ஒரு நாளும் நினைக்க வேண்டாம்! நிச்சயம் உங்களாலும் உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களுக்கு பிடித்த செயல்களை மீண்டும் செய்யத் தொடங்குவது தான்.
இன்றைய காலகட்டங்களில் நாம் நம்முடைய வாழ்க்கை பாதையில் இருந்து வெகு தொலைவு கூட கடந்து வந்திருப்போம்! அதற்காக வருத்தப்படவோ கலக்கமடையவோ அவசியம் இல்லை! ஏனெனில் வாழ்க்கையில் ஏற்படும் சில திருப்புமுனைகள் தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றி விடுகிறன்றன. எனவே இத்தகைய காலகட்டங்களில் நீங்கள் துறக்க வேண்டியது எல்லாம் சோம்பேறித்தனம் ஒன்றைத்தான்! நம்மால் முடியாது என்ற ஒரு காரியம் பெரும்பாலும் இருக்கப் போவதில்லை! ஆழமாக உட்கார்ந்து சிந்தித்துப் பாருங்கள்! கல்லூரி காலங்களில் எத்தனை கனவுகளுக்கு உயிர் கொடுத்திருப்போம்! எத்தனை முறை கதாநாயகர்களைப் போல் ஜொலித்திருப்போம்! அதற்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? அன்றைய காலகட்டங்களில் உங்களுக்கு ஏதோ ஒரு செயல்பாடு மீது இருந்த அதீத ஆர்வமும் ஆளுமையும் தான் நிச்சயம் காரணமாக இருக்க முடியும். எனவே இன்றைய காலகட்டத்தில் நீங்கள் மீண்டும் தூசு தட்ட வேண்டியது அந்த ஆர்வத்தையும் ஆளுமையையும் தான்.
மகிழ்ச்சி என்பது நமக்குள் உள்ளூர சுரக்கப்படும் ஒரு அமிர்தம் போன்றது. தேவைகள் ஏற்படும் போது நம்மால் அதனை நிச்சயம் சுரக்க வைக்க முடியும். ஆனால் என்ன, அதுக்காக நிறைய மெனக்கிட வேண்டி இருக்கும். மனதை குழந்தை போல் மாற்ற வேண்டியது இருக்கும், பிடித்த விஷயங்களை தேடி அலைய வேண்டியது இருக்கும், சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து, அதிகப்படியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இதையெல்லாம் செய்யும் போது நமக்கு பிடித்த செயல்பாடுகளை நம்மால் நிச்சயம் செய்ய முடியும்.
திருமணம் முடிந்து ஒன்று, இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவோ தந்தையாகவோ இருக்கும் இன்றைய காலகட்டங்களிலும் கூட நிச்சயம் உங்களால் கல்லூரி காலங்களில் உலா வந்த ஆளுமைகளைப் போல் வெற்றிகரமாக, உற்சாகமாக உலா வர முடியும். அப்படி மீண்டும் வெற்றி நடை போடுவது தான் வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பமே! எப்படிப் பார்த்தாலும் இந்த வாழ்க்கை நெருக்கடியானது தான். இதனை சரி செய்வதற்கு மிகப்பெரிய போராட்டங்களும் செயல்பாடுகளும் தேவைப்படுகிறது. ஆனால் அதுவரை கஷ்டம் ஒன்றை மட்டுமே கண்களுக்கு பரிசளிக்க முடியாது அல்லவா! எனவே நிச்சயம் காட்சிகளையும், காரியங்களையும் மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.
நமக்கு பிடித்த ஒரு செயலை செய்யும் போது கிடைக்கும் உற்சாகத்தையும், நமக்குள் அதிகரிக்கப்படும் தன்னம்பிக்கையையும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அதை எல்லாம் அனுபவித்தால் தான் தெரியும். எனவே எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் உங்களை நீங்களே ரசித்து, உங்களை நீங்களே தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியுடன் வாழ பழகுங்கள். இன்றைய காலகட்டங்களில் நமக்கு பிடித்த ஒரு செயலைக்கூட தொடங்குவது எளிது. ஆனால் அதனை தொடர்ச்சியாக செய்வது மிகவும் கடினம். எனவே நீங்கள் மீண்டும் தொடங்கும் இந்த செயல்பாடுகள் சமநிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, நிறையவே ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இருந்தாலும் அதன் மகிழ்ச்சியை ருசிக்கும் போது நிச்சயம் உங்களால் அதன் ருசியை விட்டு வெகு தூரம் சென்று விட முடியாது. எனவே முடிந்தவரை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழ முயற்சி செய்யுங்கள்!