

சொர்க்கத்தில் வாழவேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கிறது. நாம் இருக்கும் இடத்தை நம்மால் சொர்க்கமாகவும் நரகமாகவும் ஆக்கிக்கொள்ள முடியும். இடங்களில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. நாம் பார்க்கும் பார்வையில்தான் மாற்றம் ஏற்பட வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் மோட்சத்தை பற்றி குறிப்பிடும்போது "அது உனக்குள்ளேயே இருக்கிறது" என்றார்.
முகலாயப் பேரரசர் ஷாஜகானுக்கு ஒரு நாள் திடீரென சந்தேகம் ஏற்பட்டது .எவ்வளவோ வசதிகளோடு இன்பங்கள் தன்னை சூழ்ந்து இருந்தாலும் ,தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என வருத்தப்பட்டார் .மகிழ்ச்சி எங்கிருந்து கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? என தன் அரண்மனையில் உள்ள ஆசான்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள் என பலரையும் கேள்வி கேட்டார் .ஒவ்வொருவரும் ஒரு பதிலை கூறினார்கள்.எந்த பதிலும் அவருக்கு திருப்தி அளிக்காததால் கேள்வி மட்டுமே அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் உப்பரிகையில் அவர் உலாவி கொண்டிருந்தபோது இனிமையான பாடல் ஒன்று அவர் காதுகளில் கேட்க ,அந்தப் பாடலினால் கவரப்பட்ட மன்னர் ஷாஜகான் அந்தப் பாடகனை அழைத்து வர தன் சேவகர்களை அனுப்பி வைக்கிறான்.
சேவகர்கள் திரும்பி வந்து யாரோ ஒரு பிச்சைக்காரன் அந்த பாடலை பாடிக்கொண்டு செல்வதாகவும் அரண்மனைக்குள் வர மறுப்பதாகவும் வந்து கூறினார்கள். சக்கரவர்த்தி அழைத்தும் வர மறுத்த பிச்சைக்காரனை காணவேண்டும் என்ற ஆவல் காரணமாக ஷாஜகான் பலவந்தமாக அவனை கூட்டிவர சொல்கிறார்.
பிச்சைக்காரன் அழைத்து வரப்படுகிறான். ஷாஜகான் அவனைப் பார்த்து, "நீ இனிமையாக பாடுவதில் இருந்து கவலையே இல்லாத மனிதனாக இருக்க வேண்டுமென நான் கருதினேன். உன்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு உன்னை அழைத்து வரச் சொன்னேன்" என்றார்.
பிச்சைக்காரனும் சக்கரவர்த்தியை பார்த்து," நீங்களும் என்னைப்போல் மகிழ்ச்சியாக இருக்க பிச்சைக்காரனாகி விடுங்கள்" என்றான்.இதை கேட்ட மன்னருக்கு கோபம் வந்து பிச்சைக்காரனை தாறுமாறாக ஏசுகிறான்.
பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டே," நீங்கள் பெரிய மன்னராக இருக்கலாம்.ஆனால் உங்களுக்கு மிகச் சிறிய விஷயம் கூட புரியவில்லை.நீங்கள் தேடும் மகிழ்ச்சியை மற்றவர்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியாது. அதை உங்களிடமே நீங்கள் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறிவிட்டு மறுமொழிக்காக காத்திராமல் நடையைக் கட்டினான்.
இந்த சம்பவம் கதையாக இருந்தாலும் வாழ்க்கை உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்துகிறது. அவரவருக்கு அமைந்த வாழ்க்கையை நேசிக்க கற்றுக் கொண்டு விட்டால் மகிழ்ச்சி தானாகவே தேடி வரும். தேடி வரும் என்றால் வெளியில் இருந்து வருவதாக அர்த்தம் இல்லை. மகிழ்ச்சி உங்கள் உள்ளத்தில் தானாகவே சுரக்க ஆரம்பிக்கும். ஒவ்வொருவரும் முழுமையான அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமானால் வாழ்க்கையை ரசிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொள்வது அவசியமாகும்.
வாழ்க்கையை ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் பழக்கமும் பயிற்சியாக மாறி மகிழ்ச்சி ஊற்று பெருக்கெடுக்கும்.